நீங்க நல்லவரா கெட்டவரா’ங்குற ஐகானிக் கேள்விக்குப் பல காலகட்டங்கள்லயும் பல மாதிரி பதில் சொல்லிருக்க கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்துல சொல்லிருப்பாரு… `நான் நிறைய நல்லதும் பண்ணிருக்கேன். கெட்டதும் செஞ்சிருக்கேன். ஆனால், நான் செத்தாலும் அழிக்க முடியாத பாவம், என் நெத்தில எழுதியிருக்கு. To Answer your Question, ரெண்டும் சேர்ந்ததுதான் நான்.. I’m a Hero; I’m a Villain’னு மிரட்டலா ஒரு பதில் சொல்வாரு. அதுதான் ரைட்டர் கமலோட ஸ்பெஷல். ஒரு நடிகரா கமல்ஹாசன் தொட்ட உயரம் அசாத்தியமானது. ஆனால், என்னைக் கேட்டா ரைட்டர் கமல், இன்னுமே ஸ்பெஷல்னுதான் சொல்லுவேன். அப்படி ஒரு இயக்குநரா கமல்ஹாசன் பண்ண சம்பவங்களைப் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.
கமல்ஹாசன் முன்தயாரிப்பு
குழந்தை நட்சத்திரமாவே நடிக்க வந்துட்டாலும், எப்படியாவது ஒரு டைரக்டராகணும்ங்குறதுதான் கமலோட கனவா இருந்துருக்கு. ஆரம்ப காலகட்டங்கள்ல ஒரு உதவி நடன இயக்குநரா இருந்து பின்னாட்களில் உதவி இயக்குநராவும் பல படங்கள்ல வேலை பார்த்தார். ஒரு கட்டத்துல அவரோட மென்டாரான கே.பாலச்சந்தர் சொன்னதுக்கு அப்புறம்தான் நடிக்குறதுல முழு ஈடுபாடு காட்ட ஆரம்பிச்சார் கமல். நாம ஒரு நடிகர்தான், நடிச்சுட்டுப் போனா போதும்னு இல்லாம சினிமாங்குற கலை வடிவத்தோட எல்லா அம்சங்களையும் கொஞ்சம் கொஞ்சமா Explore பண்ணிட்டே இருந்தார். அவர் அளவுக்கு மற்ற துறைகளில் ஈடுபாடு காட்டுன இன்னொரு நடிகரைப் பார்க்குறது அபூர்வம். அதனால, கமல் சீக்கிரமாவே டைரக்டராகிடுவார்னுதான் எல்லாரும் எதிர்பார்த்தாங்க. ஆனால், எல்லா விதத்திலும் தன்னை தயார்படுத்திட்டு இருந்த கமல், இயக்குநர் அவதாரம் அவ்வளவு சீக்கிரம் எடுக்கலை. இன்னும் சொல்லப்போனா கமல் டைரக்டர் ஆனதே ஒரு ஆக்சிடெண்டுனு சொல்லலாம். என்ன நடந்துச்சு வாங்க பார்க்கலாம்.
இயக்குநர் கமல்ஹாசன்
ஹேராம் (2000)
கமல் இயக்கிய முதல் தமிழ் படம். காந்தியைப் பற்றி தவறான எண்ணத்தோடு தாம் இருந்ததாகவும் ஒரு கட்டத்தில் அவரைப் பற்றி புரிந்துகொண்ட பிறகு ஹேராம் படத்தை எடுத்ததாகவும் கமல் சொல்லியிருப்பார். சுதந்திரமடைந்த காலத்தில் இந்தியாவைப் பற்றியும் பிரிவினைவாதம் பற்றியும் காந்தி படுகொலையை மையப்புள்ளியாகக் கொண்டு கதையை நகர்த்தியிருப்பார் இயக்குநர் கமல். படத்தைப் பத்தி ஒரு இடத்தில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், `ஹேராம் படத்தை 30,40 தடவைக்கு மேல பார்த்திருப்பேன். ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் ஒவ்வொரு விதமா எனக்குத் தெரியுது’ என்று சொல்லியிருப்பார்.
