ரத்த சாட்சி… மணிரத்னம், பாலா, வெற்றி மாறன் படமாக்க விரும்பிய கதை! அப்படி என்ன விசேஷம் ?

  • ஆஹா ஓ.டி.டியில் வெளியாக இருக்கும் ‘ரத்தசாட்சி’ என்ற திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கைதிகள் என்ற சிறுகதையை மையமாகக் கொண்டது. 1970களில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அப்பு தமிழ்நாட்டில் நக்சல்பாரி இயக்கத்திற்கு தலைமை தாங்கினார். போலீஸ் அவரைக் கைது செய்த நிலையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து ஜெயமோகன் எழுதிய சிறுகதைதான் ‘கைதிகள்’.
  • தர்மபுரியில் அப்பு என்ற நக்சல் போராளி, முருகேசன் என்கிற ஒரு போலீஸ் இருவரின் மனப்போராட்டங்கள்தான் ‘கைதிகள்’ சிறுகதை. இதில் அப்புவின் வாழ்வு எப்படி ஆரம்பித்தது, எப்படி போராளியாக மாறினார் என்பதை அடிப்படையாக வைத்தே படமாக மாற்றியிருக்கிறார்கள்.
ரத்தசாட்சி
ரத்தசாட்சி
  • ரஃபீக் இஸ்மாயில் இயக்கியிருக்கும் ரத்த சாட்சியில் படத்தில் கண்ணா ரவி ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த கண்ணா ரவி யார் தெரியுமா? கைதி படத்தில் வில்லன் கேங்கில் போலீஸின் இன்ஃபார்மர் ஆக நடித்திருப்பாரே அவர்தான். அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் இளங்கோ குமரவேல் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ஹரிஷ் குமார், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மாநகரம் படத்திற்கு இசையமைத்த ஜாவேத் ரியாஸ் இசையமைத்திருக்கிறார்.
  • ஜெயமோகன் எழுதிய இந்தக் கதையை தான் தயாரித்த ‘நவரசா’ வெப்சீரீஸூக்காகக் கேட்டார் இயக்குநர் மணிரத்னம். அதன்பிறகு பாலாவும் கேட்டிருக்கிறார். வெற்றிமாறன் இந்தக் கதையை படமாக்க நினைத்து முடியாமல் போக அதற்குப் பதிலாகத் தான் ஜெயமோகனின் ‘துணைவன்’ கதையை ‘விடுதலை’ என்ற பெயரில் படமாக்கி வருகிறார். இந்த மூன்று மெகா இயக்குநர்களும் கதை உரிமையைக் கேட்டபோதே, உதவி இயக்குநராக இருந்த ரஃபீக்கிற்கு இந்தக் கதையின் உரிமையை முன்னரே கொடுத்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார் ஜெயமோகன்.
  • கம்யூனிச சித்தாந்தம்தான் படத்தின் அடித்தளம். ‘இருக்குறவன் இல்லாதவனை அடிச்சா ஆண்டவனா இருந்தாலும் அடிக்கணும்.. இதுதான் எனக்குத் தெரிஞ்ச கம்யூனிசம்’ என்று படத்தின் வசனங்களும் புரட்சிகரமாக இருக்கிறது.
  • கமல்ஹாசனின் பிறந்தநாள் அன்று படத்தின் டைட்டில் வெளியானது. படம் தொடர்பான தகவல்களை ஆர்வத்துடன் விசாரித்து தெரிந்து கொண்ட கமல்ஹாசன், ‘காம்ப்ரமைஸ் பண்ணாம பண்ணுங்க’ என்று இயக்குநர் ரஃபீக் இஸ்மாயிலை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.
ரத்தசாட்சி
ரத்தசாட்சி
  • ‘அன்புதான் என் ஆயுதம்’ என்று குறிப்பிட்டு டிவிட்டரில் இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டார் சிம்பு.
  • மகிழ் மன்றத்தின் படைப்பாக வெளிவரும் இப்படத்தை அனிதா மகேந்திரன், டிஸ்னி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். காடு, மலை, வாழை இலையில் கிடத்தப்பட்டிருக்கும் கருகிய மனித கால்கள், நீதிமன்றம், போலீஸ் சித்ரவதை, எளிய மனிதர்கள் என டீஸரில் இருக்கும் விஸுவல்கள் அழுத்தமான படம் என்பதை உணர்த்துகிறது. ரத்த சாட்சி படத்தின் டிரைலர் டிசம்பர் 5ந் தேதி வெளியாகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top