தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள், வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போடியில் களமிறங்கும் ஓ.பன்னீர்செல்வம், கொளத்தூரில் மூன்றாவது முறையாகப் போட்டிபோடும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அதேபோல், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், அ.தி.மு.க அமைச்சர்கள், தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வேட்பு மனுத் தாக்கலை முடித்துவிட்டு பிரசாரத்தில் இருக்கிறார்கள்.
சென்னை பழைய விமான நிலையம்
சென்னை விமான நிலையத்தை ஒட்டி அமைந்திருக்கும் பழைய விமான நிலையம் வி.வி.ஐ.பிக்கள் வந்து செல்லும் சிறப்பு விமானங்கள் தரையிறங்கும் பகுதி. டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து சென்னைக்குத் தனி விமானத்தில் வந்திறங்கும் குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது பழைய விமான நிலையம். வி.வி.ஐ.பி-க்கள் பயன்படுத்தும் பகுதி என்பதால் இந்தப் பகுதியில் பாதுகாப்பு கெடுபிடிகளும் அதிகம்.
தமிழகத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தனி விமானத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால், எப்போதும் வெறிச்சோடிக் காணப்படும் சென்னை பழைய விமான நிலையம் பிஸியாகியிருக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னைக்குத் தனி விமானத்தில் வரும் பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்டோர், இங்கிருந்து ஹெலிகாப்டரில் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்வார்கள்.
கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு தி.மு.க தலைவர் ஸ்டாலின், தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டுச் சென்றார். அதேபோல், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காஞ்சிபுரத்தில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் மீனம்பாக்கம் வந்தார். பின்னர் அங்கிருந்து வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக தனி விமானத்தில் கோவை புறப்பட்டுச் சென்றார். அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தால் தனி விமானங்கள், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் தனியார் நிறுவனங்களும் பிஸியாக இயங்கத் தொடங்கியிருக்கின்றன.
கட்டணம் எவ்வளவு?
தனி விமானங்களுக்கு இருக்கைகளுக்கு ஏற்றவாறு வாடகைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
[infogram id=”529393f4-5a96-4515-b70c-3b4f16f992c0″ prefix=”1Ck” format=”interactive” title=”Copy: Seeman”]
டீலக்ஸ் தனி விமானத்துக்கான வாடகை சாதாரண விமானத்தை விட சற்றே கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
[infogram id=”d95d221d-5e15-418e-8eed-8841d88fb44c” prefix=”cUm” format=”interactive” title=”Copy: Flight charge”]
5 இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டருக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.2,543 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்குத் தனியாக ஜி.எஸ்.டியுடன் கூடிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கட்டுப்பாடுகள் என்னென்ன?
பயணிகள் விமானத்தைப் போலவே அரசியல் கட்சித் தலைவர்கள் பயன்படுத்தும் தனி விமானங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
- தனி விமானங்களை முன்பதிவு செய்வோர் கொரோனா பரிசோதனை சான்றிதழ்களுடன், 48 மணி நேரத்துக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும்.
- பயணிகள் விமானங்களில் நடத்தப்படும் பாதுகாப்பு சோதனை உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்படும்.
- புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம்
தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் தனி விமானங்களில் செல்வோர், அவர்கள் எடுத்துச் செல்லும் பொருட்கள் குறித்து பறக்கும் படை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.