தடுமாறும் பாலிவுட்… தவிக்கும் நடிகர்கள்… தவிர்க்கும் ரசிகர்கள்… காரணம் என்ன?

இந்திய சினிமாவில் பல வுட்கள் உள்ளன. ஆனால், பாலிவுட் தான் கொரோனா காலத்துக்கு முந்தைய காலம் வரைக்கும் சொல்லப்படாத Pan India சினிமாவாக இருந்தது. கொரோனா பல துறைகளிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது போல இந்திய சினிமாத்துறையையும் புரட்டிப்போட்டது. ஓ.டி.டி தளங்களின் வரவு சின்ன பட்ஜெட்டில் சூப்பரான ஐடியாக்களுடன் எடுக்கப்பட்ட படங்களை இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது. இந்த சூழலில் பாலிவுட்டில் இருந்து வெளிவந்த பல படங்கள் அந்த ரசிகர்களை அதிருப்தி அடைய செய்தது. நெப்போட்டிஸம், ஒரே மாதிரியான பேட்டர்ன் படங்கள், ரீமேக் படங்கள், தேசப்பற்று கருத்துகள் போன்ற விஷயங்கள் பாலிவுட் ரசிகர்களை கடுப்பாக்கியது. தற்போது, பாலிவுட்டில் வெளியாகும் மொத்தப் படங்களையும் நடிகர்களையும் புறக்கணிக்கும் வண்ணம் ட்விட்டரில் #BoycottBollywood ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது. ரசிகர்களின் இவ்வளவு கோபத்துக்கும் என்ன காரணம்? இதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

பாலிவுட்
பாலிவுட்

வெறுப்புக்கு காரணம் என்ன?

கே.ஜி.எஃப், விக்ரம், புஷ்பா, பல மலையாள படங்கள் என இந்திய சினிமாவின் முகங்களாக இன்றைக்கு இருக்கும் படங்கள் எல்லாமே தென்னிந்திய படங்கள்தான். பாலிவுட் ரசிகர்கள் பாலிவுட் மீது கடுப்பாவதற்கான முதல் காரணம் இதுதான். குறிப்பாக இந்த ஆண்டில் பாலிவுட்டின் பெயர் சொல்லும்படி ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பதுதான் துரதிஷ்டம். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியான பல படங்களை பாலிவுட்டில் முன்னணி நடிகர்களை வைத்து பல இயக்குநர்கள் ரீமேக் செய்து வருகின்றனர். பாலிவுட் ரசிகர்கள் கடுப்பாவதற்கான இரண்டாவது காரணம் இதுதான். சமீபத்தில் விக்ரம் வேதா படத்தை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து “ஏற்கனவே நாங்கள் பார்த்த படத்தை மீண்டும் எதற்கு ரீமேக் செய்ய வேண்டும். புதிதாக எதையாவது யோசிக்கலாமே” போன்ற கமெண்டுகளைப் பதிவிட்டனர். அதேபோல மாஸ் நடிகர்களின் படங்களை பட்டியல் எடுத்துக்கொண்டால் ஒரேமாதிரியான கதையம்சம் கொண்ட படங்களே மீண்டும் மீண்டும் பாலிவுட்டில் வெளியாகிக்கொண்டிருக்கிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இது மூன்றாவது காரணம்.

விக்ரம்
விக்ரம்

சுஷாந்த் சிங் இறந்த பின்னர் பாலிவுட்டில் நெப்போட்டிஸம் தொடர்பான விவாதங்கள் இன்றுவரை அதிகமாக எழுந்து வருகிறது. இதனால், வாரிசு நடிகர்களின் படங்கள் வெளியாகும்போதெல்லாம் இந்த பிரச்னை மீண்டும் சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாக மாறுகிறது. அவர்களின் படங்களும் ரசிகர்களால் புறக்கணிக்கப்படுகிறது. இது நான்காவது காரணம். இன்றைக்கு ‘தேசப்பற்று’ குறித்த விவாதங்களில் சமூக வலைதளங்களில் அதிகமாக எழுகிறது. இதற்கு எதிர்கருத்து கூறும் நடிகர்களின் படங்கள் ஆதரிப்பவர்களால் தவிர்க்கப்படுகிறது. தேசப்பற்றை ஆதரித்து கருத்துக்கூறும் நடிகர்களின் படங்கள் அதற்கு எதிர்கருத்து உள்ளவர்களால் நிராகரிக்கப்படுகிறது. இந்த முரண்களின் அடிப்படை தேசப்பற்று என்பது குறிப்பிட்ட கட்சியை மட்டும் ஆதரிக்கும் வகையில் இருப்பதும், நாட்டில் நிலவும் பிரச்னைகளை கவனிப்பதன் அடிப்படையிலும் அமைகிறது எனலாம். இது ஐந்தாவது காரணம். இப்படியான காரணங்களால் பாலிவுட் ரசிகர்களால் தவிர்க்கப்பட்டு வருகிறது. இதை ஒருமித்த குரலோடு ரசிகர்கள் வெளிப்படுத்தும் வகையில் ‘#BoycottBollywood’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

பாதிக்கப்பட்ட படங்கள் என்னென்ன?

அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் வெளியானது. இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளியாகி இன்றைக்கும் கிளாசிக் படமாக திகழும் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தில் அதிகாரப்பூர்வ தழுவலாகும். இந்தப் படத்தைப் பார்த்த பின்னர் பல திரைத்துறை பிரபலங்கள் படம் குறித்த பாஸிட்டிவான விஷயங்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா விமர்சகர்களும் இந்தப் படம் குறித்து பாஸிட்டிவான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். எனினும், இந்தப் படத்தை ரசிகர்கள் புறக்கணித்து வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் அமீர்கான் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் சகிப்புத்தன்மை தொடர்பான கருத்தை தெரிவித்ததுதான். கடந்த சுமார் 10 ஆண்டுகளில் மிகவும் மோசமான பாக்ஸ் ஆஃபிஸ் ஓப்பனிங் பெற்ற அமிர்கானின் படம் இதுதான் என கூறப்படுகிறது. இந்தப் படத்தை ஆதரித்து பேசியதால் தான் ஹிருத்திக் ரோஷனின் விக்ரம் வேதா ரீமேக் படத்துக்கு எதிர்ப்புகள் எழுவதாகக் கூறப்படுகிறது.

லால் சிங் சத்தா
லால் சிங் சத்தா

அக்‌ஷய் குமார் நடிப்பில் அண்ணன் – தங்கை பாசத்தை மையாமாகக் கொண்டு எடுத்தப்படும் ‘ரக்‌ஷா பந்தன்’. அக்‌ஷய் குமாருடன் நடித்த நடிகர்கள் இதற்கு முன்பு இந்தியா தொடர்பாக கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டி இந்தப் படத்தை தவிர்த்து வருகின்றனர். ஷாரூக்கான் நடித்துள்ள பதான் படத்தையும் ரசிகர்கள் புறக்கணித்து வருகின்றனர். இதற்கு முன்னர் ஷாரூக்கான் சகிப்புத்தன்மை தொடர்பாக கூறிய கருத்தே இதற்கும் காரணம். இப்படி தொடர்ந்து படங்களை மக்களை பல்வேறு காரணங்களுக்கான புறக்கணித்து வருகின்றனர். படம் தொடர்பாக தனித்தனியாக பாய்காட் ஹேஷ்டேக்களையும் பாய்காட் பாலிவுட் ஹேஷ்டேக்கின் கீழ் இந்தப் படங்களையும் குறிப்பிட்டு கருத்துக்களை தெரிவித்து விவாதித்து வருகின்றனர்.

நடிகர்களின் ரியாக்‌ஷன் என்ன?

பாய்காட் பாலிவுட் தொடர்பான விவாதத்தில் பெரும்பாலான முன்னணி நடிகர்கள் அமைதி காத்தே வருகின்றனர். எனினும், அமீர்கான், வித்யூத் ஜமால் போன்ற நடிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அமீர்கான் இதுதொடர்பாக பேசும்போது, “என்னுடைய படத்தை புறக்கணிப்பது மிகவும் வேதனையளிக்கிறது. பெரும்பாலனவர்கள் எனக்கு இந்தியாவைப் பிடிக்காது என நம்பிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், அதில் உண்மை இல்லை. எனக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும்” என கருத்து தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் தொடர்ந்து 7 படங்கள் வெளியாகவுள்ளது. அதில் 5 படங்கள் பாலிவுட்டில் மிகப்பெரிய ஸ்டாராக இருப்பவர்களின் படங்கள். 2 படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள். அந்த ஏழு படங்களையும் சேர்த்து ஒரு புரொமோஷன் விழா பாலிவுட்டில் நடந்தது. ஆனால், அதற்கு அந்தப் படத்தில் முக்கியமான நடித்த யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், நெப்போட்டிஸத்தை கேள்வி கேட்கும் வகையில் வித்யூத் ஜமால், “7 படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பது மிகப்பெரிய விஷயம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த விழாவில் முக்கியமான நடிகர்களை மட்டுமே அழைத்துள்ளனர். இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. இது சங்கிலித் தொடர் போல நீள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

பதான்
பதான்

பாலிவுட்டில் நடக்கும் இந்தப் பிரச்னைகளைப் பற்றீ நீங்க என்ன நினைக்கிறீங்க? என்பதை கமெண்டில் சொல்லுங்க!

Also Read: எக்ஸ்பிரஷன் குயின்… நேஷனல் க்ரஷ்… – ராஷ்மிகாவின் கியூட் ஸ்டோரி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top