ரஜினிகாந்த்

அதிசயப்பிறவி டு அண்ணாத்த… சோ தொடங்கியதை முடித்து வைத்த ரஜினி!

ரஜினி அரசியலுக்கு வருவார்… என்ற கணிப்புகள், அண்ணாமலை திரைப்படம் வெளியான நேரத்திலேயோ… அல்லது பாட்ஷா திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவர் பேசிய வெடிகுண்டு கலாசாரம் தமிழகத்தில் அதிகரித்துவிட்டது என்ற பேச்சிலோ தொடங்கவில்லை. அதற்கு முன்பாகவே, துக்ளக் ஆசிரியர் சோ, 1990-ஆம் ஆண்டு வெளியான அதிசயப்பிறவி திரைப்படத்திலேயே ரஜினியின் அரசியல் வருகை குறித்த வசனங்களைப் பேசி, தமிழகத்தை குழப்பிக் கொண்டிருந்த இந்த வதந்திக்கு பிள்ளையார் சுழியைப் போட்டு வைத்தார். தி.மு.க, அ.தி.மு.க என்ற திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகவும், காங்கிரஸ் கட்சி அல்லாத ஒரு மாற்று அரசியல் சக்தியை உருவாக்க வேண்டும் என சோ உள்ளிட்ட சிலர் திட்டமிட்டனர். அதற்காக அவர்கள் அப்போது தேர்ந்தெடுத்தது ரஜினியைத்தான். அதனால், திரைப்படங்கள் மட்டுமல்ல… தனது துக்ளக் பத்திரிகையிலும், வாய்ப்புக் கிடைக்கும் போதேல்லாம் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதை சோ கொளுத்திப் போட்டுக் கொண்டிருந்தார். அதன்விளைவு, ரஜினியைவிட ரஜினி ரசிகர்களிடம் அரசியல் ஆசை வேகமாகப் புகையத் தொடங்கியது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

சில காலம் கழித்து, அண்ணாமலை திரைப்படம் வெளியான நேரத்தில், போயஸ் கார்டனில், ரஜினி வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கான பாதுகாப்பு காரணங்கள், ரஜினியைத் தொந்தரவு செய்தன. அதில் தனிப்பட்ட முறையில் தனக்கு இழைக்கப்படும் அவமரியாதை என்று கருதிய ரஜினி, ஜெயலலிதாவுடன் மறைமுகமான மோதல் போக்கைக் கடைபிடிக்கத் தொடங்கினார். வாய்ப்புக் கிடைத்த நேரங்களில் எல்லாம், ஜெயலலிதாவுக்கு எதிராகத் தனது திரைப்படத்தில் வசனங்களையும், கதாபாத்திரங்களையும் வடிவமைத்து, அந்த மோதலை வளர்த்துக் கொண்டே போனார் ரஜினி. இது ஒரு கட்டத்தில், ரஜினியின் திரைப்படங்களுக்கான எதிர்பார்ப்பையும், விளம்பரத்திற்கான உத்தியாகவுமே மாறியதை அப்போதே பல சிந்தனையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் அடையாளம் கண்டு விமர்சனம் செய்தனர். இந்த நேரத்தில் இயக்குநர் மணிரத்னம் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்களால், வெடிகுண்டு வீசப்பட்டது. அதே சமயத்தில், 1995-ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகிவிட்டது. அதற்கு ஆட்சியாளர்களின் அலட்சியமே காரணம் என்று ஜெயலலிதாவையும், அவரது ஆட்சியையும் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, ஜெயலலிதா மீதான நடிகர் ரஜினியின் விமர்சனங்கள் இன்னும் அதிகரித்தன. ஒரு கட்டத்தில், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானால், தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று பேசினார்.

ரஜினி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஜெயலலிதாவை விமர்சித்த அந்த நேரத்தில், மறந்தும்கூட ஜெயலலிதா எந்த இடத்திலும், ரஜினியின் பெயரைக் கூட உச்சரிக்க உச்சரிக்கவும் இல்லை. விமர்சனம் செய்யவும் இல்லை. இந்தவிவகாரம் பற்றி, ஜெயலலிதாவிடம் அவருக்கு நெருக்கமான சில பத்திரிகையாளர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் கேட்டபோது, ரஜினிக்கு எல்லாம் பதில் சொல்லி, அரசியல் செய்யும் அளவுக்கு எல்லாம் என் இமேஜூம், நம் கட்சியின் இமேஜூம் கீழே போய்விடவில்லை என்று உறுதிபடத் தெரிவித்தார்.

