பொன்னியின் செல்வன் போஸ்டர்கள்ல இந்த 5 விஷயங்களை நோட் பண்ணீங்களா?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்போடு, கதையின் முக்கியமான ஐந்து கேரக்டர்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. போஸ்டர்கள்ல நாங்க நோட் பண்ண 5 விஷயங்களைப் பத்திதான் நாம இப்போ பார்க்கப்போறோம்.

பொன்னியின் செல்வன்

அமரர் கல்கியின் அமரகாவியம்தான் பொன்னியின் செல்வன். சோழ வம்சத்தில் புகழ்பெற்ற பேரரசான ராஜராஜ சோழன் என்று அறியப்படும் அருள்மொழி வர்மர் காலத்தில் நடக்கும் கதை. கிட்டத்தட்ட 10-ம் நூற்றாண்டில் நடக்கும் கதையில் வந்தியத்தேவன், ராஜராஜ சோழனின் தந்தை சுந்தரச் சோழர், அவரின் சகோதரி குந்தவை, சகோதரர் கரிகால் சோழன், நந்தினி, மந்தாகினி, ஆழ்வார்க்கடியான், பெரிய மற்றும் சிறிய பழுவேட்டரையர்கள் என பல கேரக்டர்கள் வந்து போகும். இத்தனை கேரக்டர்களை வைத்துக்கொண்டு சோழர் ஆட்சிக்காலத்தையே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருப்பார் கல்கி. வரலாற்றுச் சம்பவங்களோடு புனைவையும் கலந்து வெரைட்டி காட்டப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன், தமிழ் நாவல் உலகின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. இந்தக் கதையைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பி, படத்துக்கான பூஜை வரை போட்டுவிட்டார். ஆனால், அது அவருக்குக் கடைசி வரை கைகூடவில்லை. பிரமாண்ட நாவலை அதே பிரமாண்டத்துடன், கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களோடு எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

நாவலின் மையக் கதாபாத்திரங்களான அருள்மொழி வர்மர், வந்தியத் தேவன், குந்தவை, நந்தினி மற்றும் ஆதித்த கரிகாலன் ஆகிய ஐந்து கேரக்டர்களின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. போஸ்டர்களில் இடம்பெற்றிருக்கும் டீடெய்லிங் என்ன சொல்கிறது… வாங்க பார்க்கலாம்.

ஆதித்த கரிகாலன்

சுந்தரச் சோழரின் மூத்த மகனும் கதை நாயகன் பொன்னியின் செல்வனின் மூத்த சகோதரனுமான கரிகால் சோழன் கேரக்டரில் நடிகர் விக்ரம் நடித்திருக்கிறார். கதைப்படி, இயல்பாகவே முன்கோபக்காரரான கரிகால் சோழன், காஞ்சிபுரத்தில் இருந்து சோழர் படையை போருக்குத் தயார் செய்து வருவார். நந்தினியின் முன்னாள் காதலன் கரிகால் சோழன். மூவிங் ஸ்டைலில் வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் தீப்பற்றி எரியும் வாள் ஒன்றை ஆதித்த கரிகாலன் கையில் பிடிக்க முயற்சிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. குதிரையில் இருந்தவாறே தரையில் இருக்கும் வாளை அவர் எடுக்க முயற்சிக்கிறார். அதை உற்றுப்பார்த்தால் மட்டுமே நம்மால் கண்டுகொள்ள முடிகிறது.

ஆதித்த கரிகாலன்
ஆதித்த கரிகாலன்

விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா படத்தை இயக்குநர் பாலா எடுத்தார். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹீரோயினோடு துருவ் பைக்கில் சென்றுகொண்டிருப்பார். அந்த போஸ்டரில் துருவ் விக்ரமின் முகம், ஒரிஜினாலிட்டியாக இல்லாதது போன்ற ஒரு ஃபீலைக் கொடுத்திருக்கும். அதேபோன்றதொரு ஃபீலிங்கைத்தான் ஆதித்த கரிகாலன் போஸ்டரும் நமக்குக் கொடுக்கிறது. பட்டத்து இளவரசனுக்கான துடுக்கும், அதற்கேற்ற காஸ்ட்யூமும் சிறப்பாகவே இருக்கின்றன என்றாலும், இந்த போஸ்டரில் ஏதோ ஒன்று மிஸ்ஸாவது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

குந்தவை

பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தவர்களுக்குத் தங்களுக்கு இப்படி ஒரு சகோதரி இல்லையே என்ற உணர்வை ஏற்படுத்திய கேரக்டர் குந்தவை. நாவலில் இருக்கும் குந்தவையின் கேரக்டர் மீதான பாசத்தால், எத்தனையோ தாய், தந்தைகள் தங்கள் செல்லக் குழந்தைகளுக்கு அந்தப் பெயரை சூட்டி மகிழ்ந்தது, அந்த கேரக்டரின் வீச்சுக்கு இன்னொரு உதாரணம் என்றே சொல்லலாம். அப்படியான, அடர்த்தியான கேரக்டரில் குந்தவையாக த்ரிஷா நடித்திருக்கிறார்.

