முகமது அர்மான் - ஹுசைனி

ட்ரூ காலர்; வீடியோ காலில் வீட்டு டூர்… ஆர்யா போல் பேசி ஜெர்மன் பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த இருவர்!

நடிகர் ஆர்யா போல் பேசி ஜெர்மனியில் வசிக்கும் இலங்கைத் தமிழ்ப் பெண்ணிடம் 70 லட்ச ரூபாய் மோசடி செய்த இரண்டு பேரை சென்னை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். `உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்திருக்கும் போலீஸுக்கு நன்றி’ என்று தெரிவித்திருக்கிறார் ஆர்யா. என்ன நடந்தது?

ஆர்யா மீது மோசடி புகார்

நடிகர் ஆர்யா தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக ஜெர்மனியில் வசிக்கும் விட்ஜா என்பவர் சென்னை போலீஸில் புகாரளித்தார். இதுதொடர்பாக போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்ற உத்தரவை அடுத்து குற்றப்பிரிவு போலீஸார், சைபர் கிரைம் போலீஸார் விசாரணையத் தொடங்கினர். இதுதொடர்பான விசாரணைக்கு நடிகர் ஆர்யா நேரில் ஆஜராகி போலீஸில் விளக்கமளித்தார். புகார் கொடுத்த பெண்ணிடமும் வீடியோ கால் மூலமாக போலீஸார் விசாரணை நடத்தினர்.

நடிகர் ஆர்யா
நடிகர் ஆர்யா

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், ஆர்யா பெயரில் போலியாக ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி ஜெர்மனி பெண்ணிடம் பணம் பறித்த சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது அர்மான், முகமது ஹூசைனி பையாக் ஆகியோரைக் கைது செய்திருக்கிறார்கள். ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிபாக்கத்தில் கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ட்ரூ காலர்… வீடியோ கால்

ஜெர்மனியில் வசிக்கும் விட்ஜாவிடம் ஆர்யா குரலில் மிமிக்ரி செய்து இவர்கள் பேசியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதுதவிர ட்ரூ காலரில் குறிப்பிட்ட எண்ணைத் தேடினார் `ஆக்டர் ஆர்யா’ என்று வருவது போல் முன்னெச்சரிக்கை செய்து அவர்கள் பேசியிருக்கிறார்கள். ஆர்யா பெயரிலான போலி ஃபேஸ்புக் கணக்கு மூலமாகப் பல பெண்களிடம் பேசி பணம் பறித்திருக்கிறார்கள். ஜெர்மன் பெண்ணிடம் ஆர்யா பேசுவதுபோல், தனக்குப் பணக் கஷ்டம் இருப்பதாகக் கூறி பல தவணைகளில் வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்ஃபர் மூலமாகப் பணம் பெற்றிருக்கிறார்கள். ஆர்யாவின் மேனேஜர் என்று கூறி ஹூசைனி பணத்தைப் பெற்றிருப்பதையும் போலீஸார் விசாரணையில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

முகமது அர்மான் - ஹூசைனி
முகமது அர்மான் – ஹூசைனி

அதேபோல், சாயிஷாவை விவாகரத்து செய்துவிட்டு உன்னையே திருமணம் செய்துகொள்கிறேன் என்கிறரீதியில் ஜெர்மன் பெண்ணிடம் மிமிக்ரி செய்து ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பணம் பறித்து வந்ததும் தெரியவந்திருக்கிறது. இந்தப் புகார் தொடர்பாக நடிகர் ஆர்யா பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும், தனது படத்துக்குத் தடை கேட்டு வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் நீதிமன்றத்தை நாடியதால் விசாரணைக்கு ஆஜரானதாகவும் ஆர்யா தரப்பில் விசாரணையின்போது சொல்லப்பட்டதாகத் தெரிகிறது. அதேநேரம், வீடியோ காலில் வீட்டு டூர் என்கிற பெயரில் ஜெர்மன் பெண்ணிடம் பேசியது யார் என்பது குறித்தும் விசாரணையை போலீஸார் முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.

ஆர்யா நன்றி!

இதுதொடர்பாக ட்விட்டரில் சென்னை போலீஸுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் நடிகர் ஆர்யா. அவரது பதிவில், “உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்த சென்னை காவல் ஆணையர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் மற்றும் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது நான் வெளிப்படுத்தாத ஒரு மன உளைச்சலாக இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி’’ என்று தெரிவித்திருக்கிறார்.

Also Read – பகீர் கிளப்பிய மதன்… பா.ஜ.க பொதுச்செயலாளர் பொறுப்பை உதறிய கே.டி.ராகவன் – என்ன நடந்தது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top