இந்திய அணி

#ENGvIND: பும்ராவின் 2/6 ஸ்பெல்; ஓல்டு பால் டெக்னிக் – ஓவல் டெஸ்ட் கடைசி நாளின் 5 திருப்புமுனைகள்!

#ENGvIND இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையும் இந்திய அணி பெற்றிருக்கிறது.

#ENGvIND ஓவல் டெஸ்டின் கடைசி நாள் – 5 முக்கிய தருணங்கள்!

இந்தியா நிர்ணயித்த 368 ரன்கள் டார்கெட்டோடு களமிறங்கிய இங்கிலாந்து அணி, நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 291 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 90 ஓவர்களில் இந்தியா 10 விக்கெட்டுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்தநிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கியது. கடைசி இரண்டு நாள் வானிலையும் இந்தியாவுக்கு ஒத்துழைத்தது.

டேமேஜைத் தொடங்கிவைத்த ஷ்ரதுல் தாக்குர்!

ஷ்ரதுல் தாக்குர்
ஷ்ரதுல் தாக்குர்

பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதமடித்து அசத்திய இந்தியாவின் நம்பர் 8 ஷ்ரதுல் தாக்குர், இங்கிலாந்தின் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த அணியின் ஸ்கோர் 100 ஆக உயர்ந்தபோது, தொடக்க வீரர் பர்ன்ஸ் அரை சதத்தையும் பூர்த்தி செய்தார். அடுத்த பந்திலேயே அவரை ஆட்டமிழக்கச் செய்து பெவிலியனுக்கு அனுப்பினார் ஷ்ரதுல் தாகுர். 125 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்திருந்த அவர் கீப்பர் ரிஷப் பன்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

திணறிய இங்கிலாந்து!

முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்ந்திருந்த இங்கிலாந்து வெற்றியை நோக்கி விளையாடும் என்று கருதப்பட்ட நிலையில், முதல் செஷனில் 27 ஓவர்களில் 54 ரன்களை மட்டுமே எடுத்தது அந்த அணி. இதனால், டிராவை நோக்கி விளையாடுகிறார்களா இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் என்ற கேள்வி எழுந்தது. குறிப்பாக, இங்கிலாந்து தொடக்க வீரர் ஹசீப் ஹமீத் முதல் நாள் ஸ்கோரோடு மொத்தமாகவே 19 ரன்கள் மட்டுமே சேர்த்தார். முதல் செஷனில் மொத்தமே 3 பவுண்டரிகள்தான் அடிக்கப்பட்டன. அதுவும் ஆட்டமிழக்கும் முன்னர் தொடக்க வீரர் பர்ன்ஸ் அடித்தவை. இந்திய பௌலர்கள் கொடுத்த நெருக்கடிக்குப் பலனும் கிடைத்தது. தாக்குர், சிராஜ் பந்துகளை எதிர்க்கொள்ளவே திணறிக் கொண்டிருந்த ஹமீத், ஜடேஜா பந்தில் ஒரு ரன் எடுக்க ஆசைப்படவே, மறுமுனையில் இருந்த டேவிட் மாலன் பரிதாபமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 131-2 என்ற நிலையில் இருந்தது.

ஜடேஜா சுழல்!

ஜடேஜா
ஜடேஜா

ஒருமுனையில் டைட்டான ஸ்பெல் வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்த ஜடேஜா, மறுமுனையில் பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி செய்துகொண்டிருந்தார். காலை முதலே திணறிக் கொண்டிருந்த ஹமீதை பவுல்டாக்கி வெளியேற்றினார் ஜடேஜா. இரண்டாவது இன்னிங்ஸில் 30 ஓவர்கள் வீசிய ஜடேஜா 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி 1.66 மட்டுமே.