குந்தவை
குந்தவை

போஸ்டரைப் பார்க்கும்போது கோயில் ஒன்றின் நுழைவாயிலில் பெண் குழந்தைகள் புடைசூழ மெஜஸ்டிக்கான லுக்கில் த்ரிஷா இருப்பதுபோன்ற போஸ்டர் லைக்ஸ் அள்ளுகிறது. ஐந்து போஸ்டர்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் போஸ்டர் இதுதான் என்று தாரளமாகச் சொல்லலாம். த்ரிஷாவின் ஹேர்ஸ்டைலும் பளீர் பட்டு காஸ்ட்யூமும், அணிந்திருக்கும் ஆபரணங்களும் இளவரசிக்கான மிடுக்கை உணர்த்துகின்றன. அதேநேரம், பொன்னியின் செல்வன் நாவலைப் படிக்கையில் குந்தவை கேரக்டரை டஸ்கி டோனிலேயே நாம் உருவகப்படுத்தியிருப்போம். போஸ்டரில் Fair ஆக இருக்கும் த்ரிஷாவைச் சுற்றியிருக்கும் குழந்தைகள் அந்த டோனில் இருக்கிறார்கள். அதேபோல், சைவ சமய நெறியைப் பின்பற்றும் சோழ வம்ச இளவரசியைச் சுற்றி நிற்கும் குழந்தைகள் வைணவ நாமம் இட்டிருப்பது கேள்வியை எழுப்புகிறது.

நந்தினி

பொன்னியின் செல்வன் கதையில் நந்தினி, மந்தாகினி என டபுள்ரோல் கேரக்டர் இது. பாண்டிய மன்னனுக்காகப் பழிவாங்கும் சபதமேற்ற நந்தினி, சோழ வம்சத்தின் மூத்த தளபதியான வயோதிகர் பெரிய பழுவேட்டரையரை மணந்து அதற்கான சதித்திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்வார். அழகும் ஆபத்தும் கலந்த கலவையான கேரக்டர். இந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார். கேரக்டருக்கு ஐஸ்வர்யா சரியான தேர்வுதான் என்றாலும், போஸ்டரில் ஏனோ நந்தினியின் கேரக்டருக்கு அவர் நியாயம் சேர்க்கவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. நாவலில் நந்தினியை அறிந்தவர்கள் அவர் இளம் வயதினராகத்தான் இருப்பார் என்று எண்ணுவார்கள். ஆனால், போஸ்டரில் நந்தினி கேரக்டர் கொஞ்சம் வயதானதாகத் தோன்றுகிறது.

நந்தினி
நந்தினி

ஒருவேளை மந்தாகினி கேரக்டராக இருக்குமோ என்று யோசித்தால், கதைப்படி அவர் எந்தவித மேக்கப்பும் ஆபரணங்களும் இல்லாமலேயே பெரும்பாலான இடங்களில் தோன்றுவார் என்பதால், இயல்பாகவே அந்த எண்ணம் தோன்றவில்லை. கைகளில் அணிந்திருக்கும் மோதிரங்கள், பெரிய தோடுகள், ஹேர்ஸ்டைல், கழுத்தை ஒட்டி அணிந்திருக்கும் ஆபரணம் போன்றவை கேரக்டர் ரெஃபரென்ஸை சிறப்பாகவே உணர்த்துகின்றன. அதேபோல், ஒரு கைக்குள் மற்றொரு கை இருக்கும்படியான Posture எப்போதும் வேறொரு சிந்தனையில் இருக்கும் நந்தினியை நம் கண்முன் அப்படியே கொண்டுவந்து நிறுத்துகின்றன என்பதில் சந்தேகம் இல்லை.

