சர்ச்சைகளின் நாயகன்… இளையராஜா செய்த 4 தரமான சம்பவங்கள்!

இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினரா பதவி கொடுத்ததுதான் கடந்த சில நாள்களா டாப்பிக். கமல் ஒருபக்கம், “அவர் செய்த சாதனைக்குலாம் ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும், இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்ததை வாழ்த்துறேன்”னு ட்வீட் போடுறாரு. இன்னொரு பக்கம், “ராஜாவுக்கு கௌரவ பதவிகள் கொடுக்கணும். அதுல தப்பில்லை. ஆனால், யார் கொடுக்குறாங்கன்றதையும் எப்போ கொடுக்குறாங்கன்றதை கவனிச்சு பார்த்தா கொஞ்சம் நெருடலா இருக்கு”னு நிறைய பதிவுகள் வருது. அப்படியே அடுத்த பக்கம் புரட்டி பார்த்தோம்னா, மீம் கிரியேட்டர்கள் தங்களுக்கு கன்டன்ட் கிடைச்சிடுச்சுனு, “சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம், நீ ஒரு காதல் சங்கீதம்”னுலாம் பாட்டு போட்டு கலாய்ச்சுட்டு இருக்காங்க. சரி, அவருக்கு எம்.பி பதவி கொடுத்தது சரியா, தப்பானுலாம் நாம பேச வேணாம். இளையராஜா பண்ண தரமான 4 சர்ச்சைகளைப் பற்றி இந்த வீடியோல நாம பார்க்கலாம்.

பிரதமர் மோடி – இளையராஜா

‘ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன்’ன்ற நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னாடி ‘மோடியும் அம்பேத்கரும்’ அப்டின்ற தலைப்புல புத்தகம் ஒண்னை வெளியிட்டுச்சு. அந்த புத்தகத்துக்கு நம்ம இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தாரு. அதுல, “பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் போகுது. நம்ம நாட்டுல இருக்குற எல்லாத் துறைகளும் அதிகமாக வளர்ச்சி அடைஞ்சிட்டு வருது. உள்கட்டமைப்பு விஷயங்களும் சிறப்பாக முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அதுமட்டுமில்ல, சமூகநீதி தொடர்பாகவும் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துட்டு வறாரு. பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கு ஆதரவாக பிரதமர் பல்வேறு விஷயங்களை செய்கிறார். மோடி கொண்டு வந்த முத்தலாக் தடை போன்ற சட்டங்களையெல்லாம் அம்பேத்கர் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார். அம்பேத்கருக்கும் மோடிக்கும் இடையில் உள்ள ஆச்சரியமான ஒற்றுமைகளை இந்த நூல் மக்களுக்கு எடுத்துரைக்கும் என நம்புகிறேன். இருவருமே இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள். இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்ல. சிந்தித்ததை செயல்படுத்துவதில் நம்பிக்கைக் கொண்ட எதார்த்தவாதிகள்”னு எழுதியிருப்பாரு.

Ilayaraja - Modi
Ilayaraja – Modi

அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதியது கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. இப்போது இளையராஜாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பதவிகூட இந்த முன்னுரையாலதான் கிடைச்சதுனு பலரும் சொல்லிட்டு இருக்காங்க. இதற்கு இடையில் இந்த சர்ச்சைக் குறித்து இளையராஜா, கங்கை அமரனிடம், “என் மனதில் என்ன உள்ளதோ, உண்மையை சொல்வதற்கு தயங்க மாட்டேன். மற்றவர்களுடைய கருத்து வேறுமாதிரியாக இருக்கலாம். இது என்னுடைய கருத்து. மற்றவர்கள் கருத்து எனக்கு பிடிக்காவிட்டாலும், அது பிடிக்கவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். நான் கூறியதை அரசியலாக்க விரும்பவில்லை. மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்றும் சொல்ல மாட்டேன். ஓட்டுப் போடாதீர்கள் என்றும் சொல்ல மாட்டேன்”னு சொன்னதா செய்தியாளர்களிடம் கங்கை அமரன் தெரிவித்தார். அந்த முன்னரையை கங்கை அமரன் எழுதினார்னும் பேச்சுகள் அடிபட்டது. அதுக்கு கங்கை அமரன் எப்படி ரியாக்ட் பண்ணாருனும் நாம பார்த்திருப்போம். இந்த சர்ச்சைகள் கொஞ்சம் ஓய்ந்த உடன் இளையராஜா தன்னோட ட்விட்டர் பக்கத்தில், “நான் உன்னை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன்”னு பாடி ஒரு போஸ்ட் போட்ருந்தாரு.