டெக்னிக்கலாவே மிரட்டலான படம் ஹேராம். நிகழ்காலத்தில் நடக்குற காட்சிகளை எல்லாம் பிளாக் அண்ட் வொயிட்லயும் பீரியட் டைம்ல நடக்குற காட்சிகளை எல்லாமே சேபிஃயா டோன்லயும் காட்டியிருப்பாங்க. ஓபனிங் சீனைத் தவிர வேற எங்கேயும் நீல நிறம் பயன்படுத்தப்பட்டிருக்காது. அதேபோல், நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகளில் வன்முறையை மட்டும் நாம் இன்னும் கைவிடவே இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் தீயை மட்டும் அதோட ஒரிஜினல் கலர்ல காட்டியிருப்பாங்க. படத்தின் ஷூட்டிங் முடிந்தபிறகு இசையமைப்பாளர் எல்.சுப்பிரமணியத்துக்கும் கமலுக்கு கருத்து வேறுபாடு ஏற்படவே, ரீஷூட் பண்ணாமலேயே ஏற்கனவே இருந்த ஃபூட்டேஜூக்கு ஏற்றபடி பாடல்களையும் பின்னணி இசையையும் இளையராஜா போட்டுக்கொடுத்தார். படத்தில் மதத்தை யானை வாயிலாகக் காட்சிப்படுத்தியிருப்பார் கமல். கலவரத்தில் மனைவி கொல்லப்பட்ட நிலையில், ஆத்திரத்தில் முஸ்லீம் ஒருவரைக் கமல் கொன்றுவிடுவார். அப்போது அதுல் குல்கர்னியிடம் பேசுகையில், பின்னணியில் பாகன் இறந்துகிடக்கும் நிலையில் யானை இருக்கும். ஸ்ரீரங்கம் திரும்பி மாமாவோடு காரில் போகையில் காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கும் யானையை கமல் பார்த்தபடியே செல்வார். அடிப்படையில் நல்லவரான சாகேத்ராம் கேரக்டரையும் அம்ஜத் அலிகான் கேரக்டரையும் வைத்து மதநல்லிணக்க பாடம் எடுத்திருப்பார் இயக்குநர் கமல். இப்படி படம் நெடுக குறியீடுகள் மூலம் குறிப்பால் உணர்த்தியிருப்பார்கள். படத்துக்கு எதிராக ரிலீஸுக்கு முன்பாக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக கொல்கத்தாவில் வன்முறை வெடிக்கும் அளவுக்கு சூழல் சென்றது. ஆனால், ரிலீஸுக்குப் பிறகு படத்தைப் பார்த்துவிட்டு அம்மாநில அரசு கமலிடம் வருத்தம் தெரிவித்தது. இந்தப் படத்தின் கிளைமேக்ஸில் காந்தியின் பேரன் கேரக்டரில் உண்மையான காந்தி பேரனான துஷார் காந்தியே நடித்திருந்தார்.
ஹேராமுக்கு முன்னாடியே கமல் ஒரு படத்தை இயக்கியிருந்தார். அது எந்தப் படம்னு தெரிஞ்சிருந்தா கமெண்ட்ல சொல்லுங்க.. இல்ல எங்களுக்குத் தெரியாதுங்குறவங்க, அது எந்தப் படம்னு தெரிஞ்சுக்க வீடியோவைத் தொடர்ந்து பாருங்க.
விருமாண்டி (2004)
ஒரே கதையை ஒவ்வொருவருடைய கோணத்திலும் சொல்வதை ராஷாமோன் எஃபெக்ட்னு சொல்வாங்க. அப்படி ராஷாமோன் எஃபெக்டைப் பயன்படுத்தி தமிழ் சினிமால, ஏன் இந்தியன் சினிமாவுலயே முதன்முதல்ல படம் எடுத்த பெருமை டைரக்டர் கமலையே சாரும். இதுல இருக்க பெரிய சிக்கலே, மக்களுக்கு அதை சரியா புரியுற வகைல சொல்லணும்ங்குறதுதான். ஆனால், இந்த சவாலையெல்லாம் தாண்டி விருமாண்டியோட ஸ்க்ரீன்ப்ளே அவ்வளவு பவர்ஃபுல். விருமாண்டி படத்துக்கு முதலில் வைத்த பெயர் சண்டியர். ஆனால், ஒருசில பிரச்னைகள் ஏற்படவே பெயரும் மாற்றப்பட்டது. இந்தப் பட ரிலீஸின்போது கமல் கொடுத்த ஒரு பேட்டி படத்தை விட பரபரப்பாகப் பேசப்பட்டது.
மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்த தமிழ் படங்களில் மிக மிக முக்கியமானது விருமாண்டி. குறிப்பாக ஏஞ்சலா காத்தமுத்து கேரக்டரைசேஷன் பெரிதாகக் கவனம் ஈர்த்தது. கொத்தாளத்தேவர் கேரக்டர் மூலம் பசுபதி என்கிற பெர்ஃபாமரும் பேசப்பட்டார். நான் லீனியர் பானியில் எடிட் செய்யப்பட்டிருந்த இந்தப் படம் டெக்னிக்கலாகவும் சரி ஸ்கிரீன்பிளேவாகவும் சரி தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக வரலாற்றில் பதிவானது.
Also Read – `இவனுங்க திருந்திட்டா… நாம எப்படி அரசியல் பண்றது..?’ சத்யராஜ் அரசியல் அலப்பறைகள்!
விஸ்வரூபம் 1 (2013)
தமிழில் உலக அளவிலான தீவிரவாதம் பற்றி துணிந்து பேசிய படம். படத்துல டைரக்டர் கமலோட டச் ஓபனிங் சீன்ல இருந்தே தொடங்கிடும். புறாக்களோட பின்னணியில் டைட்டில் கார்டு போடுவாங்க. அப்பவே சொல்லிடுவார் கிளைமேக்ஸ் கனெக்ஷனை… அதைத் தெரிஞ்சுக்க நீங்க படத்தை ஃபுல்லா பார்க்க வேண்டி வரும். வழக்கமா கமல் படங்கள்ல அதிகமா ஒரு சைக்காட்ரிஸ்டோட படத்தோட முக்கியமான கேரக்டர்கள் உரையாடுற சீன் வரும். அதுமாதிரி இந்தப் படத்துல கமலோட அறிமுகமே எப்படி இருக்கும்னா, அவரோட மனைவி சைக்காட்ரிஸ்ட் ஒருத்தவங்களோட உரையாடுற மாதிரியான சீன்லதான் அறிமுகம் இருக்கும். அதேமாதிரி டயலாக்குகளுக்கு அவ்வளவு மெனக்கெடுவார் கமல். இந்தப் படத்துலயும் நீங்க நல்லவரா கெட்டவரானு அவரைப் பார்த்து கேக்குற கேள்விக்கு சொல்ற பதில் டிரெய்லர்லயே மாஸ் கிளப்புச்சு. இந்தப் படத்துல பின்னணியில் தண்ணீர் சொட்டும் ஒலியில் கமல் டிரான்ஸ்ஃபர்மேஷன் சீன் ஒண்ணு வரும். தமிழ் சினிமாவில் ஒன் ஆஃப் தி பெஸ்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன் சீன்னு கொண்டாடுப்படுற அளவுக்கு அந்த சீன்ல மாஸ் எலமெண்ட்டும் டீடெய்லிங்கும் காட்டியிருப்பார் கமல்.
இன்னொரு பக்கம் பார்த்தா உலக அளவினா தீவிரவாதத்தைப் பத்தி டீடெய்லிங்கா தமிழ்ல பேசுன முதல் படம்னு விஸ்வரூபத்தைச் சொல்லலாம். அதுவே இவரது படத்துக்கு பிரச்னையாவும் மாறுச்சு. வழக்கம்போல இந்தப் படத்துக்கும் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த நாட்டை விட்டே போறதைத் தவிர எனக்கு வழியில்லை என்று கமல் அதிரடி ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். பின்னாளில் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றதோடு விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தது. ஒசாமா பின்லேடன் பிரசன்ஸ், ஒபாமானு பல விஷயங்களை கனெக்ட் பண்ணிருப்பார் டைரக்டர் கமல்.
