`காதல் ரொம்பவே புனிதமானது (அப்படிதான நம்புறாங்க); அதுவும் காதலிகள் சொல்லவே வேண்டாம். காதல் என்றாலே சின்ன சின்ன சண்டைகள்; பெண்கள் தரும் தொல்லைகள்; ஆண்களை சுரண்டும் பெண்கள் ஆகியவை நிரம்பியது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஆணாதிக்கம் நிரம்பிய திரைப்படங்கள். பெண்கள் என்றால் அமைதியாக இருக்க வேண்டும் என்ற டைப் படங்கள், துரத்தி துரத்தி காதலிக்கும் ஆணுக்கு இறுதியில் பெண் கண்டிப்பாக ஓகே சொல்ல வேண்டும் டைப் படங்கள்.” – இப்படி பெண்களுக்கு எதிராகவே அல்லது பெண்களை தவறாகவே சித்தரிக்கும் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் (இன்றும் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை) காதலின் எதார்த்தத்தை படத்தில் பிரதிபலித்தவர், செல்வராகவன். தனது திரைப்படங்களின் வழியாக நிஜமாகவே சிங்கப்பெண்களை அறிமுகப்படுத்தியவர் செல்வராகவன்.

ஆண்களை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் அவர் வெகுஜன மக்கள் தூக்கி கொண்டாடும் இயக்குநராக வலம் வரலாம். ஆனால், பெண்களை மையமாக வைத்து கதையை இயக்கினால் அவர் பெண்ணியவாதியாக முத்திரைக் குத்தப்படுவார். ஏன்… பெண்கள்கூட பெண்களை மையமாக வைத்து முழுமையான திரைப்படம் எடுக்கும் சூழல் தமிழ் சினிமாவில் இன்றும் உருவாகவில்லை என்றே கூறலாம். பெண்களை மையமாக வைத்து இயக்கப்படும் திரைப்படங்களிலும் கதாநயகனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இன்றைக்கும் முன்னணி கதாநயகர்களின் படத்தில் நடிக்கும் முன்னணி கதாநாயகளின் கதாபாத்திரங்கள் உப்புக்கு சாப்பாணியாகவே இருக்கும். இப்படியான சூழலில் உண்மையிலேயே கதைகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைச் சுற்றி கதை நகரும் போக்கை தனது கதைகளின் வழியே எடுத்துச் சென்றவர், செல்பவர் செல்வராகவன். அவரது படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்களைப் போல மனைவிகள் தங்களுக்கும் அமைய மாட்டார்களா என ஏங்கும் ஆண்கள் பலர் எனலாம். அவரது படங்களில் வரும் பெண்கள் கிளாமர் டாலாக இருக்கமாட்டார்கள், பெண்களுக்கு மேக் அப் அவ்வளவாக இருக்காது. ஆனாலும் ஆண்களின் ஃபேவரைட் பெண் கேரக்டர்கள் அவரது படங்களில் இருந்துதான்.

செல்வராகவன் என்றதும் முதலில் நினைவுக்கு வரும் வசனம் `திவ்யா… திவ்யா… திவ்யா… திவ்யா’ என்று தனுஷ் மழையில் பாடி ஆடுவதுதான். அந்த திவ்யாவை அவ்வளவு சீக்கிரம் எளிதில் நம்மால் மறக்க முடியுமா என்ன? `காதல் கொண்டேன்’ வினோத்துக்கு எதுவுமே இல்லாமல் இருந்த வினோத்தின் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கொடுத்து அவனை சக மனிதர்களில் ஒருவனாக மாற்றியதே திவ்யாதான். சக மாணவர்கள் வினோத்தை வெறுத்து ஒதுக்கும்போது தானாக சென்று அவனை அரவணைத்தது திவ்யாதான். கெட்டுப்போன உணவை வினோத் சாப்பிடும்போது அவனுக்கு நல்ல உணவை தந்தது திவ்யாதான். ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்தது திவ்யாதான். ஸ்கூட்டி ஓட்ட கற்றுத்தந்தது திவ்யாதான். தைரியமாக பேசகற்றுத்தந்தது திவ்யாதான். காமத்துடன் வினோத், திவ்யாவை நெருங்கும்போது அவனது தலையை கோதிவிட்டு மடியில் படிக்க வைத்து தாலாட்டியதும் திவ்யாதான். மொத்தத்தில் திவ்யா இல்லையென்றால் வினோத் இல்லை. ‘அவள விட்றாத. கெட்டியா புடிச்சிக்கோ’னு ஃபாதர் சொன்னது வெறும் சொல் இல்லை… வினோத்தின் நம்பிக்கை. அதனாலேயோ என்னவோ, வினோத்தால், திவ்யா தன்னுடைய வாழ்க்கையில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முன்னெற்றியில் முத்தம் வைத்து, “புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும் இளவேனில் வரை நான் இருக்கின்றேன்” என திவ்யா பாடும் பாடல் எவ்வளவு பெரிய ஆறுதல். காதல் இல்லை… காமம் இல்லை… திவ்யா – வினோத்தின் உறவுக்கு உலகத்தில் பெயரில்லை.”

