Sulthan

கார்த்தியின் கமர்ஷியல் வொர்க்அவுட் ஆகியிருக்கிறதா… எப்படி இருக்கிறார் சுல்தான்?

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் `சுல்தான்’. ஒரு கிராமத்தைக் காப்பாற்ற ரௌடிகளை வைத்தே ரௌடியிஸத்தை ஒழிக்கும் கதைதான் சுல்தானுடையது.

சென்னையை அலறவிடும் தாதாவாக நெப்போலியன். அவருக்குப் பிறந்த மகன் கார்த்தி. பிறக்கும்போதே அம்மாவை இழக்க நேர்கிறது. நெப்போலியன் பார்க்கும் தொழில் பிடிக்காத கார்த்தி, மும்பைக்கு தன் படிப்புக்காக செல்கிறார். இதற்கிடையில் சேலம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், ஒரு ரௌடியிடமிருந்து தங்களது ஊரைக் காப்பாற்றுவதற்காக நெப்போலியனிடம் உதவி கேட்டு வருகிறார்கள். ஆனால், போலீஸார் நடத்தும் என்கவுன்டரில் நெப்போலியன் இறந்துவிட, கார்த்தி அந்த புராஜெக்ட்டை டேக்ஓவர் செய்கிறார். இதற்கிடையில் ராஷ்மிகாவுடன் காதல், ரௌடிகளுடன் மோதல் என இப்படியாக கதை நகர்கிறது. இறுதியில் எப்படியும் ரௌடிகளை ஒழித்து கிராமத்தைக் காப்பாற்றிவிடுவார்தான். அது எப்படி இருக்கிறது எனப் பார்ப்போம்.

சுல்தான்
  • கார்த்தியின் நடிப்பு படத்தில் சிறப்பாய் வொர்க்அவுட் ஆகியிருக்கிறது. காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், ரௌடியைத் திருத்தி விவாசயம் செய்ய வைக்கும் காட்சிகள் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். சில எமோஷன் காட்சிகளில்கூட தன் பெஸ்ட்டை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்.
  • ராஷ்மிகா மந்தனாவுக்கு இதுதான் தமிழில் முதல் படம். அவரது க்யூட் ரியாக்‌ஷன்களால் ஆடியன்ஸை கவர்கிறார். ரியாக்‌ஷன்களை மட்டுமே நம்பி ஸ்க்ரீனை நிரப்பமால் கதையை உணர்ந்து கொஞ்சம் நடிப்பை இன்னுமே நன்றாக வெளிப்படுத்தியிருக்கலாம்.
  • தமிழ் சினிமாவில் அடித்துத் துவைத்த கமர்ஷியல் கதை, கூடவே விவசாயம் இதுதான் சுல்தான் படத்துடைய கதை. ஆனால், அதை ரசிக்கும்படியான திரைமொழியில் சொல்லியுள்ளார் பாக்கியராஜ் கண்ணன். ஆனால், படத்தின் பல இடங்களில் தெலுங்கு நெடி அடிக்கிறது. அதை மட்டும் மாற்றி கொஞ்சம் தமிழ் தன்மையோடும் எடுத்திருக்கலாம்.
சுல்தான்
  • ரௌடியாக கொஞ்ச நேரம் மட்டுமே நடித்ததால் நெப்போலியனின் கதபாத்திரம் மனதில் பதியவில்லை. அவருக்கு உதவியாளராக நடித்த லாலுவுக்கு படத்தில் மிக முக்கியமான ரோல். அதை உணர்ந்து வழக்கம்போல் தனது பெஸ்ட்டைக் கொடுத்திருக்கிறார். ஆனால், அவருடைய முந்தைய சில படங்களுக்கு வந்த அதே பிரச்னைதான் இதிலும். இவரது டப்பிங்கில் பிரச்னை இருப்பதால், சில இடங்களில் இவர் சொல்ல வருவது என்னவென்றே தெரியவில்லை. கே.ஜி.எஃப் படப் புகழான ராமை அப்படிப் பார்த்துவிட்டு இதில் இப்படிப் பார்ப்பது சற்று வருத்தம்தான்.
  • காமெடி கதாபாத்திரத்தில் யோகி பாபு – சதீஷ் காம்போ. யோகி பாபுவுக்கு கால்ஷீட் பிரச்னை இருந்திருக்கும் போல. அவ்வப்போது வந்தவர், ஒரு கட்டத்தில் அப்படியே காணாமல் போகிறார். ஆனால், வந்த சில இடங்களில் ஓரளவு கிச்சு கிச்சு மூட்டுகிறார். வெளியூரில் இருந்து வரும் கார்த்தியுடன் வரும் சதீஷ் படத்தில் ரெண்டே இடத்தில்தான் வருகிறார். காமெடிக்கு பெரிதாக ஸ்கோப் இல்லாத கதையென்பதால் இருவரும் சட்டென காணாமல் போய்விடுகிறார்கள்.
  • பாடல்களுக்கு விவேக் மெர்வின், பின்னணிக்கு யுவன் இசையமைத்திருக்கின்றனர். ஆக்‌ஷன் காட்சிகள் கொடுக்கும் பிரமாண்டத்தை முடிந்தவரை தன்னுடைய இசையின் மூலம் கொடுத்திருக்கிறார் யுவன். பாடல்கள் அவ்வளவாக மனதில் பதியவில்லை. படத்துடைய விறுவிறுப்பைக் கூட்டுவதற்கு சத்யன் சூரியனின் கேமரா சிறப்பான உழைப்பை வெளிப்படுத்தியிருக்கிறது. ராஷ்மிகாவை இன்னும் அழகா காட்டியிருக்கலாம் ப்ரோ!

மொத்தத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாலியான ஒரு கமர்ஷியல் பட அனுபவத்திற்கு சுல்தானை விசிட்டலாம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top