பொதுவாக ஒரு துறையின் உச்சத்தில் இருக்கும்போது, தடாலடி ரிஸ்குகள் எடுக்காமல் சேஃப் கேம் ஆடவேண்டும் என்பது உலக நியதி. 90-களிலிருந்து ரஜினியும் இதைத்தான் பின்பற்றிவருகிறார். தன் கரியரின் ஆரம்பமான 1979-இல் ஒரே வருடத்தில் 20 படங்கள் நடித்த ரஜினி, 90-களிலிருந்து ஆண்டுக்கு ஒரு படம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் என செஞ்சுரியை நெருங்கும் டெண்டுல்கரைப்போல சேஃப் கேம் ஆடத் தொடங்கினார்.
இதன் விளைவாக கடந்த 25 வருடத்தில், அதாவது 1996-லிருந்து 2021 வரை அவர் வெறும் ஒன்பது இயக்குனர்களுடன்தான் இணைந்து பணியாற்றியிருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? அதிலும் குறிப்பாக கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, ஷங்கர், பா.ரஞ்சித் இந்த நான்கு இயக்குநர்களுடன் மட்டும்தான் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரஜினி. மற்ற ஆறு இயக்குநர்களுடன் அதுவும் இல்லை, தலா ஒரு படம்தான் என்பது இன்னும் ஆச்சர்யம்தான்.
`உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் இண்டஸ்ட்ரி ஹிட்டாலும் குஷ்புவின் சிபாரிசாலும் 1997-ஆம் ஆண்டு ரஜினியின் ‘அருணாச்சலம்’ படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சிக்கு கிடைத்தது. ‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’ அளவுக்கு ‘அருணாச்சலம்’ மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமையவில்லையென்றாலும் ஓரளவு ஹிட் படமாகவே அமைந்தது. சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் ஹிட்டடித்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினியும் சுந்தர்.சியும் இணைவதற்கான முயற்சிகள் நடைபெற்றது. ஆனால் அந்த முயற்சிகள் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையிலேயே நின்றுபோனது.
அதன்பிறகு ‘முத்து’ ஹிட் தந்த கே.எஸ்.ரவிக்குமாருடன் 1999-ல் ‘படையப்பா’ படத்திலும் ‘2014’ லிங்கா படத்திலும் மீண்டும் இணைந்தார் ரஜினி. இதில் ‘படையப்பா’ வசூலில் ரஜினியின் கரியர் உச்சம் என்றால், ‘லிங்கா’ அதற்கு அப்படியே நேரெதிராக அமைந்துபோனது. ஆனாலும் ரஜினியின் மிக ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியுடன் எப்போது வேண்டுமானாலும் இணைந்து பணியாற்றலாம் என்ற சூழல்தான் தற்போதும் நிலவுகிறது. குறிப்பாக அவர் இயக்கிய ‘நாட்டாமை’ படம் ரஜினியின் ஃபேவரைட். அதனாலேயே 2000-ஆம் ஆண்டு ‘நாட்டாமை’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘புலான்டி’ படத்தில் பாலிவுட் இயக்குநர் கஜ்ராஜ் இயக்கத்தில் தமிழில் விஜயகுமார் நடித்த ரோலில் நடித்து ஒரு கலக்கு கலக்கியிருந்தார் ரஜினி. (1996-க்கு முன்பே ‘நாட்டாமை’ தெலுங்கு ரீமேக்கான ‘பெத்தராயுடு’ படத்திலும் நடித்திருந்தார்)
அதன்பிறகு ரஜினியின் இன்னொரு ஃபேவரிட் இயக்குநரான சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002-இல் ‘பாபா’ படத்தில் நடித்திருந்தார் ரஜினி. அந்தப் படத்தின் படுதோல்வி, அந்தக் கூட்டணியை மீண்டும் இணையவிடாமல் செய்துவிட்டது. 1996-க்கு முன்பு, ‘அண்ணாமலை, ‘வீரா’, ‘பாட்ஷா’ அடுத்தடுத்து இணைந்த இந்த ஹிட் காம்போவானது கடந்த 25 வருடங்களில் ஒரு முறைதான் இணைந்திருந்தது.