பாரதிராஜா – இளையராஜா

மதுரையில் சில வருஷங்கள் முன்னாடி நடந்த பட விழாவில் பாரதிராஜா, இளையராஜாவைப் பற்றி, “நீ எல்லார்கூடவும் பேசு. பத்து நிமிஷம்கூட யார்கூடவும் உட்கார்ந்து பேசமாட்டேங்குற. தலைகனம் புடிச்சு ஆடுற. இருக்கும்போதே எல்லாரும் சந்தோஷமா இருந்துட்டு போவோம். இன்னொரு தடவை பிறந்தா வரப்போறோம். நாம மூணு பேரு. (அதாவது பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா) அதுல ஒருத்தன் இப்போ இங்க இல்லை. திரும்பவும் ஒண்ணா சேருவோம்”னு பேசுனாரு. இதுக்கு பதிலளிக்கும் வகையில் இளையராஜா, “மேடையில் பாரதிராஜா பேசுனது எல்லாத்தையும் எங்கிட்ட தனியா அவர் பேசியிருக்கனும். தனியா பேசுனா நான் கொடுக்குற பதில்ல அவரு வாயடைச்சு போவாரு. அதனாலதான் மேடைல பேசுனாரு.  தன் புகழை தானே பாடுவாரு, அடுத்தவனை குறை கூறுவாரு. இப்படிதான் இந்த ஜென்மன் கழியுது. அவரை மாதிரி குடிச்சுட்டு கூத்தடிக்கணும்னு நினைக்கிறாரு. அப்படி நான் மாற மாட்டேன். அவர் நினைக்கிற மாதிரியெல்லாம் என்னால இருக்க முடியாது. அவர் பேச்சு வெறும் பயித்தியக்காரன் பேச்சு”னு சொல்லியிருந்தார். இளையராஜாவின் இந்த பதிலுக்கு என்ன இவ்வளவு கொடூரமா பதில் சொல்றாருனு கடுமையான விமர்சனங்கள் எழுந்துச்சு. அதேநேரம் பாரதிராஜாவையும் இளையராஜா ரசிகர்கள் வைச்சு செஞ்சாங்க.

Ilayaraja
Ilayaraja

சாரு நிவேதிதா – இளையராஜா

சாரு, இளையராஜா ரெண்டு பேருமே என்னத்தையாவது பேசி சர்ச்சைல சிக்குற ஆள்கள்தான். இதுல ரெண்டு பேரும் மாறி மாறி விமர்சிச்சு ஒரு சர்ச்சைல சிக்குனாங்க. சாரு நிவேதிதா கனவுகளின் நடனம்னு ஒரு புத்தகம் எழுதுனாரு. இந்த புத்தகத்துல இளையராஜாவோட இசையை வந்து பயங்கரமா விமர்சிச்சு எழுதியிருந்தாரு. அதாவது, “காதல் பாடல்களுக்கு மியூசிக் போட சொன்னால், எழவுக்கு மியூசிக் போட்டு வைச்சிருக்காரு”னு எழுதுனாருனு நினைக்கிறேன். அதுக்கு இஅளையராஜா, “நான் எப்போதாவது காரில் வெளியூருக்குப் போகும்போது வழியில் மெயின் ரோடுகளில் உள்ள கடைகளில் பெயர்ப் பலகைகளைப் பார்ப்பேன். அதில் என் உருவத்தைத் வரைந்து, ‘ராஜா ஆடியோ சென்டர், ‘இசைஞானி எலக்ட்ரிகல்ஸ்’, ‘இளையராஜா பேக்கரி’னுலாம் எழுதியிருப்பாங்க. இது தங்கள் கடைகளை எளிதில் பிரபலப்படுத்திக் கொள்ளும் ஒரு யோசனை. இருந்தாலும் கூட, அவர்கள் என் பாடல்களைக் கேட்டு என் மேல் உள்ள உண்மையான பாசத்தால் அப்படி வைச்சிருக்காங்க.