பும்ரா மேஜிக்

பும்ரா
பும்ரா

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பிட்சில் பந்து ஸ்விங் ஆவதைக் கண்டுகொண்ட பும்ரா, தாமாகவே முன்வந்து ஒரு ஸ்பெல் வீசினார். இந்த ஸ்பெல்லில் 6 ஓவர்கள் பந்துவீசிய அவர் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து போப், பேரிஸ்டோவ் என இங்கிலாந்து மிடில் ஆர்டரின் முக்கியமான இரண்டு பேட்ஸ்மேன்களையும் பவுல்டாக்கினார். இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் கிட்டத்தட்ட 150 ஓவர்கள் வீசி இங்கிலாந்து பௌலர்கள் செய்ய முடியாத அதிசயத்தை பும்ரா நிகழ்த்திக் கொண்டிருந்தார். `பிட்சில் பந்து ஸ்விங் ஆகவே இல்லை. எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து பார்த்துவிட்டோம்’ என்று மூன்றாம் நாள் ஆட்டத்துக்குப் பின்னர் இங்கிலாந்தின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், பழைய பந்திலும் ஸ்விங் செய்ய முடியும் என தனது மேஜிக்கால் இங்கிலாந்துக்குப் பாடமெடுத்தார் பும்ரா. அவரின் மேஜிக்கல் ஸ்பெல்லுக்குப் பிறகு இந்தியாவின் கை ஓங்கியது. பும்ரா ஸ்பெல் முடியும்போது இங்கிலாந்து 6 ரன்களுக்கு மொத்தமாக 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஓல்டு பால் டெக்னிக்

உமேஷ் யாதவ்
உமேஷ் யாதவ்

இந்தப் போட்டியில் இந்தியா கையாண்ட இன்னொரு முக்கியமான உத்தி பழைய பந்திலேயே இன்னும் கொஞ்ச நேரம் விளையாடலாம் என்று முடிவு செய்தது. பந்தை மாற்ற அவகாசம் கிடைத்த நிலையிலும், அதை மாற்றுவதை தாமதப்படுத்தினார் இந்திய கேப்டன் கோலி. அதற்கு கை மேல் பலனும் கிடைத்தது. இரண்டாவது இன்னிங்ஸின் 81-வது ஓவரை வீசிய ஷ்ரதுல் தாக்குர் பந்துவீச்சில் எட்ஜாகி ஸ்டம்புகள் சிதற வெளியேறினார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். அத்தோடு டிராவுக்காக இங்கிலாந்துக்கு இருந்த கடைசி நம்பிக்கையும் சிதைந்து போனது. அதன்பின்னர், புதிய பந்தோடு பந்துவீச வந்த உமேஷ் யாதவ் டெயில் எண்டர்களை வெளியேற்ற இங்கிலாந்து 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

துளிகள்:

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா
  • இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மா, ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் 8 டெஸ்ட் செஞ்சுரிகள் அடித்திருக்கும் அவர் ஆசியக் கண்டத்துக்கு வெளியே பதிவு செய்த முதல் டெஸ்ட் சதம் இதுதான். ரோஹித் சதமடித்த 8 போட்டிகளிலும் இந்திய அணி வென்றிருக்கிறது.
  • லண்டன் ஓவல் மைதானத்தில் 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, அந்த மைதானத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இதற்கு முன்னர் 1971-ல் வெற்றிபெற்றிருந்தது. அதன்பிறகு இந்த மைதானத்தில் 14-வது போட்டியில்தான் வெற்றி இந்திய அணிக்கு வசமாகியிருக்கிறது.
  • போப்பின் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா, டெஸ்ட் போட்டிகளில் 100-வது விக்கெட்டைப் பதிவு செய்தார். இதன் மூலம் 24 போட்டிகளில் 100 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தி, வேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன்னர், 25-வது டெஸ்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார் கபில்தேவ்.
விராட் கோலி
விராட் கோலி
  • முதல் இன்னிங்ஸில் 200 அல்லது அதற்குக் குறைவான ரன்கள் அடித்து இந்தியா டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பாக, கடந்த 2018-ல் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஜோஹன்னஸ்பெர்க் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 187 ரன்கள் எடுத்து, அந்தப் போட்டியில் இந்தியா வென்றிருந்தது.
  • 1986-க்குப் பிறகு இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் தொடரில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வெற்றிகளை இந்தியா பதிவு செய்திருக்கிறது. 1986-ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. இது, கேப்டனாக இங்கிலாந்தில் விராட் கோலியின் மூன்றாவது டெஸ்ட் வெற்றியாகும். இதன்மூலம் 2 போட்டிகளில் வென்றிருந்த கபில்தேவின் சாதனையையும் அவர் முறியடித்தார்.

Also Read – ViratKohli: கலங்க வைக்கும் கவர் டிரைவ்… விராட் கோலியின் சதமில்லாத 50 இன்னிங்ஸ்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top