ரஜினியின் மற்றுமொரு ஃபேவரிட் இயக்குநரான .பி.வாசுவுடன் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1993-இல் வெளிவந்த ‘உழைப்பாளி’ படத்துக்குப்பிறகு 2005-இல் ‘சந்திரமுகி’ படம் மூலம் இணைந்து மாபெரும் வெற்றிகண்டார் ரஜினி. மீண்டும் இந்தக் கூட்டணி 2008-ஆம் ஆண்டு ‘குசேலன்’ படம் மூலம் இணைந்து தோல்வியைக் கண்டது. சமீபத்தில் லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கிய ‘சிவலிங்கா’ படத்துக்கு வாசு முதலில் அணுகியது ரஜினியைத்தான். ஏனோ ரஜினி தயங்கவே அந்தக் கூட்டணி மீண்டும் இணையவில்லை.
தனது முதல் படமான ‘ஜெண்டில்மேன்’ படத்துக்குப் பிறகு ரஜினியுடன் அப்போது இணைவார் இப்போது இணைவார் என பரபரப்பாக பேசப்பட்டவர் ஷங்கர். ‘முதல்வன்’ படத்தில் ஆல்மோஸ்ட் ரஜினி நடிப்பதாக இருந்து கடைசியில் விலகிவிட, அதன்பிறகு 2007-ல் ‘சிவாஜி’ மூலம் ரஜினியுடன் இணைந்தார் ஷங்கர். அதன்பிறகு தனது கனவுப்படமான ‘எந்திரன்’ படத்தை ரஜினியைக்கொண்டு மெய்யாக்கினார் ஷங்கர். அதன்பிறகு இந்தக் கூட்டணி, 2018-இல் ‘2.0’ படம் மூலம் மீண்டும் இணைந்தது. கடந்த 25 ஆண்டுகளில் ரஜினி, ஷங்கருடன் மட்டும்தான் அதிகபட்சமாக மூன்று படங்களில் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘லிங்கா’ படுதோல்விக்குப் பிறகு ரஜினி தனது கம்ஃபோர்ட் ஸோனிலிருந்து வெளிவந்து முதன்முறையாக இளம் இயக்குநர் ஒருவருடன் இணைந்தது பா.ரஞ்சித்துடன்தான். இந்த கூட்டணி, 2016-இல் ‘கபாலி’ என்னும் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்ட படத்தையும் 2018-இல் ‘காலா’ எனும் ஆவரேஜ் ஹிட் படத்தையும் தந்தது.
அதன்பிறகு ரஜினி தனது வெறித்தனமான ரசிகரும் இளம் இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து 2019-இல் ‘பேட்ட’ படத்தில் பணியாற்றினார். ‘பேட்ட’ படம் மூலம் விண்டேஜ் ரஜினியை மறுஉருவாக்கம் செய்து ரசிகர்களுக்கு விருந்து வைத்த கார்த்திக் சுப்புராஜ், தற்போது ‘பேட்ட-2’ படத்தை இயக்குவதற்காக ரஜினியின் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார்.
‘ரமணா’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ரஜினியுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணையப்போகிறார் என பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட ஒரு தலைமுறையே கடந்து ‘2020’ –இல் வெளிவந்த ‘தர்பார்’ படம் மூலம்தான் அது நிறைவேறியது. பெரும் சென்சேஷனாலாகி இருக்கவேண்டிய இந்தக் கூட்டணி ஏனோ பெரிதாக சோபிக்கவில்லை என்பது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது சினிமா ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகவே அமைந்தது.
வெறும் 9 இயக்குநர்களுடன் பணியாற்றி இன்றும் உச்சத்தில் இருக்கும் ரஜினி ஓர் ஆச்சர்யம்தான்.