இயக்குநர் ஷங்கர் தன் கரியரில் அடித்த மிகப்பெரும் செஞ்சுரிகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று ‘முதல்வன்’. இது ரஜினிக்காக ஷங்கர் எழுதிய கதை என்பதும், அவர் அதில் நடிக்கத் தயங்க ஷங்கர் அந்தக் கதையை தனது சொந்தத் தயாரிப்பில் அர்ஜூன் நடிப்பில் ‘முதல்வன்’ என்ற ப்ளாக்பஸ்டர் வெற்றியாகத் தந்ததும் அனைவரும் அறிந்ததே. ஆனால், தனது கதையில் நடிக்க மறுத்த ரஜினியை ஷங்கர் என்ன செய்தார் தெரியுமா.. எப்படி செல்லமாக அவரை பழிதீர்த்தார் தெரியுமா..?
‘ஜீன்ஸ்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கரும் ரஜினியும் இணைகிறார்கள் என செய்திகள் வரத் தொடங்கியதும் தமிழ்நாடே பற்றிக்கொண்டது. அதற்கேற்ப ஷங்கரும், ரஜினிமீது அப்போதிருந்த அரசியல் எதிர்பார்ப்பை மனதில் வைத்து செம்ம சூடான ஒரு கதையை அமைத்தார் . அதன் வெப்பம் எந்த அளவுக்கு இருந்திருந்தால் வழக்கமாக தனது படங்களில் அரசியல் சீண்டலை வைத்து விளையாடும் ரஜினியே இந்தக் கதையில் நடிக்கத் தயங்கியிருப்பார் என நீங்களே யோசித்துப் பாருங்கள். அதைத்தொடர்ந்து அந்தக் கதை அர்ஜூன் நடிப்பில் ‘முதல்வன்’ படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் அடுத்த சில மாதங்களுக்கு தமிழ்நாட்டில் பரபரப்பு செய்தியாகவும் வலம்வந்தது.
இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இந்தப் படத்தை ஷங்கர் இயக்கத்திலேயே ஹிந்தியில் ரீமேக் செய்யத் திட்டமிட்டார். அனில் கபூர், ராணி முகர்ஜி நடிப்பில் ‘நாயக்’ என்ற தலைப்பில் ஹிந்தியில் உருவானது ‘முதல்வன்’. அப்போதுதான் ஷங்கர், இந்தக் கதை தனக்கு உருவாக இன்ஸ்பிரேஷனாக இருந்ததற்கு ரஜினிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் `நீங்கள் நடிக்க மறுத்தாலும் நீங்கள் இந்த ப்ராஜெக்டில் இருப்பீர்கள்’ என உரிமையாகவும் ஷங்கர் ஒரு காரியம் செய்தார். அதாவது படத்தின் ஹீரோ அனில் கபூருக்கு ஷங்கர் வைத்த பெயர் ரஜினியின் இயற்பெயரான சிவாஜிராவ் கெய்க்வாட். அந்நிய மொழியில் அதிலும் முதன்முறையாக ஹிந்தியில் இந்தப் படத்தை இயக்கும்போது, ‘சிவாஜிராவ் கெய்க்வாட்’ என்ற பெயர் ரஜினியே அதில் நடிப்பது போன்ற ஒரு உணர்வைத் தந்திருக்கிறது ஷங்கருக்கு.
விளைவு, ஹிந்தியிலும் படம் வசூல்ரீதியாக நல்லவொரு வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சாட்டிலைட் ப்ளாக்பஸ்டர் என்ற சிறப்பு, ‘நாயக்’ படத்துக்கு பாலிவுட்டில் உண்டு. அதாவது பாலிவுட் சாட்டிலைட் வரலாற்றிலேயே டி.ஆர்.பி சாதனைகளில்‘நாயக்’ படம்தான் இன்றும் முதலிடம் வகித்து வருகிறது.
Also Read – தாடியை வைத்து எந்த நடிகர்னு கண்டுபிடிக்க முடியுமா உங்களால..? #Quiz #WorldBeardDay