இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவதுஅலை மக்களைக் கடுமையாக பாதித்துள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடுகள் மிகவும் அதிகமாக நிலவுகிறது. கொரோனா தொற்றையே மாநில அரசுகள் கட்டுப்படுத்தத் திணறி வரும் சூழலில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் அல்லது பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள் ப்ளாக் ஃபங்கஸ் அல்லது மியூகோர்மைகோசிஸ் என்று அழைக்கப்படும் ஒருவகை தொற்று நோயால் பாதிப்படைந்து வருவது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், மருத்துவத்துறையில் இன்னும் துயரம் அதிகரித்துள்ளது. மியூகோர்மைகோசிஸ் அல்லது ப்ளாக் ஃபங்கஸ் தொடர்பான விபரங்களை இக்கட்டுரையில் பார்ப்போம்.
மியூகோர்மைகோசிஸ் என்றால் என்ன?
மியூகோர்மைகோசிஸ் என்பது தீவிரமான மற்றும் அரிதான பூஞ்சை தொற்று. அதேநேரம் மிகவும் ஆபத்தான தொற்றும் கூட. இந்த மியூகோர்மைகோசிஸ் சுற்றுசூழல் முழுவதும் இருந்து வருகின்றன. அதாவது இயற்கையான இடங்கள் பலவற்றிலும் காணப்படுகின்றன. மண், தாவரங்கள், காய்கறிகள் மற்றும் அழுகும் பழங்கள் ஆகியவற்றில் பொதுவாக காணப்படும் பூஞ்சைகளில் இவை காணப்படுகின்றன. ஏற்கெனவே, உடல்நல பிரச்னைகள் இருப்பவர்களையே இந்த நோய் அதிகமாகத் தாக்குகிறது. உடலில் ஏற்பட்டுள்ள காயம், மூக்கு, சைனஸ், நுரையீரல் மற்றும் தோல் வழியாக நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. சைனஸ் வழியாக நுழைந்தால் கண்கள் மற்றும் மூளையை அதிகளவில் பாதிக்கும்.
இணை நோய் உடையவர்கள் அதாவது நீரிழிவு நோய் போன்றவை உடையவர்களுக்கு இந்த நோய்தொற்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கும் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் நீண்டகாலமாக வென்டிலேட்டரில் சிகிச்சை எடுத்து வருபவர்களுக்கும் ப்ளாக் ஃபங்கஸ் அதிக ஆபத்தை ஏற்படுத்தும். உடல்நலக் கோளாறுகளால் மருந்துகளை எடுத்துக்கொண்டு அதனால் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கும் இந்தத் தொற்று ஏற்படும்.
ப்ளாக் ஃபங்கஸ் பாதிப்பில் இருந்து எவ்வாறு நம்மை காத்துக்கொள்ள முடியும்?
இந்தத் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான மிகச்சிறந்த வழி, வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொள்வதுதான். குறிப்பாக தோட்டங்கள், தூசி நிறைந்த பகுதிகள் மற்றும் அழுகும் குப்பைகள் இருக்கும் இடங்களுக்கு செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். சருமங்களை வெளிக்காட்டாமல் முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். மிக முக்கியமாக நீரிழிவு நோய் உடையவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள் சரியான சர்க்கரை அளவையும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவையும் கட்டுப்பாடாக வைத்திருப்பது அவசியம். ஸ்டிராய்டு சிகிச்சைப் பெறுபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த ப்ளாக் ஃபங்கஸ் ஏற்படாமல் இருப்பது தொடர்பாக உங்களது மருத்துவரிடம் கல்ந்தாலோசிக்க வேண்டும்.
ப்ளாக் ஃபங்கஸ் பாதிப்படைந்தால் ஏற்படும் அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல், வாந்தி மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வழிவது, கண்களைச் சுற்றி வீக்கம், கண் சிவப்பு, பார்வை குறைபாடு மற்றும் வலி, வாயை திறப்பதில் கடினம், முகத்தில் உணர்வின்மை மற்றும் முக வீக்கம், பற்கள் பலம் இழப்பு ஆகியவை ஏற்படும். ஆரம்பத்திலேயே தொற்று பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தால் எளிமையாக இதனைக் குணப்படுத்த முடியும் என்கின்றனர், மருத்துவர்கள்.
ப்ளாக் ஃபங்கஸ் பாதிப்புக்கு சிகிச்சை என்ன?
அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் உள்ளன. அவற்றை சில வாரங்கள் உட்கொள்ள வேண்டியது இருக்கும். மிகவும் கடுமையாக பாதிப்படைந்தால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வதை தடுக்க வேண்டும்.
எந்தெந்த மாநிலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது?
குஜராத் மாநிலத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ப்ளாக் ஃபங்கஸ் தொற்றுநோயால் பாதிப்படைந்துள்ளனர். சூரத் பகுதியில் மட்டும் சுமார் 15 நாள்களில் 40-க்கும் மேற்பட்டவர்கள் இந்த தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். பாதிப்படைந்தவர்களில் சுமார் எட்டு பேர் தங்களுடைய கண் பார்வையை இழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்படைந்தவர்களில் சுமார் 90 பேர் இறந்துள்ளனர். உறுதிப்படுத்தப்படாத 2000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்து இருக்கலாம் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா, டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் இந்தத் தொற்று அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
Also Read : ஜர்னலிஸ்ட் டு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் – யார் இந்த வீணா ஜார்ஜ்?