இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது கொடுத்து ரஜினியைக் கௌரவித்திருக்கிறது மத்திய அரசு. அசுரன் படத்துக்காக தேசிய விருது பெற்றிருக்கும் ரஜினியின் மருமகன் தனுஷுடன் இணைந்து மத்திய அரசின் விழாவில் ரஜினிக்கு இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. `தாதாசாஹேப் பால்கே’ ரஜினிக்குத் திரைத்துறை பிரபலங்கள் தொடங்கி அரசியல்கட்சித் தலைவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
தனக்கு விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள ரஜினி, சிறுவயது நண்பர் ராஜ் பகதூர் தொடங்கி சகோதரர் சத்தியநாராயணா, இயக்குநர் பாலச்சந்தர் உள்ளிட்ட தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றவர்களை நன்றியோடு நினைவுகூர்ந்திருக்கிறார்.
ரஜினிக்குக் கிடைத்துள்ள கௌரவம் குறித்து நம்மிடம் பேசிய அவரது சகோதரர் சத்தியநாராயணா, “நான் பாக்கியம் பண்ணிருக்கேன் சார். எந்த ஜென்மத்துப் புண்ணியமோ தெரியல சார், இப்படி ஒரு தம்பி எனக்குக் கிடைச்சிருக்கார். அவர் நல்லா இருக்கணும். ஊருக்கெல்லாம் நல்லது பண்ண அவர் நல்லா இருக்கணும். நிறைய நல்லது செஞ்சிருக்கார். தமிழக மக்களின் ஆசீர்வாதம் இருக்கு. அதனால், இன்னும் முன்னேறுவாங்க… இன்னும் பெரிய பெரிய பதவிகள் வரும். கண்டிப்பா வரும். எவ்வளவோ சவால்கள் வந்துச்சு. அதைக் கடந்துதான் இந்தநிலைக்கு வந்திருக்காங்க. ரொம்பவே கஷ்டப்பட்டவர் அவர். அவருக்குப் பாதுகாப்பாக நான் இருந்தேன். அதுக்காக அப்பப்போ என்னைப் புகழ்ந்து பேசுவாரு. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
என் மேல பெரிய மரியாதை வைச்சிருக்கார். அதே அன்போடயும் பாசத்தோடயும் இருக்காரு. பழசு எதையும் அவர் மறக்கல. மேடைகளில் டிராமா ஆர்டிஸ்டாக நடித்துக் கொண்டிருந்தபோதே அவர் பெரிய ஆளாக வருவார் என்பது எனக்குத் தெரியும். நம்பிக்கை இருந்துச்சு. அந்த நம்பிக்கை இப்போ நிஜமாயிடுச்சு’’ என்று கூறி நெகிழ்கிறார் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா.
ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்டது குறித்து அவரது சகோதரர் சத்தியநாராயணா பேசியதை அவரது குரலிலேயே கேட்க…