தமிழ்நாட்டையே ஆட்டுவித்த ஏ.ஆர்.ரஹ்மான் – பிரபுதேவா காம்போவின் ஸ்பெஷல் பாடல்கள்!

பிரபுதேவா நடனம் என்றாலே பார்ப்பவர்களின் கால்கள் பரபரக்கத் தொடங்கிவிடும். அதிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பிரபுதேவா நடனம் என்றால் கேட்கவா வேண்டும். நம்மை ஒருவழி செய்துவிடும். அப்படியாக தமிழ்நாட்டையே ஆட்டுவித்த ஏ.ஆர்.ரஹ்மான் – பிரபுதேவா காம்போவின் ஸ்பெஷல் பாடல்கள் பற்றி இங்கே.

சிக்குபுக்கு ரயிலே.. (ஜெண்டில்மேன்)

பிரபுதேவா - கௌதமி
பிரபுதேவா – கௌதமி

இயக்குநர் ஷங்கருடன் ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முதலாக இணைந்த இந்தப் படத்தில் வியாபார நோக்கத்திற்காக திணிக்கப்பட்ட ஒரு பாடல்தான் ‘சிக்கு புக்கு ரயிலே’. ஆனால் ஏ.ஆர்.ரஹ்மானின் துள்ளலான வெஸ்டர்ன் இசையும் சுரேஷ் பீட்டர்ஸின் மயக்கும் குரலும் வாலியின் இளமையான வரிகளும் சேர்ந்துகொள்ள ஆடியோவே மாஸ் ஹிட். போதாக்குறைக்கு அந்தப் பாடலுக்கு திரையில் இன்னமும் எனர்ஜி கூட்டியிருந்தார் பிரபுதேவா. அந்தப் பாடலுக்கு அவர் போட்ட மைக்கேல் ஜாக்சன் பாணியிலான நடனம் அதுவரை தமிழ் சினிமா பார்த்திடாதது. விளைவு பாடல் பேய் ஹிட். பிரபுதேவாவுக்கும் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

முக்காபுலா – (காதலன்)

காதலன்

தனது முதல் படத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாடலுக்கு ஆடிய பிரபுதேவாவையே தனது இரண்டாவது படத்தின் ஹீரோவாக ஆக்கியிருந்த ஷங்கர் இந்த முறை சும்மா இருப்பாரா? ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ஒவ்வொரு பாட்டுமே பிரபுதேவாவுக்கு செம்ம தீனி கொடுத்தது. ‘ஊர்வசி..ஊர்வசி’, ‘கோபாலா..கோபாலா..’, ‘பேட்டை ராப்’ என அடுத்தடுத்து படம் முழுக்க பிரபுதேவாவின் டான்ஸ் மேஜிக்குகளாக நிரம்பியிருக்க படத்தின் கடைசி பாடலாக அமைந்த ‘முக்காபுலா’ வெற்றியின் உச்சத்தைத் தொட்டது. கௌபாய் செட்டப்புகளின் பின்னணியில் பிரபுதேவா ஆடிய ஆட்டத்திற்கு தமிழ்நாடே ஆடியது. அதிலும் பாடலின் முடிவில் சிஜி துணையில் உருவாகியிருக்கும் டான்ஸ் பிட் அப்போது தமிழகத்தில் மிகப் பிரபலம். 

நோ பிராப்ளம்  – (லவ் பேர்ட்ஸ்)

லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ்

முந்தைய படங்களில் இடம்பெற்ற பாடல்களின் வெற்றியால் ஏ.ஆர்.ரஹ்மான் – பிரபுதேவா காம்போவுக்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டமும் பிஸினெஸ் வட்டாரமும் உருவாகியிருந்தது. அதைப் பயன்படுத்திக்கொண்ட இயக்குநர் பி.வாசு இயக்கிய இந்தப் படத்திலும் படம் முழுக்க பிரபுதேவாவின் டான்ஸ் ஷோக்கள்தான். அதில் உச்சமாக ஏ.ஆர்.ரஹ்மான் பிரிட்டிஸ் பாப் சிங்கரான அப்பச்சே இண்டியனுடன் இணைந்து பாடிய ஃபுல் வெஸ்டன் டைப் பாடலான ‘நோ பிராப்ளம்’ பாடல் கிராமத்து டீக்கடைகளிலும் சத்தமாக ஒலித்தது. ‘வெஸ்டர்ன் எங்களுக்கு விளையாட்டு’ என வைரமுத்து அந்தப் பாடலில் எழுதியிருந்தது எவ்வளவு தூரம் உண்மை என நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.

ரோமியோ ஆட்டம் போட்டால் – (மிஸ்டர் ரோமியோ)

மிஸ்டர் ரோமியோ
மிஸ்டர் ரோமியோ

‘மெல்லிசையே’, ‘மோனலிசா..மோனலிசா’, ‘தண்ணீரைக் காதலிக்கும்’ என ‘மிஸ்டர் ரோமியோ’ படத்திற்காக போட்ட பாடல்கள் எல்லாமே மரண ஹிட்டடிக்க, அதன் உச்சமாக பிரபுதேவாவிற்காகவே எழுதி இசையமைக்கப்பட்டதுபோல உருவான ஒரு பாடல்தான் ‘ரோமியோ ஆட்டம் போட்டால்’. அதுவரை மெலடி பாடிக்கொண்டிருந்த ஹரிஹரனையும் அவருக்கு நேரெதிர் குரல் கொண்ட உதித் நாராயணனையும் இணைந்து பாடவிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் செய்தது தரமான ஒரு சம்பவம். பாடலின் ஒரு இடத்தில் வைரமுத்து எழுதியிருந்த ‘அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் தொடங்கிவிட்டேன்’ எனும் வரி பிரபுதேவாவுக்குத்தான் எவ்வளவு பொருத்தம்.

மானாமதுரை – மின்சார கனவு

பிரபுதேவா - காஜல்
பிரபுதேவா – காஜல்

ஒரு சூப்பர் மியூசிக்கல் ரோம்-காம் படமான ‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ஒரேயொரு ஃபாஸ்ட் பீட் பாடலான ‘மானாமதுரை’ பாடலிலும் பிரபுதேவாவின் கால்வரிசையைக் காட்ட இடம் கொடுத்திருப்பார், ஏ.ஆர்.ரஹ்மான். சித்ரா, உன்னி மேனன் குரல்களில் ஸ்மூத்தாக போய்க்கொண்டிருக்கும் பாடலின் இடையில் 3-வது நிமிடம் 41-வது செகண்டில் பிரபுதேவா எண்ட்ரி ஆகும்போது ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு குத்து குத்தியிருப்பாரு பாருங்கள். ஆஸம்..! அந்த இடத்தையெல்லாம் தியேட்டரில் பார்த்தவர்கள் பாக்கியவான்கள்.

Also Read: `அஜித் சார் நடிச்சு இளையராஜா இசையமைத்த ஒரே படம் என்னோட படம்தான்!’ – ரமேஷ் கண்ணா ஷேரிங்ஸ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top