இப்படியே போன ரஜினி-ஜெயலலிதா மோதல், 1996 சட்டமன்றத் தேர்தலையொட்டி, விஸ்வரூபம் எடுத்தது. 1996 சட்டமன்றத் தேர்தலை, அ.தி.மு.க-வுடன், கூட்டணி வைத்து, காங்கிரஸ் கட்சி சந்தித்தது. அதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூப்பனார், தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் அப்போது மூப்பனாரின் த.மா.கா-வில் இணைந்தார். அந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த், தனது ஆதரவை மூப்பனாருக்கு வழங்கினார். இதையடுத்து, அண்ணாமலை படத்தில் ரஜினியின் அடையாளமாக காண்பிக்கப்பட்ட சைக்கிள் சின்னம்தான் த.மா.கா-வின் சின்னமானது. அந்தக் கட்சி மாபெரும் வெற்றி பெறப்போகும் சூழல் அரசியலில் தெரிந்தது. இதையடுத்து தமிழகத்தின் அரசியல் சாணக்கியரான கருணாநிதி சுதாரித்துக் கொண்டார். த.மா.க-வின் வாக்கையும், ரஜினியின் ஆதரவையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என துரிதமாகச் செயல்பட்ட கருணாநிதி, த.மா.க-வுடன் கூட்டணி அமைக்க சில முயற்சிகளை வலியப்போய் செய்து, அதில் வெற்றியும் பெற்றார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ரஜினி ஆதரவு கொடுத்தது, தி.மு.க-வுக்கோ அல்லது கருணாநிதிக்கோ அல்ல… ரஜினியின் ஆதரவு மூப்பனாருக்குத்தான். ஆனால், அதை தனது சாதுர்யத்தால், தனக்கான அறுவடையாக மாற்றிக் கொண்டார் கருணாநிதி. ரஜினி ஆதரவு கொடுக்கும்வரை, த.மா.கா, தி.மு.க கூட்டணி உருவாகவில்லை. ஆனால், அதையடுத்து, த.மா.க-வுடன் கூட்டணி அமைத்த கருணாநிதி, முதலமைச்சர் வேட்பாளராகவும் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டார்.

”புதிதாக ஆரம்பித்த கட்சிதானே” என்று நினைத்த மூப்பனாரும், தி.மு.க கூட்டணியை ஏற்றுக் கொண்டதுடன், முதலமைச்சர் வேட்பாளர் கருணாநிதி என்பதையும் ஒப்புக்கொண்டார். கருணாநிதி போட்ட அரசியல் கணக்கு அப்படியே பலித்தது. அந்தத் தேர்தலில், தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது. கருணாநிதி முதலமைச்சரானார். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற ஆட்சிகளில் மிகச் சிறப்பான ஆட்சி என்று ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் கேள்வி கேட்கும் அளவுக்கு, 1996-2001 ஆட்சி அமைந்தது.

ஒருவேளை அன்றைக்கு தி.மு.க, த.மா.கா கூட்டணி ஏற்படவில்லை என்றால், தமிழகத்தின் ஆளும் கட்சி, எதிர்கட்சி வரலாறு என்பது மாறிப் போய் இருக்கலாம். த.மா.க ஆளும் கட்சியாகவோ… அல்லது பிரதான எதிர்கட்சியாகவோ தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும். மூப்பனாருக்கு ஆதரவு கொடுக்காமல், ரஜினியே தனிக்கட்சி ஆரம்பித்திருந்தால், அன்றைய சூழலில் அவர் முதலமைச்சராகி இருப்பார் என்று சொல்லும் அரசியல் ஆய்வாளர்களும் உண்டு. அந்தக் காலகட்டத்தில்தான், ரஜினியின் அரசியல் வருகை குறித்த கணிப்புகள் ஒரளவுக்கு வடிவம் பெற்றது. ஆனால், ஆட்சியைக் கைப்பற்றியதும், முதலமைச்சர் கருணாநிதி செய்த முதல்வேலை, கட்சிக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் ரஜினி ரசிகர் மன்றங்களை ஓரம் கட்டி வைத்ததுதான். அதில் ரஜினியும் கொஞ்சம் அதிருப்தி அடைந்தார். ஆனால், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

அதன்பிறகு, ஒவ்வொருமுறை தேர்தல் வரும்போதும், ரஜினியின் வாய்ஸ் யாருக்கு? அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி அடிக்கும். அந்த நேரத்தில் எதற்கும் பதில் சொல்லாமல், அமெரிக்காவுக்கோ… இமயமலைக்கோ… அல்லது பெங்களூருவுக்கோ.. பறந்துவிடுவார் ரஜினி காந்த்.

அதன்பிறகு, 2002-ல் பாபா திரைப்படம் வெளியான நேரத்தில் ரஜினி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மோதல் ஆரம்பமானது. அதற்கு முன், கர்நாடகாவில் ஒரு விழாவில் பேசிய ரஜினி, சந்தனக் கடத்தல் வீரப்பனை சூரசம்ஹாரம் செய்ய வேண்டும் என்று பேசினார். அதில் கடுப்பான ராமதாஸ், சிகரெட்டுடன் பாபா படத்திற்கு போஸ் கொடுத்த ரஜினியை ஒருமையில் பேசியதுடன், அவர் இளைஞர்களைச் சீரழிக்கிறார் என்ற கருத்தைத் தெரிவித்தார். அத்துடன், ரஜினியின் பாபா படத்தை யாரும் பார்க்கக்கூடாது என்று அறிக்கைவிட்டார். ராமதாஸின் அந்தக் கருத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் அப்போது ஆதரித்தார். இதையடுத்து, ரஜினி ரசிகர்கள், பா.ம.க தொண்டர்கள் மோதல் உருவானது.

