அப்போலோ மருத்துவமனை

ஜெயலலிதா: `சிசிடிவி அகற்றம் ஏன்?’ – ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்போலோ வைத்த 3 வாதங்கள்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது முந்தைய அ.தி.மு.க அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

ஜெயலலிதா சிகிச்சை

ஜெயலலிதா
ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைபெற்ற நிலையில், அந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்போலோ மருத்துவமனை சார்பில் பல்வேறு முறை நேரில் ஆஜராகி ஆணையம் முன்னர் பல்வேறு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போலோ வழக்கு

இந்தநிலையில், ஆறுமுகசாமி ஆணையம் முன்பாக ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. அப்போது அப்போலோ மருத்துவமனை தரப்பில், `முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது அவருக்கு பிரைவசி வேண்டும் என அப்போதைய தமிழக அரசு கூறியதாலேயே அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்றினோம். ஒருதலைபட்சமாக நடந்துகொள்ளும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு விசாரணைக்காக இனிமேல் ஆஜராக முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆணையத்துக்கு எதிராக அப்போலோ தரப்பில் மூன்று விஷயங்கள் முன்வைக்கப்பட்டது. அதில், இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் ஏராளமானோர் இன்னும் விசாரிக்கப்படாமல் இருக்கிறார்கள். ஆனால், எங்கள் மருத்துவர்களையே திரும்பத் திரும்ப விசாரணைக்கு அழைக்கிறார்கள். ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது.

அப்போலோ மருத்துவமனை
அப்போலோ மருத்துவமனை

விசாரணை தொடர்பாக நாங்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை ஆணையம் தரப்பில் இருந்து ஊடகங்களில் கசிய விடுகின்றனர். இதனால், எங்கள் மருத்துவமனையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுகிறது. இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. அந்த உரிமையின் அடிப்படையில்தான் ஆணையத்தின் முன்பு இனிமேல் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்கிறோம். மருத்துவ வல்லுநர்கள் இடம்பெறாத இந்த ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உண்மையைக் கண்டறிய நடக்கும் விசாரணையாக இது தெரியவில்லை என்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

Also Read – அஜித் வீடியோ, ஜெயலலிதா வீடியோ… அப்போலோ சர்ச்சையின் பின்னணி என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top