தமிழக அரசியலின் முக்கியமான பேசுபொருள்களில் எப்போதும் தவறாமல் இடம்பிடிக்கும் ஒரு விவாதம் கச்சத்தீவு. அந்தத் தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தது யார் என்ற கேள்வியும் எப்போதும் ஒலிப்பதுண்டு. கச்சத்தீவின் வரலாறு என்ன… இந்தியா- இலங்கை இடையிலான 1974 ஒப்பந்தத்தின் பின்னணி என்ன?
கச்சத் தீவு
ராமேஸ்வரத்தில் இருந்து 12 நாட்டிகல் மைல் (17 கி.மீ) தொலைவில் இருக்கும் ஆளில்லா தீவுதான் கச்சத் தீவு. 285 ஏக்கர் 20 சென்ட் பரப்பளவு கொண்ட இந்தத் தீவு ராமநாதபுரத்தை ஆண்டு சேதுபதி மன்னர்கள் ஆளுகைக்குக் கீழ் இருந்தது. ராமேஸ்வரம் ராமநாதபுரம் சுவாமி கோயிலுக்கு கச்சத்தீவில் இருந்து வந்த பூக்களால் பூஜை நடந்ததற்கான வரலாறு உண்டு. அதன்பின்னர், மெட்ராஸ் ராஜதானியின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத் தீவு, தங்களுக்கு சொந்தமானது என 1920-ல் இலங்கை சொல்லத் தொடங்கியது. அப்போது முதல் 1974-ம் ஆண்டு வரை கச்சத்தீவை இந்தியா, இலங்கை என இரண்டு நாடுகளுமே சொந்தம் கொண்டாடின.
1973-ல் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கை சென்றார். அதற்கடுத்த ஆண்டு இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகே இந்தியா வந்தபோது, கச்சத்தீவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்தியா சார்பில் பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்திட்ட அந்த ஒப்பந்தத்தின்படி கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமானதாகக் குறிப்பிடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1974ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி இருநாடுகள் இடையே கையெழுத்தானது. அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான தமிழக அரசிடம் இதுபற்றி எந்தக் கருத்துமே கேட்காமல் ஒப்பந்தம் போடப்பட்டதாக சர்ச்சை வெடித்தது. ஆனால், `தமிழக மீனவர்கள் கச்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித்துக் கொள்ளலாம். மீனவர்கள், தங்கள் வலைகளையும் அங்கு உலர்த்திக் கொள்ளலாம் என்று சொன்னதோடு, தீவில் இருக்கும் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்பதிலும் பிரச்னை இருக்காது’ என்று சொல்லி தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு அலையை சமாளித்தது அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதுதொடர்பாக 1974ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரன்சிங், `1921-ம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை வகுக்கப்பட்டு கச்சத்தீவின் மேற்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் கிழக்குப் பகுதியில் இந்திய மீனவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இலங்கையில் இருந்து கச்சதீவுக்கான தூரம் குறைவு. இந்தியாவிலிருந்து அந்தத் தீவுக்கான தூரம் அதிகம்’ என்று பேசினார். கச்சத்தீவு விவகாரத்தில் தீவிரம் காட்டிய இலங்கை அரசு 1971 – 1974 வரையில் அங்கு தனது முப்படைகளையும் முகாமிட்டது. போர்க்கப்பலான கஜபாகுவை கச்சத்தீவின் அருகில் நிறுத்தி புனித அந்தோணியர் ஆலயத் திருவிழாவுக்குத் தமிழக மீனவர்கள் வராமல் பார்த்துக் கொண்டது.
கச்சத்தீவு ஒப்பந்தம்
1974-ல் கையெழுத்தானது கச்சத்தீவு ஒப்பந்தத்தில் 8 விதிகள் இடம்பெற்றிருந்தன. அதில், ஐந்தாவது விதியின்படி, “கச்சத் தீவுக்கு வருபவர்கள் இதுநாள் வரை வந்து போனது போல வந்து போகவும், கச்சத்தீவை அனுபவிப்பதற்கும் முழு உரிமையுடையவர்கள் ஆவார்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை” என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த விதியை இலங்கை அரசு இதுவரை பின்பற்றவில்லை என்பதே நிதர்சனம். அதன்பின்னர், கச்சத்தீவின் மீதான உரிமையைப் படிப்படியாக இழந்தது இந்தியா. தமிழக மீனவர்கள் நலன் நிலைநாட்டப்படும், கச்சத்தீவை மீட்போம் என்பது ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகளின் உறுதிமொழிகளில் ஒன்றாக இடம்பெறுவது வழக்கமாகிவிட்டது.
Also Read – முதல்வர் ஸ்டாலினின் லண்டன் பயணம் டு டிஜிபி-யின் தமிழ்நாடு பாசம் வரை..!