விராட் கோலி - ரோஹித் ஷர்மா

ViratKohli: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் விராட் கோலி… என்ன காரணம்?

டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணி கேப்டன் பொறுப்புகளில் இருந்து விராட் கோலி விலக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ரோஹித் ஷர்மா கேப்டனாகப் பொறுப்பேற்க இருக்கிறார்.

விராட் கோலி

விராட் கோலி - ரோஹித் ஷர்மா
விராட் கோலி – ரோஹித் ஷர்மா

இந்திய அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி, கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து, டெஸ்ட் கேப்டன் பொறுப்பேற்ற கோலி, 2017-ம் ஆண்டுக்குப் பின்னர் மூன்றுவிதமான ஃபார்மேட்டுகளிலும் இந்திய அணியின் கேப்டனானார். இந்தநிலையில், வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை டி20 தொடருக்குப் பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேநேரம் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகத் தொடர விராட் கோலி விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

ரோஹித் ஷர்மா

விராட் கோலிக்குப் பதிலாக ரோஹித் ஷர்மா இந்திய அணியை ஒருநாள், டி20 போட்டிகளில் வழிநடத்துவார் என்று தெரிகிறது. கேப்டன்சியைப் பகிர்ந்துகொள்வது குறித்து இந்திய அணி நிர்வாகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆலோசனைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வரலாற்று வெற்றிக்குப் பின்னர் இதுபற்றிய பேச்சு வலுத்திருக்கிறது. ஆஸ்திரேலிய தொடரின் முதல் டெஸ்டுக்குப் பிறகு குழந்தை பிறப்புக்காக விராட் இந்தியா திரும்பினார். அப்போது, 0-1 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த இந்திய அணி, ரஹானே தலைமையில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று சரித்திரம் படைத்திருந்தது.

விராட் கோலி - ரோஹித் ஷர்மா
விராட் கோலி – ரோஹித் ஷர்மா

என்ன காரணம்?

அதேபோல், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மா தலைமையில் அந்த அணி 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றிருக்கிறது. கேப்டனாக களத்தில் அவரது செயல்பாடுகள் பாராட்டும்படியே இருந்து வந்திருக்கிறது. இதனால், டெஸ்டைத் தவிர்த்து மற்ற இரண்டு ஃபார்மேட்டுகளிலும் கேப்டன்சியை ரோஹித்திடம் ஒப்படைத்துவிட்டு தனது பேட்டிங்கில் விராட் கூடுதல் கவனம் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறார். 32 வயதான விராட், ஃபிட்னெஸ் விஷயத்தில் கவனமாக இருப்பதால், இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். 2017-2019 கால கட்டத்தில் தோனி அணியில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகத் தொடர்ந்த நிலையில், விராட் கோலி கேப்டனாகப் பொறுப்பு வகித்தார். அதேபோல், ஒரு பேட்ஸ்மேனாக ரோஹித் ஷர்மா தலைமையில் விராட் விளையாட இருக்கிறார். கேப்டன்சி அவரது பேட்டிங்கைப் பாதிக்கலாம் என்று கருதப்படும் நிலையில், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக இந்திய அணிக்குத் தனது பங்களிப்பை வழங்கவே விராட் கோலி இந்த முடிவை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். உலகக் கோப்பை டி20 தொடருக்குப் பிறகு அவரிடமிருந்தே இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.

Also Read – T20 World Cup: அஸ்வின் கம்பேக் நிகழ்ந்தது எப்படி… தோனியுடனான 90 நிமிட மீட்டிங்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top