தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அன்போடு அழைக்கப்படும் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான நடிகர் காத்திக்கு இன்று பிறந்தநாள். சிவகுமாரின் மகன்; சூர்யாவின் தம்பி; சினிமா குடும்பம் என்பதால் மட்டும் கார்த்தியை எல்லோருக்கும் பிடித்துவிடாது. மக்களுக்கு கார்த்தியை பிடித்திருப்பதற்கு கீழே உள்ள காரணங்களும் முக்கியமானவை.
கார்த்தியின் மிக பெரிய பலமே வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதுதான். இதை அவரது கரியரின் ஆரம்பத்திலேயே நிரூபித்துவிட்டார். `பருத்திவீரன்’ மாதிரியான ஒரு பக்கா கிராமத்து படத்தில் நடித்த பின்னர் `ஆயிரத்தில் ஒருவன்’ மாதிரியான வரலாற்று பின்னணியில் ஒரு படமும் அதன் பின்னர் `பையா’ மாதிரியான ஸ்டைலிஷ் கதாபாத்திரத்திலும் நடித்தார். இப்படி தன்னுடைய கரியரில் அடுத்தடுத்து பல வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடிப்பதைப் போன்றே புதுமையான முயற்சிகளை துணிந்து எடுப்பதும் அவரின் பலமே. அவரது கரியரின் மிக முக்கியமான கட்டத்தில், ஹீரோயின் இல்லாமல்; பாடல்கள் இல்லாமல் ‘கைதி’ மாதிரியான ஒரு எக்ஸ்ப்ரிமெண்டல் படத்தில் துணிந்து நடித்திருந்தார், கார்த்தி.
ஹீரோக்கள் தங்களது படங்களில் சமூக கருத்துகள் பேசிவது ஒரு வகையான சமூக அக்கறை என்றால், சில ஹீரோக்கள் ஒரு சில தவறான காட்சிகளில் நடிக்காமல் இருப்பதும் சமூக அக்கறைதான். கார்த்தி தனது முதல் படத்தில் இருந்து சமீபத்தில் நடித்த ‘சுல்தான்’ படம் வரைக்கும் எந்தப் படத்திலும் புகைப்பிடிக்கிற மாதிரியான காட்சிகளில் நடித்ததேயில்லை. இதுவும் தமிழ் ரசிகர்களுக்கு கார்த்தியைப் பிடிப்பதற்கு மிக முக்கியமான காரணம்.
வித்தியாசமான கதைக்களம், புதுமையான முயற்சிகள் மாதிரியே தனது படங்களின் இயக்குநர்கள் தேர்விலும் ரொம்பவே கவனமாக இருப்பார். இதுவரைக்கும் கார்த்தி நடித்து ரிலீஸான படங்களின் பட்டியலைப் பார்த்தால், ஒரு இயக்குநரோடு ஒரு படம் என்கிற அளவில்தான் நடித்திருக்கிறார். யாரையுமே அவர் ரிப்பிட் செய்யவேயில்லை. இதுவே அவரின் கதைத் தேர்வில் இருக்கும் கவனத்தை காட்டுகிறது. கார்த்தி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் ஒரே இயக்குநர் மணிரத்னம் மட்டும்தான். ‘காற்று வெளியிடை’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துவருகிறார்.
தனது அண்ணன் சூர்யாவைப் போலவே கார்த்திக்கும் தெலுங்கு சினிமாவிலும் மார்க்கெட் இருக்கிறது. அதனை தக்கவைத்துக்கொள்ள கார்த்தி பல முயற்சிகளை எடுத்து வருகிறார். அப்படித்தான் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவோடு இணைந்து ‘தோழா’ படத்தில் நடித்தது; தனது படங்களுக்கு தெலுங்கிலும் தானே டப்பிங் செய்வது என பல முயற்சிகள் எடுத்து அதற்கு நல்ல ரெஸ்பான்ஸூம் வந்திருக்கிறது.
Also Read – நயன்தாரா ஃபேன்ஸே உயிர்கொள்ளுங்கள்… உங்களுக்கான சின்ன குவிஸ்!
[zombify_post]