’ஹீரோ உருப்படாம சுத்திட்டு இருப்பாரு அவரை ஹீரோயின் திருத்தி நல்வழிப்படுத்துவாங்க’ – தமிழ் சினிமாவில் நிறைய படங்களின் கதையின் ஒன்லைன் இதுதான். இதுல என்ன வித்தியாசமாக எடுக்க முடியும்? இதுல எப்படி ஒரு பெண்ணை போல்டாக காட்ட முடியும்? அங்குதான் செல்வராகவனின் மேஜிக் இருக்கிறது. ரொமான்ஸை மட்டுமே காதலின் மையமாக எடுத்து இயக்குநர்கள் களத்தில் ஆடிக்கொண்டிருந்தபோது காதலில் உள்ள உறவின் சிக்கல், குடும்பப்பிரச்னை, நடுத்தர வர்க்க இளைஞனின் நிலை என பல விஷயத்தை செல்வா கையாண்டு `7 ஜி ரெயின்போ காலனி’ திரைப்படத்தை எடுத்திருப்பார். காதல் கொண்டேன் படத்தைப் போலவே சோனியா அகர்வாலின் ’அனிதா’ கதாபாத்திரம் மிகவும் போல்டான கதாபாத்திரமாக இருக்கும். ’உனக்கே தெரியாம நீ எதாவது பண்ணிருப்படா. நீ எதாவது பண்ணிருப்ப’ அப்டினு கோவமா கதிரைப் பார்த்து கேள்வி கேக்குற காட்சி, அவனை கையோடு கூட்டிட்டுபோய் வேலைக்கு சேத்துவிடுற காட்சி இதெல்லாம் செல்வராகவன் படங்களில் மட்டுமே நடக்கும். அதுமட்டுமா, பெண்கள் படிக்கிற காட்சிகளும் சுயமாக நிற்கிற, முடிவெடுக்கின்ற காட்சிகளும்கூட அவரது பேனாவின் வழியே நிகழும் மேஜிக்தான்.

புதுப்பேட்டை – செல்வாவின் கிளாசிக் திரைப்படங்களுள் ஒன்று. மற்ற திரைப்படங்களைவிட இந்தத் திரைப்படத்தில் பெண்களை செல்வா காட்சி படுத்தியவிதம் உண்மையிலேயே அவரை ஜீனியஸ் சார் நீங்க’ அப்டினு சொல்ல வைக்கும். பாலியல் தொழில் செய்யும் பெண்களை தவறாக சினிமாவில் இன்றுவரை சித்தரித்து வரும் நிலையில் பாலியல் தொழில் செய்தாலும் அவளுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு, உணர்வுகள் உண்டு, காதல் உண்டு, குடும்பம் உண்டு, ஆசைகள் உண்டு என உணர்த்திய திரைப்படம் இது. சினேகா இந்தக் கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக கையாண்டிருப்பார். கிருஷ்ணவேணி அவரது வாழ்க்கையில் வந்தபிறகுதான் கொக்கி குமாரின் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றங்கள் ஏற்படும். ஆனால், அவனது ஆசை நாயகியான செல்வியை அடைந்த பின்னர் அவரது வாழ்க்கையில் சரிவு ஆரம்பிக்கும். மிகவும் நுட்பமான விஷயங்களை, உணர்வுகளை மிகவும் அழகாக இந்தத் திரைப்படத்தில் செல்வா காட்சிபடுத்தியிருப்பார்.
Also Read : ‘நந்து’, ‘சாப்ளின் செல்லப்பா’… கமல்ஹாசனின் டாப் 10 கெட் அப்கள்! (பகுதி-2)

‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்’ – வெறும் வசனம் இல்லை. அந்த வரிக்கு அவ்வளவு உயிர் இருக்கிறது. ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தின் கதையை இந்த ஒரு வரியில் சுருக்கிவிடலாம். ’யாமினி மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா போதும் வாழ்க்கையில் என்ன வேணும்னாலும் சாதிக்கலாம்’ என இன்றைக்கு நினைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். வாழ்க்கையில் தோற்றுப் போனதாக நினைத்து சோகமா தெருவில் கிறுக்கன் மாதிரி சுற்றிக்கொண்டு இருந்த ஒருத்தனை இண்டர்நேஷனல் போட்டோகிராபராக மாற்றி உலகளவில் பிரபலமாக்கிய யாமினியை யாருக்குதான் பிடிக்காது. எவ்வளவு கொடுமை பண்ணாலும் சகிச்சிகிட்டு வாழணும். அதான் பெண்ணோட நிலைமையா? அப்டினு பெண்ணியவாதிகள் பலர் இந்தப்படம் வந்தபோது கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு பதில் யாரிடம் இருக்கும் என தெரியவில்லை. ஆனால், யாமினி மட்டும் இல்லையென்றால் பல கார்த்திக்குகள் இன்றைக்கு நிச்சயம் இருந்திருக்க முடியாது. “உனக்கென மட்டும் வாழும் இதயமடி… உயிருள்ள அவரை நான் உன் அடிமையடி…” – இந்த வரிகள் யாமினிகளுக்கு மட்டுமே அவ்வளவு பொருத்தமான வரிகள். முக்கியமான விஷயம் என்னனா… இன்னைக்கு மயக்கம் என்ன’ ரிலீஸான நாள்!

காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன மட்டுமல்ல செல்வாவின் பிற படங்களான ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், என்.ஜி.கே, நெஞ்சம் மறப்பதில்லை என அவர் எடுத்த அனைத்துப் படங்களிலும், அடுத்து எடுக்கப்போகும் படங்களிலும் பெண் கதாபாத்திரங்கள் சுயமாக நிற்பவர்கள், சிங்கப்பெண்கள், கெத்தாக இருப்பவர்கள், அவர்களை தவிர்த்துவிட்டு ஆண்களைப் பார்க்க முடியாது. ஆல்வேஸ் வீ வாண்ட் திஸ் டைப் ஆஃப் ஃபிலிம்ஸ் செல்வா சார்!





Khám phá thế giới giải trí trực tuyến đỉnh cao tại MM88, nơi mang đến những trải nghiệm cá cược thể thao và casino sống động.