ஒரு கட்டத்தில் ராமதாஸுக்கு எதிராக மதுரையில் கருப்புக் கொடி காட்டிய ரஜினி ரசிகர்களை ராமதாஸின் பிரைவேட் செக்யூரிட்டிகள் கடுமையாகத் தாக்கினர். அதில் அப்போது பதியப்பட்ட வழக்கிற்கு ராமதாஸ், 2013-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். முன்னதாக, ரஜினி ராமதாஸ் மோதலின் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத் தேர்தலில், தனது ஓட்டு இரட்டை இலைக்கு என்றும், ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ம.க-வை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று விநோதமாகப் பேசினார். ஆனால், அந்த மக்களவைத் தேர்தலில் பா.ம.க போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அப்போதே ரஜினியின் வாய்ஸ் செல்லாக்காசாகிவிட்டது.

அதன்பிறகு திரைப்படத் துறையில் ரஜினியின் சக போட்டியாளரான விஜயகாந்த் 2005-ல் கட்சி ஆரம்பித்து, 2011 சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்று, தற்போதும் அவருடைய தே.மு.தி.க தமிழ்நாட்டு அரசியலில், தவிர்க்க முடியாத கட்சியாக உள்ளது. மேலும், கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து ஒரு நாடாளுமன்றத் தேர்தலையும், ஒரு சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்துவிட்டார். ஆனால், ரஜினியிடம் எந்தச் சத்தமும் இல்லை.

கருணாநிதி-ஜெயலலிதா-சோ காலத்தில் தொடங்கிய ரஜினியின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பு, அந்த மூன்று பேரும் மறைந்த பிறகு, மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது. 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதாவும், சோவும் மறைந்தனர். 2018-ல் கருணாநிதி மறைந்தார். அதையடுத்து, ரஜினியின் அரசியல் வருகைக்கு மீண்டும் தூபம் போடப்பட்டது. அதை செய்ததும் துக்ளக் பத்திரிகைதான். ஆனால், இந்தமுறை, சோ இறந்த பிறகு, துக்ளக்கின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி, அந்த வேலையை சோவைவிட தீவிரமாகச் செய்தார். ஒரு கட்டத்தில், சோவை மிஞ்சம் அளவுக்குப் போன அவர், ரஜினி கட்சி தொடங்கினால், அவரை எப்படி வழி நடத்த வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும் என்ற அளவுக்கு துக்ளக் வாசகர்கள் மத்தியில் பேசினார். மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யில் இருந்தும், ரஜினிக்கு சில சமிக்ஞைகள் வந்தன. இதையடுத்து, 2018 டிசம்பரில் ரசிகர்களை சந்தித்த ரஜினி, ஆன்மிக அரசியல்தான் எனது அரசியல்.. போர் வரட்டும்… அதுவரை காத்திருங்கள் என்றார். மேலும், ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினார். அதை நம்பிய ரசிகர்கள், மீண்டும் அரசியல் பரபரப்புடன் இருந்தனர். குறிப்பாக 2021 சட்டமன்றத் தேர்தலில் ரஜினி கட்சி உதயமாகிவிடும் என்று ஜோதிடம் சொல்லாத ஊடகங்களே இல்லை என்ற அளவுக்குப் போனது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ரஜினி மக்கள் மன்றத்தில் தமிழருவி மணியனுக்கும், அர்ஜூனமூர்த்திக்கும் பொறுப்புக்கள் எல்லாம் கொடுக்கப்பட்டன. ஆனால், அந்தப் பொறுப்புக்களின் பெயர் என்ன என்பது கூட ரஜினிக்கு தெரியாத நிலையில் தான் மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் இருந்தன. இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அறிக்கை வெளியிட்ட ரஜினி, கொரோனாவைக் காரணம் காட்டியும், தற்போதைய தன் உடல்நிலையைக் காரணம் காட்டியும், தனிக் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்தார். அதோடு, தமிழருவி மணியனும், அர்ஜூனமூர்த்தியும் இருந்த இடம் தெரியாமல் போனார்கள். ஆனால், ரஜினியின் தீவிர ரசிகர்கள், மக்கள் மன்றம் இன்னும் இருப்பதால், தலைவர் என்றாவது ஒரு நாள் கட்சி தொடங்குவார் எனக் காத்திருந்தனர். அதற்கும் இறுதியாக முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள ரஜினி, `இனி அரசியல் வருகை என்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும், மக்கள் மன்றத்தையும் கலைக்கிறேன்’ என்றும் அறிவித்துவிட்டார். இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் சோ தொடங்கி வைத்த, அரசியல் குழப்பத்திற்கும், அதை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஊதிப்பெருக்கிய ரஜினியின் அபத்தத்திற்கும், ரஜினியே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Also Read : திடீர் கவனம் பெறும் `கொங்கு நாடு’ அரசியல்… தமிழகத்தைப் பிரிப்பது சாத்தியமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top