போபால் விஷ வாயுக் கசிவு விபத்து நடந்து 37 ஆண்டுகள் ஆகியும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அந்தப் பகுதி மக்களைக் கொடூர கனவாகத் துரத்திக் கொண்டே இருக்கிறது.
போபால் விஷ வாயுக் கசிவு
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இயங்கிவந்த யூனியன் கார்பைடு என்ற ரசாயன ஆலை, தங்களுக்கு மட்டுமல்லாமல் இனிவரும் சந்ததிகளுக்கே பெரும் எமனாக மாறும் என்று அந்நகர மக்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் இரவு தொடங்கி 3-ம் தேதி காலை வரை அந்த ஆலையில் இருந்து கசிந்த மெத்தில் ஐசோ சையனைடு என்ற நச்சு வாயு லட்சக்கணக்கானோரைப் பாதித்தது. உலகின் மோசமான தொழிற்சாலை விபத்துகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது இந்த விபத்து.
2008-ம் ஆண்டு வரை இந்த விபத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,259. அரசின் அதிகாரபூர்வ கணக்கு இது என்றாலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000-த்துக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மத்தியப்பிரதேச அரசு நீதிமன்றத்தில் கடந்த 2006-ம் ஆண்டு சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், யூனியன் கார்பைடு விஷ வாயுக் கசிவால் 5,58,125 பேர் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில், 38,478 பேருக்கு பகுதியளவு காயங்களும், 3,900 பேருக்கு நிரந்தர மற்றும் கடுமையான காயங்களும் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விபத்தின்போது விஷவாயுவை சுவாசித்தவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு, சுவாசக் கோளாறுகள், இதய பிரச்னைகள் என பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் டவுன் சிண்ட்ரோம், டிஸ்லக்ஸி என பல்வேறு மரபு வழி நோய்களாலும், உடல் குறைபாடுகளுடனும் பிறந்து வருகின்றன.
அப்துல் ஜப்பார்
போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அப்துல் ஜப்பார் என்ற சமூக ஆர்வலர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தார். விஷ வாயுக் கசிவால் தனது தந்தை, சகோதரர் என குடும்பத்தில் இருவரை இழந்த ஜப்பார், பாதிக்கப்பட்டோருக்கான குரலாகத் தனது இறுதி காலம் வரை உழைத்தார். 1984-ல் 28 வயதான ஜப்பார், விஷவாயுக் கசிவால் உயிரிழந்த குழந்தைகள், முதியவர்கள் என சடலங்களுக்கு மத்தியில் நடந்தபோது, அவர்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று உறுதிபூண்டிருக்கிறார். 2019-ல் அவர் தனது கடைசி மூச்சு வரை அவர்களின் குரலாக ஒலித்தார்.
விஷவாயுக் கசிவில் உயிரிழந்தோர், பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதற்காக Bhopal Gas Peedith Sangharsh Sahayog Samiti (BGPSSS) என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். போபாலின் குடிசைப் பகுதியொன்றில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குக் கீழ் தனது இரு மகன்கள், மனைவியுடன் வாழ்ந்த அவர், கார்ப்பரேட்டுகள் அளிக்க முன்வந்த பெரும் தொகை, அதிகாரத்தின் மிரட்டல்கள் என அனைத்தையும் மீறி பாதிக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்தார். சமூக ஆர்வம் கொண்ட வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடருவது, இழப்பீடு உள்ளிட்டவைகள் வழங்க அரசை வலியுறுத்தி அமைதிப் போராட்டங்கள், தர்ணா என தொடர்ச்சியாகக் களமாடி வந்தார்.
அதேபோல், விஷ வாயுக் கசிவால் தங்கள் கணவனை இழந்து வாழ்வாதாரத்தை இழந்த பெண்களுக்கு டெய்லரிங், பேக் தயாரித்தல் போன்ற சுய தொழில் பயிற்சிகளையும் பிஜிபிஎஸ்எஸ்எஸ் அமைப்பு மூலம் வழங்கினார். அரசின் உதவிக்காக மட்டும் காத்திராமல், அவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு இந்த சுயதொழில் பயிற்சிகள் உதவின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் ஜப்பாரை அம்மக்கள் பாசமாக `ஜப்பார்பாய்’ என்று அழைத்து மகிழ்ந்தனர். அவரின் போராட்டத்துக்கு அங்கீகாரமாக ஜப்பார் மரணத்துக்குப் பிறகு அவருக்கு பத்மஸ்ரீ வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. 37 ஆண்டுகள் கடந்தும் விபத்தை ஏற்படுத்திய ஆலை நிர்வாகம் தண்டிக்கப்படவில்லை. தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று அம்மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து வருகிறார்கள்.
Also Read – Omicron: ஒமிக்ரான் திரிபு – கவலையளிக்கும் விஷயம் என உலக சுகாதார அமைப்பு சொல்வது ஏன்?