மூத்த புகைப்படக் கலைஞர் , பத்திரிகையாளர் UNI செய்தி நிறுவனத்தின் சென்னை கிளை தலைமை நிர்வாகி குமார் மறைவு செய்தியறிந்த நிலையில், அவரது குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு மின்னல் வேகத்தில் நிவாரண உதவி செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றி தெரிவித்திருக்கிறது.
பத்திரிகையாளர் குமார்
தேசிய அளவில் பல்வேறு கிளை அலுவலகங்களுடன் செயல்படும் UNI செய்தி நிறுவனத்தின் சென்னை கிளையின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றி வந்தவர் தி.குமார். செய்தி நிறுவனம் ஒன்றின் தலைமைக்குப் பொறுப்புக்கு வந்த முதல் தமிழ் பத்திரிகையாளர் குமார் ஆவார். யு.என்.ஐ நிறுவனம் கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்கு சரியாக ஊதியம் தரவில்லை என்று தெரிகிறது. ஊதியம் கிடைக்காததால், பொருளாதாரரீதியாகக் கடுமையான சிக்கல்களை குமார் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், யு.என்.ஐ செய்தி நிறுவனத்தின் நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் குமார் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மூத்த பத்திரிகையாளர், புகைப்படக் கலைஞர் குமாரின் மறைவு தமிழக ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவரின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்தினருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவ வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலையில், அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். உடனடியாக உதவிக்கரம் நீட்டிய தமிழக முதல்வருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றி தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து அந்த மன்றம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “நமது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மூத்த உறுப்பினர், மூத்த புகைப்படக் கலைஞர் , பத்திரிகையாளர் யு.என்.ஐ செய்தி நிறுவனத்தின் சென்னை கிளையின் தலைமை நிர்வாகி தி.குமார் (வயது 56 ) நேற்றைய தினம் (13-02-2022) ஞாயிற்றுக்கிழமை தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார் என்ற தகவல் நம் நெஞ்சில் பேரிடியாக விழுந்தது. உழைப்பால் படிப்படியாக உயர்ந்து யு.என்.ஐ செய்தி நிறுவனத்தில் சென்னை கிளையின் தலைமை நிர்வாகி பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டவர். சக பத்திரிகை தோழர்களிடம் அன்போடு பழகும் தன்மை கொண்ட குமாரின் மறைவு ஈடு செய்ய இயலாத ஒன்று.
நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் குமாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மகளின் திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இருந்த குமாரின் இந்த அகால மரணம் பெரும் துயரத்தை தந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர், குமார் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கி உதவிட வேண்டுகிறோம், என்ற வேண்டுகோளை வைத்திருந்தோம். உடல் அடக்கம் முடிந்து சில நிமிடங்களுக்குள், தமிழக முதல்வர் கருணையோடு, பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து சிறப்பு நேர்வாக ரூபாய் மூன்று லட்சம் நிதி உதவி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். மறைந்த பத்திரிகையாளர் குமார் குடும்பத்தினருக்கு மின்னல் வேகத்தில் உதவிய முதலமைச்சருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.