விஸ்வரூபம் 2 (2018)
விஸ்வரூபம் படத்தோட சீக்வெலா வந்த படம் இது. முதல் பாகத்தின் பெரும்பகுதி அமெரிக்காவில் நடந்த நிலையில், விஸ்வரூபம் 2 இந்தியாவில் நடப்பதாக அமைந்தது. விஸ்வரூபம் முதல் பாகம் போலவே, இந்தப் படத்திலும் டயலாக்குகள் பெரிதாகப் பேசப்பட்டன. `எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை பிரதர். ஆனால், தேசதுரோகியா இருக்கது தப்பு’ போன்ற டயலாக்குகள் அப்ளாஸ் அள்ளின. வழக்கமான கமல் படங்களைப் போல டீடெய்லிங் மாஸாக இருந்தாலும் பொருளாதாரரீதியிலான சில பிரச்னைகள் படத்தின் ரிலீஸின்போது ஏற்பட்டன. அதனாலேயே பல இடங்களில் படத்தைத் திரையிட முடியாமல் போனது. ஆனால், முந்தைய முறை போல கமலிடம் இருந்து பெரிதாக ரியாக்ஷன் வரவில்லை. 2014ம் ஆண்டே ரிலீஸ் பண்ண வேண்டிய படம் வந்தது 2018 ஆகஸ்டில்தான். தாமதம் ஒருவகையில் இந்தப் படத்துக்கான வரவேற்பையும் பாதித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
இதுதவிர, கமலின் கனவுப் படமான மருதநாயகம், சபாஷ் நாயுடு, தலைவன் இருக்கின்றான் போன்ற படங்களையும் அவர் இயக்குவதாக இருந்தது பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டன. ஸ்கிரீன்பிளேவிலும் கமல் பல படங்களில் சம்பவம் பண்ணியிருக்கிறார். குரு, மீண்டும் கோகிலா, ராஜபார்வை, விக்ரம் 1, தேவர் மகன், மகளிர் மட்டும், குருதிப்புனல், காதலா காதலா, ஆளவந்தான், பஞ்சதந்திரம், தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன், மன்மதன் அம்பு, உத்தம வில்லன், தூங்கா வனம், கடாரம் கொண்டான் போன்ற படங்களுக்குத் திரைக்கதை, வசனம் உள்ளிட்ட வகைகளில் பங்காற்றியும் இருக்கிறார் கமல்ஹாசன். உத்தமவில்லன் படத்தோட பாட்டுல சாகா வரம்போல் சோகம் உண்டோனு ஒரு லைன் வரும்.. தமிழ் சினிமா இருக்க வரை அப்படி ஒரு சோகத்தோடதான் கமல் என்கிற கிரியேட்டர் இருப்பார்ங்குறதுல எந்தவொரு சந்தேகமும் இல்லை…
கமல் இயக்குன முதல் படம் எதுனு முன்னாடியே கேட்டிருந்தேன்ல… அது என்ன படம்னா அவ்வை ஷண்முகியோட இந்தி ரீமேக்கான சாச்சி 420 படம்தான்.
சாச்சி 420 (1997)
தமிழ்ல மிகப்பெரிய ஹிட்டடிச்ச அவ்வை ஷண்முகியை இந்திக்குக் கொண்டுபோக ஆசைப்பட்டார் கமல். தபு, அம்ரீஷ் பூரி, ஓம்பூரி, நாசர்னு மிகப்பெரிய ஸ்டார் காஸ்டிங்கோடு படம் தொடங்கப்பட்டது. அப்போ பிரபலமா இருந்த விளம்பரப்பட இயக்குநர் ஷாண்டனு ஷோரி டைரக்டர்னு அறிவிக்கப்பட்டு படம் தொடங்குச்சு. ஐந்து நாள் ஷூட்டிங் முடிஞ்சிருந்த நிலைல, அவருக்கும் கமலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுச்சு. இதனால பாதியிலேயே படம் நிக்கவே, நானே டைரக்ட் பண்றேன்னு கமல் களத்துல இறங்குனாரு. இப்படித்தான் கமல் முதல்முறையா இயக்குநர் அவதாரம் எடுத்தார். தமிழ்ல இருந்த டைமிங் காமெடிகளை இந்திக்கு மாற்றுவது, காஸ்டிங்னு பல சவால்கள் இருந்துச்சு நம்ம டைரக்டர் கமலுக்கு… ஆனால், அதையெல்லாம் ஜெயிச்சு சாச்சி 420 படம் பாலிவுட்ல பெரிய வெற்றிபெற முக்கியமான காரணம் டைரக்டர் கமல்தான். இப்படி தன்னோட முதல் படத்துலயே டைரக்டர் கமல் முத்திரை பதிச்சார்னுதான் சொல்லணும்.
டைரக்டர் கமல் பண்ணுன சம்பவங்கள்லயே முக்கியமான சம்பவம்னு எதை நீங்க நினைக்கிறீங்க… மறக்காம அதை கமெண்ட்ல சொல்லுங்க!