ஓராண்டு தி.மு.க ஆட்சி: எதெல்லாம் ஹிட்… எதெல்லாம் மிஸ்…?!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. இந்த ஓராண்டு ஆட்சியில் தி.மு.க அரசின் பிளான்கள் எதெல்லாம் ஹிட் அடித்திருக்கின்றன… எதெல்லாம் மிஸ்ஸாகியிருக்கின்றன. இந்த ஓராண்டில் டாப் 10 விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறோம். அதெல்லாம் என்னென்னனு பார்க்கலாம் வாங்க.

கொரோனா கால செயல்பாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

தி.மு.க ஆட்சிப்பொறுப்பேற்றபோது கொரோனாவின் தாக்கம் கடுமையாகவே இருந்தது. இதனாலேயே, முதல்வர் ஸ்டாலின் கடந்தாண்டு ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் எளிமையான முறையில் பொறுப்பேற்றுக் கொண்டார். கடுமையான நிதிச் சுமையிலும் சுகாதாரத் துறையும் நிதித்துறையும் கைகோர்த்து சிறப்பாக செயல்பட்ட சூழலில், கொரோனா தொற்று பரவல் வேகம் குறையத் தொடங்கியது. அதேநேரம், கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 கொடுத்தது, மளிகைப் பொருட்கள் வழங்கியது போன்றவற்றை பரவலாகப் பாராட்டுப் பெற்றது. 

இது தி.மு.க அரசின் முதல் வெற்றியாகவே பார்க்கப்பட்டது. 

ரிசல்ட்: ஹிட்

ஸ்டாலின்

மகளிர் இலவச பேருந்து பயணம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் முதலில் கையெழுத்திட்ட கோப்புகளில் இது முக்கியமானது. உழைக்கும் மகளிர் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு நடுத்தர குடும்பத்துக்குப் பெண்களுக்குபேருதவியாக அமைந்தது. அத்தோடு, திருநங்கைகள் மற்றும் முத்த குடிமக்களுக்கும் இந்தத் திட்டம் பயனுள்ளதாக அமைந்தது. பொதுமக்கள் தி.மு.க அரசின் இந்தத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். 

ரிசல்ட்: ஹிட் 

முதல்வர் மு.க ஸ்டாலின்

ஆவின் பால் விலை குறைப்பு

தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடியே தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. இந்தத் திட்டம் கடந்த ஆண்டு மே 16-ம் தேதி அமலுக்கு வந்தநிலையில், முதல் இரண்டு மாதங்களில் 1.68 லட்சம்லிட்டர் என்கிற அளவில் ஆவின் பால் விற்பனையும் அதிகரித்தது. மக்களிடம் இதற்கு இருந்த வரவேற்புக்கு விற்பனை அதிகரிப்பு என்கிற புள்ளிவிவரமே சாட்சியாகும். 

ரிசல்ட்: ஹிட்

நீட் விலக்கு சட்ட மசோதா

நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறப்படும் என்ற வாக்குறுதியை தி.மு.கவால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இதற்காக சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாகவும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில், அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதில் ஆளுநர் தாமதம் செய்துவந்த நிலையில், அதற்கு பல்வேறு முயற்சிகளை தி.மு.க அரசு எடுத்தது. நாடாளுமன்றத்தில் ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்ற குரலைப் பதிவு செய்தது, ஆளுநரை முதலமைச்சர் ஸ்டாலினே நேரில் சந்தித்து வலியுறுத்தியது என பல்வேறு வழிகளிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு மே 4-ம் தேதி அனுப்பியதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். தி.மு.க. தரப்பில் பல முயற்சிகள் எடுத்தாலும், இது அவர்களைப் பொறுத்தவரை பின்னடைவுதான். 

ரிசல்ட்: மிஸ் 

இன்ஜினீயரிங் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு இருக்கும் நிலையில், இன்ஜினீயரிங் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இது உயர் கல்விபயில வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பெரும் ஊக்கம் கொடுத்தது என்றே சொல்லலாம். கல்வியாளர்கள் தரப்பிலும் வெகுவாகப் பாரப்பட்ட இந்த விஷயம் தி.மு.க அரசு பெருமிதப்பட வேண்டிய விஷயம்.

