ஒடிசா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் எழுதிய The Journey of a Civilization புத்தகம் சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் வைகைக் கரை நாகரீகத்துமான தொடர்புகளை வலுவாக நிறுவுகிறது.
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்முறையாக டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது பயணத்தின்போது காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தியையும் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய The Journey of a Civilization புத்தகத்தைப் பரிசளித்தார். சோனியா காந்தியுடனான சந்திப்பில் அவருக்குப் பரிசளிக்க இந்த புத்தகத்தைத் தேர்வு செய்ய என்ன காரணம்? அந்த புத்தகத்தில் என்ன ஸ்பெஷல்?
ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.பாலகிருஷ்ணன். தமிழ் இலக்கியம் படித்த இவர், முதல்முறையாக எழுதிய ஐ.ஏ.எஸ் தேர்விலேயே தேர்ச்சி பெற்றார். பத்திரிகையாளராகவும் பணியாற்றிய அனுபவமிக்க ஆர்.பாலகிருஷ்ணன் 1984-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியாவார். இந்தியத் தேர்தல் ஆணையத்தில் துணை ஆணையராகப் பதவி வகித்த இவர், ஒடிசா மாநில அரசில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். அம்மாநில தலைமைச்செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற பின்னர், ஒடிசா முதல்வரின் முதன்மை ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.
இடங்களின் பெயர்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வந்த இவர், ஐராவதம் மகாதேவனின் அறிவுறுத்தலின்படி சிந்து சமவெளி நாகரிகம் குறித்த ஆய்வில் கவனத்தைத் திருப்பினார். சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலான தொடர் பயணங்கள், ஆய்வுகள் உள்ளிட்டவைகளை அடிப்படையாக வைத்து பல்வேறு தரவுகளோடு இவர் எழுதிய ஆய்வு நூல்தான் The Journey of a Civilization: Indus to Vaigai. சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு மற்றும் வைகை நாகரிகத்தின் தொடக்கம் இடையிலான தொடர்புகள் குறித்து பல்வேறு தரவுகளுடன் அந்த நூலில் இவர் விளக்கியிருக்கிறார். இது பல்வேறு ஆக்கபூர்வமான விவாதங்களை எழுப்பியிருக்கிறது. கீழடி சங்க இலக்கியங்கள் போற்றிக் கொண்டாடப்படும் வைகை நதிக்கரையில் மதுரைக்கு அருகே அமைந்திருப்பதாலும் வைகைக் கரையின் இரு பகுதியிலும் பல அகழாய்வு இடங்கள் இருப்பதாலும் இதை
வைகைக் கரை தமிழ்ப் பண்பாடு’ என்று அழைப்பதே பொருத்தம்’ என்கிறார் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
The Journey of a Civilization
1924-ம் ஆண்டு சிந்து சமவெளி நாகரிகம் பற்றி மேக்ஸ்முல்லர் வெளியிட்ட ஆய்வு நூல் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித நாகரிகம் எப்படி செழித்தோங்கியது என்ற விஷயத்தை உலக அளவில் வெளிச்சம் போட்டுக் காட்டியது. சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய அவரது ஆய்வு நூலில் தென்னிந்தியா பற்றி பெரிதாக விவரங்கள் இடம்பெறவில்லை. இந்தநிலையில், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் தமிழ் தொன்மைக்கும் இடையே இருக்கும் தொடர்புகள் குறித்த ஆய்வுகளை பல்வேறு தளங்களில் விரிவுபடுத்தினார் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். அந்த ஆய்வுகளின் முடிவுகளே 524 பக்கங்கள் கொண்ட இந்த நூல். ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும் இந்த நூல் விரைவிலேயே தமிழிலும் வெளியாகவிருக்கிறது.
தமிழ் சங்க இலங்கியங்களில் இடம்பெற்றிருந்த கொற்கை, வஞ்சி, தொண்டி, கண்ணகி, கரிகாலன், அதியமான் போன்ற ஊர்ப் பெயர்கள் வடமேற்கு நாடுகளான ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்டவைகளிலும் இருப்பது கண்ட இவர், அதுகுறித்த ஆய்வுகளைத் தொடர்ந்திருக்கிறார். சிந்து சமவெளியில் என்ன மொழி பேசப்பட்டது… அங்கிருந்த மக்களுக்கு என்ன ஆனது போன்ற பல்வேறு கேள்விகளை இவரது ஆய்வுகள் எழுப்பியிருக்கின்றன. அதேபோல், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் தமிழர்களின் பண்பாட்டுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகளையும் பல்வேறு தரவுகளுடன் இந்த நூலில் அவர் எடுத்து வைத்திருக்கிறார். சிந்து சமவெளியில் காணப்படும் சேவற் சண்டை தமிழகத்தின் முக்கியமான பண்பாட்டு அடையாளமாக இருக்கிறது. சிந்து சமவெளி முத்திரைகளில் காளை, சண்டை சேவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. தமிழகத்தில் மேற்சேரி, கீழ்சேரி நடுகல், யானையை வெல்லும் சேவலுடன் கூடிய கோழியூர் சிற்பம் போன்றவை பண்பாட்டு தொடர்ச்சியாக இருக்க வாய்ப்புண்டு என்று நூலில் நிறுவுகிறார்.
“சிந்து சமவெளி நாகரிகம் எப்படி முடிவுக்கு வந்தது என்ற கேள்வியும், தமிழர் தொன்மங்களின் பின்னணி எது என்ற கேள்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். சிந்து சமவெளி விட்ட இடமும், சங்க இலக்கியங்கள் தொட்ட இடமும் ஒன்றே’’ என்கிறார் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தமிழகத்தின் தொன்மையைப் பறைசாற்றும் வண்ணம் ஸ்டாலின் சோனியாகாந்திக்கு பரிசளிக்க இந்தப் புத்தகத்தைத் தேர்வு செய்ததாகச் சொல்கிறார்கள்.
மொஹஞ்சாதாரோ அகழாய்வு – ட்ரோன் வியூ
Also Read – 25 நிமிட மீட்டிங்… 25 கோரிக்கைகள்… மோடி – ஸ்டாலின் முதல் சந்திப்பில் என்ன நடந்தது?