வந்தியத்தேவன்

பொன்னியின் செல்வன் நாவலின் ஹீரோ அருள்மொழி வர்மர்தான் என்றாலும், நிஜ ஹீரோ வந்தியத்தேவன்தான். ஆடிமாதத்தில் பொங்கிப் புரளும் காவிரி நதி தீரத்தை ஒட்டி வந்தியத்தேவன் பயணித்தோடுதான் பொன்னியின் செல்வன் நாவலே தொடங்கும். கதை முழுவதும் பயணிக்கும் அப்படியான முக்கியமான கேரக்டரை நடிகர் கார்த்தி ஏற்றிருக்கிறார். வீரன், நாவன்மையில் அசகாய சூரன் நம்ம வந்தியத்தேவன். கொஞ்சம் நிறைய ஹ்யூமரோடு மிரட்டல் ஃபைட்டும் இந்த கேரக்டருக்கு அத்திவாசியத் தேவை. அந்த வகையில் கார்த்திக்கு இது Suit ஆகும் என்றே சொல்லலாம்.

வந்தியத்தேவன்
வந்தியத்தேவன்

போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் `வந்தியத்தேவன்’ கார்த்தி கழுத்தில் சிவப்பு நிறத்தில் ஆடையொன்றை அணிந்திருக்கிறார். கண்களைச் சுற்றி அணிந்திருக்கும் மேக்-அப், கைவிரல்களில் அணிந்திருக்கும் பொய் விரல்கள் போன்றவை கூத்து ஒன்றில் அவர் ஆடிக்கொண்டிருக்கிறார் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. கதைப்படி வந்தியத்தேவன், தனது நண்பனான கந்தமாறனைச் சந்திக்க சம்புவரையர் மாளிகைக்குச் செல்வார். அங்கு இரவில் நடக்கும் குரவைக் கூத்தையும் அதைத் தொடர்ந்து நடக்கும் சதி ஆலோசனைகளையும் வந்தியத்தேவன் எதேச்சையாகக் கேட்க நேரிடும். ஒருவேளை அந்தப் பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படமாகக் கூட இது இருக்க வாய்ப்பிருக்கிறது.

பொன்னியின் செல்வன்

சோழ சாம்ராஜ்யத்தின் செல்ல இளவரசர் கதையின் நாயகர், யானைகளோடு நெருங்கிப் பழகும் தன்மையும் மக்களின் மனதை வெல்லும் பேராற்றலும் கொண்டவராக பொன்னியின் செல்வன் கேரக்டரை வடிவமைத்திருப்பார் கல்கி. அப்படியானதொரு கனமான கேரக்டரை ஜெயம் ரவி ஏற்றிருக்கிறார். போர்க்களம் ஒன்றின் பின்னணியில் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்க முழங்காலிட்டு அமர்ந்த கோலத்தில் பொன்னியின் செல்வன் போஸ்டரில் இடம்பெற்றிருக்கிறார். தரையில் குத்தியவாறு நிற்கும் வாளை வலது கையில் அவர் பிடித்திருக்க மற்றொரு கை தளர்ந்த நிலையில் இருக்கிறது. தளர்ந்துபோன நிலையில், வெறித்த பார்வையோடு அவர் இருப்பது போர் நிறைவடைந்த தருணத்தைக் குறிப்பால் உணர்த்துகிறது. கவச உடையும் முகத்தில் இருக்கும் ரத்தக் கறைகளும் அதை உறுதி செய்கின்றன.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் நாவலின் தொடக்கத்தில் இலங்கையில் படைகளோடு முகாமிட்டிருக்கும் அருள்மொழி வர்மர், அந்நாட்டு மன்னனை வென்று பாதியளவு நிலப்பரப்புகளைக் கைப்பற்றியிருப்பார். அப்படியான ஒரு போர்ச்சூழலில் இருப்பதுபோன்ற காட்சிதான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியாகியிருக்கிறது எனத் தோன்றுகிறது. தீ, வாள் போன்ற ரெஃபரென்ஸ்கள் பாகுபலி போஸ்டரை நினைவுபடுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. பொன்னியின் செல்வன் படம் பற்றிய முதல் அறிவிப்பில் இருந்தே சோழர்களின் அடையாளமான புலியின் முகம் பொறிக்கப்பட்ட வாளுக்கு முக்கியமான இடம் தரப்பட்டிருந்தது. அந்தவகையில், இப்போது வெளியிடப்பட்டிருக்கும் 5 போஸ்டர்களில் பொன்னியின் செல்வன் மற்றும் ஆதித்த கரிகாலன் ஆகிய இரண்டு போஸ்டர்களில் வாள்கள் இடம்பெற்றிருக்கின்றன.

Also Read – `கைகொடுக்குமா புதிய கணக்கு’ – தெரிந்தே விஜய் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க்..!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top