SBI வங்கியின் வால்ட்களில் இருந்து ரூ.11 கோடி மதிப்பிலான ரூபாய் நாணயங்கள் மாயமான வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. என்ன நடந்தது?
எஸ்.பி.ஐ வங்கி
ராஜஸ்தானின் மெஹந்திபூர் பாலாஜி பகுதியில் இருக்கும் எஸ்.பி.ஐ வங்கிக் கிளை அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில், தங்களது வால்ட்களில் இருந்து ரூ.11 கோடி மதிப்பிலான ரூபாய் நாணயங்கள் மாயமாகியிருந்ததைக் குறிப்பிட்டிருந்தது. மேலும், மாயமான தொகை ரூ.3 கோடிக்கு அதிகம் என்பதால், மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்தே, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, ராஜஸ்தான் போலீஸ் விசாரித்து வந்த வழக்கு, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. சிபிஐ, முதல் தகவலறிக்கை பதிந்து வழக்கு விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.
என்ன நடந்தது?
ராஜஸ்தானில் இருக்கும் அந்த SBI வங்கிக் கிளை, தங்களது வால்ட்களில் இருந்த ரூபாய் நாணயங்களை எண்ணி சரிபார்க்க முடிவு செய்திருக்கிறது. இதையடுத்து, ஜெய்ப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றை இதற்காக ஒப்பந்தம் செய்து பணியைத் தொடங்கினர். ரூ.13 கோடிக்கும் அதிகமான நாணயங்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்ட நிலையில், 3,000-த்துக்கும் அதிகமான நாணயப் பைகளில் இருந்ததோ ரூ.2 கோடி மதிப்பிலான நாணயங்கள் மட்டுமே. வங்கியின் கணக்குப்படி இருக்க வேண்டிய ரூ.13 கோடியில் ரூ.11 கோடி மதிப்பிலான ரூபாய் நாணயங்கள் மாயமாகியிருந்தன. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராஜஸ்தான் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
நாணயங்களை எண்ணும் பணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜெய்ப்பூர் தனியார் நிறுவன ஊழியர்கள், ஒரு கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்தபோது கடந்த 2021 ஆகஸ்ட் 10-ம் தேதி அவர்கள் மிரட்டப்பட்டதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாணயங்களை எண்ணும் பணியை உடனே நிறுத்திவிட்டு சொந்த ஊர் திரும்பும்படி அவர்கள் மிரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Also Read –