TN Assembly

TN Election 2021: 3,000 கையிருப்பு எம்.எல்.ஏ முதல் 10 அமைச்சர்கள் ஷாக் வரை… ரிசல்ட் சுவாரஸ்யங்கள்

தமிழகத்தில் 16வது சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாகக் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது. வாக்குகள் எண்ணப்பட்டு மே 2-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றது. பத்தாண்டுகளுக்குப் பிறகு தி.மு.க அரியணை ஏறவுள்ள நிலையில், ஸ்டாலின் முதல்முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கிறார். அண்ணா, கருணாநிதி ஆகிய இருவருக்குப் பிறகு தி.மு.கவில் இருந்து மூன்றாவது முதலமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

தமிழகத் தேர்தல் ரிசல்ட் சுவாரஸ்யங்கள்

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின் 70,230 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 1,04,622.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றிருக்கிறார்.

Stalin

சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, 90,255 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதேபோல், போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றிபெற்றார்*.

திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து, அ.தி.மு.க வேட்பாளர் சுரேஷ்குமாரை 30,058 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கூரை வீட்டில் வாழும் மாரிமுத்துவும் அவரது வீடும் தேர்தல் நேரத்தில் வைரலானது. வேட்புமனுவில், ரூ.3,000 கையிருப்பாகவும், ரூ.58,000 வங்கியில் இருப்பதாகவும் 3 பவுன் நகை மனைவிக்குச் சொந்தமானது என்று மாரிமுத்து குறிப்பிட்டிருந்தார். குடியிருக்கும் பூர்வீக சொத்தான வீடும் மனைவி ஜெயசுதா பெயரில் இருப்பதாகக் கூறியிருந்தார் அவர்.

OPS - EPS

அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த ஜெயக்குமார் (ராயபுரம்), பெஞ்சமின் (மதுரவாயல்), மா.பாண்டியராஜன் (ஆவடி), எம்.சி.சம்பத் (கடலூர்), சி.வி.சண்முகம் (விழுப்புரம்), சரோஜா (ராசிபுரம்), ராஜலட்சுமி (சங்கரன்கோவில்), வெல்லமண்டி நடராஜன் (திருச்சி கிழக்கு), கே.சி.வீரமணி (ஜோலார்பேட்டை), ராஜேந்திர பாலாஜி (ராஜபாளையம்) ஆகிய 10 அமைச்சர்கள் தோல்வியைச் சந்தித்தனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பின்னடைவைச் சந்தித்து வந்த தி.மு.க பொருளாளர் துரைமுருகன், காட்பாடி தொகுதியில் 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தார்.

தாராபுரத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனை வீழ்த்தி தி.மு.க வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் வெற்றி பெற்றார். அதேபோல், அரவக்குறிச்சியில் அண்ணாமலை, காரைக்குடியில் ஹெச்.ராஜா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போன்ற பா.ஜ.க வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர்.

Kamal - Vanathi

கோவை தெற்கு தொகுதியில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனை வீழ்த்தி பா.ஜ.க தேசிய மகளிரணிச் செயலாளர் வானதி சீனிவாசன் வெற்றிபெற்றார். அதேபோல், மொடக்குறிச்சி தொகுதியில் 281 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் சரஸ்வதி வெற்றிபெற்றார். மேலும், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி, திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் என 4 பா.ஜ.க வேட்பாளர்கள் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதன்மூலம் 2001ம் ஆண்டுக்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து பா.ஜ.க தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, 1,63,689 வாக்குகள் பெற்றார். இரண்டாவது இடம்பிடித்த பா.ம.க வேட்பாளர் திலகபாமா பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 29,607. இதன்மூலம் 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஐ.பெரியசாமி, தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதேபோல், ஐ.பெரியசாமியை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் அப்பாவு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏவான இன்பதுரையை 3,374 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த 2016 தேர்தலில் இன்பதுரை 45 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் உள்பட 203 வாக்குகள் எண்ணப்படவில்லை என கடந்த ஐந்தாண்டுகளாக உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திய அப்பாவுக்கு, இந்தத் தேர்தல் ரிசல்ட் வெற்றியைக் கொடுத்திருக்கிறது.

Premalatha

விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்ற நிலையில், பா.ம.க வேட்பாளர் இரண்டாவது இடம் பிடித்தார்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் தி.மு.க கைப்பற்றியது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மயிலாப்பூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் வெற்றிபெற்றிருக்கிறார். முன்னாள் டிஜிபியும் அ.தி.மு.க வேட்பாளருமான நட்ராஜனை வீழ்த்தி அங்கு தி.மு.க வேட்பாளர் வேலு வெற்றிவாகை சூடினார்.

பண்ருட்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேல்முருகன் 4,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மதுரை வடக்கு தொகுதியில் தி.மு.க வேட்பாளர் தளபதி 22,916 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தலுக்கு முன்னர் தி.மு.க-வில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்து போட்டியிட்ட சரவணன் தோல்வியடைந்தார்.

அ.தி.மு.க கூட்டணியில் பட்டுக்கோட்டை, திரு வி.க.நகர், லால்குடி, தூத்துக்குடி, ஈரோடு கிழக்கு, கிள்ளியூர் என ஆறு தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

TTV Dinakaran - Seemn

தங்களை மாற்று சக்தியாக முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் சீமான், மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் மற்றும் அம்மா முன்னேற்றக் கழகத்தில் டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் நீண்ட இழுபறிக்குப் பின் தோல்வியடைந்தார். அதேபோல், சென்னை திருவொற்றியூரில் சீமானும் கோவில்பட்டியில் டி.டி.வி.தினகரனும் தோல்வியைச் சந்தித்தனர்.

அ.தி.மு.க கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட ராமதாஸின் பா.ம.க, ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெற்றிபெற்றார்.

Also Read – தமிழகத்தில் 15 சட்டமன்றத் தேர்தல்களின் ரிசல்ட் – ஒரு பார்வை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top