ரிசல்ட்: ஹிட்

இன்னுயிர் காப்போம் திட்டம் அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

தி.மு.க அரசின் முதலாண்டு ஆட்சிக் காலத்தில் இது இன்னுமொரு மைல்கல் சாதனை என்றே குறிப்பிடலாம். விபத்துகளில் சிக்குவோருக்கு முதல் 48 மணி உயிர்காக்கும் சிகிச்சையை அரசே, தமது செலவில் செய்யும் என்ற முதலமைச்சர்மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு விபத்துகளில் சிக்குவோருக்கு முக்கியமான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிற அரசின் அக்கறையை எடுத்துச் சொன்னது. இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது, விபத்து நடந்த இடத்துக்கு அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான செலவுகளை அரசே ஏற்றது. 

ரிசல்ட்: ஹிட் 

“இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டம்” :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Also Read : தமிழக அரசின் `இன்னுயிர் காப்போம் திட்டம்’ – முக்கிய அம்சங்கள் என்ன?

மகளிர் உரிமைத் தொகை

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்கிற தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கொரோனா கால நிதி நெருக்கடி, மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி, நிலுவைத் தொகைகள் சரியாக வராத நிலையில் நிதி நிலைமை சீராக இல்லை என்பதே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் இருக்கக் காரணம். விரைவில் நிதி நிலைமையைச் சீராக்கி, அறிவித்தபடியே இந்தத் திட்டமும்நிறைவேற்றப்படும் என்பதே தி.மு.க தரப்பில் அளிக்கப்படும் விளக்கம். இருப்பினும் பெரும்பான்மை மக்களைக் கவர்ந்த இந்த அறிவிப்பு, இன்னும் நிறைவேற்றப்படாததில் சம்மந்தப்பட்டவர்களுக்கு ஏமாற்றம் என்பதை மறுக்க முடியாது. 

ரிசல்ட்: மிஸ் 

இந்து சமய அறநிலையத் துறை செயல்பாடுகள் 

பொதுவாக தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி என்கிற கருத்து முன்வைக்கப்படுவதுண்டு. அதேபோல், ஒவ்வொரு ஆட்சியிலும் இந்து சமய அறநிலையத் துறை என்பது பெரும்பாலும் அதிகம் வெளியில் தெரியாத துறையாகவே இருக்கும். ஆனால், தி.மு.க அரசின் முதல் ஓராண்டு ஆட்சிக் காலத்தில் இந்த நிலை அப்படியே நேரெதிர் என்றே சொல்லலாம். 2021 மே முதல் 2022 மார்ச் வரையிலான காலகட்டத்தில் மட்டுமே 133 திருக்கோயில்களுக்கு சொந்தமான 720.83 ஏக்கர்நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருக்கிறது. அதேபோல், கோயில்களில் அன்னதானம், அர்ச்சகர்கள் நியமனம் எனப் பரவலாக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரிசல்ட்: ஹிட் 

முதலீடுகள்

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலீடுகளை ஈர்த்து, தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதேபோல், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக துபாய் சென்று முதலீட்டாளர்களைஊக்குவித்தார். முதல்வரின் துபாய் பயணத்தின் மூலம் மட்டுமே, 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், 14,700 புதிய வேலைவாப்புகள் உருவாக்கப்படும். கடந்த ஓராண்டில் மட்டும்69,375 லட்சம் கோடி மதிப்பிலான 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன.    

ரிசல்ட்: ஹிட் 

சட்டம் – ஒழுங்கு

தி.மு.க ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்பது எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டு. எல்லா ஆட்சிகளிலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றாலும், இந்த முறை லாக்-அப் மரணங்கள் என்று வெளியான செய்திகள் தி.மு.க, இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதை உணர்த்தியது. சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளை தி.மு.க அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலினே விளக்கம் கொடுத்திருக்கிறார். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், போலீஸ் துறை மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வருமென்றாலும், சாத்தான்குளம் சம்பவத்துக்குப் பின் இதுபோன்ற வன்முறைகள் மீது பொதுவெளியில் பெரும் வெறுப்பும் ஆத்திரமும் பரவியிருக்கிறது. எனவே, இனி இது போன்றதொரு சம்பவம் நடக்காமலிருக்க முதல்வர் கடுமை காட்ட வேண்டுமென்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

ரிசல்ட்: மிஸ் 

தி.மு.க அரசின் ஓராண்டு நிறைவைப் பற்றி பார்த்தால், தி.மு.க ஆதரவாளர்கள் என்றில்லாமல் நடுநிலையாளர்கள், ஏன் எதிர்முகாமில் இருப்பவர்களே பாசிட்டிவான கருத்துகளையே அதிகம் சொல்லக் கூடிய நிலை இருக்கிறது. 

தி.மு.க அரசின் ஓராண்டு ஆட்சிக் காலம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க.. கமெண்ட்ல சொல்லுங்க மக்களே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top