அப்போலோவிலிருந்து இப்போது அஜித் வீடியோ சர்ச்சை. அஜித் வீடியோவில் என்ன இருக்கிறது?
நடிகர் அஜித்தை வீடியோ எடுத்ததால், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் பணிநீக்கம் செய்துவிட்டதாகச் சொல்கிறார் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பர்சானா. ஐந்தாண்டுகளாக மருத்துவர்கள் ஒருங்கிணைப்பாளராக சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றிய அவர், கடந்த 2020 மே மாதம் மருத்துவமனைக்கு வந்த அஜித்தை வீடியோ எடுத்திருக்கிறார். அந்த வீடியோ வைரலான நிலையில், அவர் வீடியோ எடுத்ததை சிசிடிவி மூலம் பார்த்த மருத்துவமனை நிர்வாகம் அவரை முதலில் பணியிடை நீக்கம் செய்ததாகவும் பின்னர் பணிநீக்கம் செய்ததாகவும் சொல்கிறார்.
அப்போலோ மருத்துவமனை வீடியோ சர்ச்சையாவது இது முதல்முறையல்ல. கிரீம்ஸ் ரோடு அப்போலோவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைபெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் கடந்த 2017-ல் வெளியாகி சர்ச்சையானது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளுக்கு முதல் நாளில் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அப்போது டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக இருந்த பெங்களூர் புகழேந்தி அந்த வீடியோவை வெளியிட்டார்.
ஜெயலலிதா வீடியோவின் பின்னணி என்ன?
- மருத்துவமனை பெட்டில் அமர்ந்தபடியே பழச்சாறு அருந்திக் கொண்டிருந்தார் ஜெயலலிதா.
- பின்னணியில் பழைய தமிழ் பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது.
- இடது கையில் இருந்த கிளாஸில் இருந்து பழச்சாறை ஜெயலலிதா அருந்திக் கொண்டிருந்தார்.
- வலது கையில் ரத்த அழுத்தத்தைக் கணக்கிடுவதற்கான கருவி பொருத்தப்பட்டிருந்த நிலையில், இடது கையைத் தவிர, வலது கை, கால்களில் அசைவில்லாமல் இருந்தது.
- இந்தக் காரணங்களால், அது ஜெயலலிதாவே இல்லை.. டெக்னாலஜியை வைத்து இப்படி வீடியோவாக ரெடி பண்ணியிருக்கிறார்கள் என்றெல்லாம், ஜெயலலிதாவின் தோழி கீதா, கே.சி.பழனிசாமி போன்றோர் குற்றம்சாட்டினர்.
- ஜெயலலிதா இறந்து ஓராண்டுக்குப் பின்னர் திடீரென இப்படி ஒரு வீடியோவை வெளியிட என்ன காரணம் என்ற கேள்வியும் அப்போது பரவலாக முன்வைக்கப்பட்டது. இப்போது வரை அந்த வீடியோவின் மர்மம் விலகவில்லை.
இந்நிலையில் அதே அப்போலோவிலிருந்து இப்போது அஜித் வீடியோ சர்ச்சை. அஜித் வீடியோவில் என்ன இருக்கிறது?
- அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் அப்போலோ மருத்துவமனைக்கு மருத்துவரைப் பார்க்க வந்தபோது எடுக்கப்பட்டது.
- மருத்துவமனைக்குள் வரும் அஜித், ஷாலினியை செல்போனில் சிறிது தூரத்தில் இருந்து ஃபர்சானா வீடியோ எடுத்திருக்கிறார்.
- வீடியோவில் மாஸ்க் அணிந்திருக்கும் அஜித்தும் ஷாலினியும் மருத்துவமனைக்குள் செல்லும் காட்சி இடம்பெற்றிருக்கிறது.
- ஷாலினி வேகமாக முன்னே சென்றுவிட, அஜித் சிறிது நிதானித்து ஊழியர்களை நோக்கி கையால் சைகை செய்கிறார். அதன்பின்னர் அவரும் சென்றுவிடுகிறார்.
- ஃபர்சானா வீடியோ எடுப்பதை சிசிடிவி காட்சி மூலம் அறிந்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாகச் சொல்கிறார்கள்.
- நிகழ்ச்சிகள், விழாக்களில் ரசிகர்களாக வீடியோ எடுப்பது வேறு, மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது அஜித்தின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான நடவடிக்கை. அந்த சூழலில் மருத்துவமனை ஊழியராக இருந்து வீடியோ எடுப்பது விதிமீறல் என்பது மருத்துவமனை தரப்பு விளக்கம் என்கிறார்கள்.
பிரைவசி முக்கியம் அமைச்சரே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!