‘நானும் ராஜாவும்’னு SPBகூட கச்சேரி பண்ணியிருக்காரு. எத்தனையோ இசைக்குழுக்கள் ‘ராஜா ராஜாதான்’ போன்ற பெயர்கள் உட்பட பல்வேறு தலைப்புக்கொடுத்து என்னுடைய படத்தையும் போட்டு இசை நிகழ்ச்சி நடத்தி பிழைக்கிறாங்க். அதிலொன்றும் தவறில்லை. ஆனால் அதேபோல வேறு சிலரும் தங்களையும் தங்கள் எழுத்துக்களையும் எளிதில் பிரபலப்படுத்திக்கொள்ள என் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த நப்பாசையால்தான் நீங்கள் குறிப்பிடும் அந்த நபரும் என்னைத் திட்டி எழுதியிருக்கிறார். என் பெயரை வைத்து அவர் பிரபலமாக நினைக்கிறார். ஆகிவிட்டுப் போகட்டுமே. நமக்கென்ன வந்தது. என்னைப் பற்றி எழுதவில்லையென்றால் அதை யாரும் படிக்க மாட்டார்கள். அதனால் அவரை யார் என்று வெளியில் தெரியாது. பெயரை வேண்டுமென்றே திணிக்க எத்தனையோ வழி. அதில் இதுவும் ஒன்று!”னு சொல்லியிருந்தாரு. அந்த சமயத்துல சாருவோட வாசகர்களும் இளையராஜா வாசகர்களும் பயங்கரமா ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டு பெரிய பதிவுகள்லாம் எழுதியிருக்காங்க.

ஒரு பேட்டியில் சாருவிடம் இதுதொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதுக்கு சாரு, “பாப் மார்லி இசையை குப்பைனு சொன்னதாலதான் நான் இளையராஜாவை அப்படி விமர்சிச்சேன். பாப் மார்லி ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த இசைக்கடவுள். அவரை விமர்சிக்கும்போது உண்டான என் கோபம் நியாயமானதுதான்”னு சொன்னாரு. அதேநேரம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பார்த்துட்டு கடவுளே நேர்ல வந்து மியூசிக் போட்டாதான் இப்படி ஒரு மியூசிக்கை போட முடியும்னும் பாராட்டுனாரு.

Ilayaraja
Ilayaraja

ராயல்டி – இளையராஜா

இளையராஜாவோட பாட்டை இப்போ கேக்கலாமா… இல்லை அதுக்கும் காசு கேப்பாரானு எல்லாரையும் குழப்ப வைச்சது இந்த ராயல்டி பிரச்னைதான். ஃபாரீன்ல இருந்து ஊர் பேர் தெரியாத கிராமங்கள் வரைக்கும் இளையராஜா இசை பிரபலம்தான். ஆனால், அவரோட பாட்டையெல்லாம் நிகழ்ச்சிகளில் பாட அவரிடம் முன்னனுமதி வாங்கனும்னு அவர் சொன்னது, பலர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நீங்க பாடுறதுக்கு காசு வாங்குறீங்க, அப்போ அந்தக் காசுல எனக்கும் பங்கு இருக்குல?னு இளையராஜா பேசுனதுலாம் அவர் ரசிகர்களுக்கு ஷாக்கா இருந்துச்சு. இல்லைனா, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்னும் சொன்னாரு. ராயல்டி பிரச்னையால ஸ்மியூல் தளத்துல இருந்து அவரோட எல்லாப் பாட்டையும் தூக்குனாங்க. குறிப்பா இந்த விஷயத்தில் எஸ்.பி.பி-யை அவர் பகைச்சிக்கிட்டது கொஞ்சம்கூட யாருக்கும் பிடிக்கலைனு சொல்லலாம். இளையராஜா பாடலை இனி பாடமாட்டேன்னும் எஸ்.பி.பி மனம் நொந்து போய் அறிக்கைலாம் வெளியிட்டாரு. அப்புறம் கொஞ்சம் சமாதானமா போனாங்க.

வெள்ளம் வந்தப்போ பேசுனது, ஸ்டேஜ்ல க்ரஸ் ஆன ஒருத்தர திட்டுனது, ரோகினியை திட்டுனது, 2 முறை தேசிய விருதுகளை பகிர்ந்து வாங்க மறுத்ததுனு ஏகப்பட்ட சம்பவங்களை மனுஷன் பண்ணியிருக்காரு. இளையராஜாவின் இப்படியான சர்ச்சைகளை எப்படி பார்க்குறீங்க?னு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read – தமிழ் சினிமாவின் மேஜிக்கல் டைரக்டர் – மியூசிக் டைரக்டர் காம்போக்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top