மகனுக்கு முடிசூட்டும் வைகோ..! -களைகட்டும் துரை வைகோ என்ட்ரி

தி.மு.க-வின் வாரிசு அரசியலை எதிர்த்து மறுமலர்ச்சி தி.மு.க-வாக களமிறங்கிய வைகோ, அண்மைக்காலமாக மகன் துரை வையாபுரியை கட்சி நிகழ்ச்சிகளில் முன்னிறுத்தி வருகிறார். ` வைகோ ஓய்வெடுக்கட்டும், துரை வையாபுரியை களமிறக்குங்கள்’ என்ற குரல்கள் ம.தி.மு.க-வில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்குட்பட்ட உத்தரகோசமங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் மங்களசாமி. இவர் குவைத் நாட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், திடீரென வாதநோய் ஏற்பட்டு அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அவரை ராமநாதபுரம் மாவட்டத்துக்குக் கொண்டு வருவதற்கு அவரது மனைவி கோவிந்தம்மாள் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இருப்பினும், அவரால் கொண்டுவர இயலவில்லை. இதனால் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு தவித்து வந்தார். இத்தகவலை அறிந்த திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் ரெ.வை.ரெத்தினக்குமார், வைகோவின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். வழக்கமாக, இதுபோன்ற உதவிகள் என்றால் குவைத் தூதரக அதிகாரிகளுக்கே வைகோ போன் செய்து பேசியிருப்பார் மாறாக, இந்தமுறை தனது மகனைக் களமிறக்கினார்.

அப்பாவின் வேண்டுகோளை ஏற்றுக் களமிறங்கிய துரை வையாபுரி, மங்களசாமியை விமானம் மூலம் ராமநாதபுரம் கொண்டு வந்தார். இதனையடுத்து அண்மையில் ராமநாதபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வையாபுரியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார், மங்களசாமியின் மனைவி கோவிந்தம்மாள். இதற்குப் பதில் கொடுத்தவர், `இது எங்கள் கடமை. மனிதநேயம் சார்ந்த பணி செய்தோம். என்றென்றும் உங்களைப் போன்ற சாமானிய மக்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்போம்’ என்றார். இந்தச் சம்பவம், அருகில் இருந்த ம.தி.மு.க தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. `வைகோவின் பாணியிலேயே மக்களை எதிர்கொள்கிறார்’ எனப் பேசிக் கொண்டனர்.

துரை வையாபுரியின் அரசியல் என்ட்ரி குறித்து ம.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். “ வரும் மே மாதம் 22-ம் தேதி வந்தால் வைகோவுக்கு 77 வயதாகிறது. முன்புபோல அவரால் வேகமாகச் செயல்பட முடியவில்லை. உடல்நலனும் அவ்வப்போது ஒத்துழைப்பதில்லை. இதனையடுத்து, துரை வையாபுரியை முன்னிறுத்தும் வேலைகள் தொடங்கின. தனது பெயரையும் துரை வைகோ என மாற்றிக் கொண்டார். இதனால் தலைவரின் மகன் என்ற அழுத்தமான இமேஜ்  தொண்டர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. இதன் ஒருகட்டமாக, கடந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி, ராஜபாளையம் மேற்கு ஒன்றிய ம.தி.மு.க சார்பில் நடந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தக் கூட்டத்தில், ‘இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும் தமிழர் நலனுக்காகவும் கழகத்தின் வளர்ச்சிப் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும், துரை வைகோவுக்கு கட்சிப் பணியாற்றவும், கட்சியில் பதவி வழங்குவதற்கும் அனுமதி வழங்குமாறு பொதுச்செயலாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு வைகோ தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. தொடர்ந்து கட்சி விழாக்களில் துரை வைகோவை முன்னிறுத்தும் வேலைகளும் படிப்படியாக அரங்கேறி வருகின்றன. அவர் செல்லும் மாவட்டங்களிலும், `தலைவருக்கு நிகரான வரவேற்பு கொடுக்க வேண்டும்’ என்ற உத்தரவு பறந்துள்ளது. விரைவில் கட்சியிலும் அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர்கள் சிலர் பேசி வருகின்றனர். இதனை வைகோவும் மறைமுகமாக ஆதரித்து வருகிறார். ம.தி.மு.க-வைவிட்டு நாஞ்சில் சம்பத் விலகிய சமயத்தில், ‘தன் மகனை கட்சிக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறார் வைகோ. அதற்கு நான் தடையாக நிற்பேன் என்பதால் என்னைப் புறக்கணிக்கிறார்’ எனப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அது தற்போது உண்மையாகி வருகிறது” என விவரித்தனர்.

அதேநேரம், இதனை மறுத்துப் பேசும் ம.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகளோ, “ கட்சியினர் வீடுகளில் நடக்கும் சுப, துக்க நிகழ்வுகளுக்கு மட்டும்தான் துரை வைகோ சென்று வருகிறார். அவர் கட்சி தொடர்பான நிகழ்வுகள் எதிலும் பங்கேற்பதில்லை. எங்கள் கட்சியின் சீனியர்கள் மத்தியில், வாரிசு அரசியல் குறித்த விமர்சனம் இருக்கிறது. அதேநேரம், `வைகோ ஓய்வெடுக்கட்டும், துரை வைகோவை களமிறக்குங்கள்’ எனச் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இதனை ஏற்றுக் கொள்ளும் முடிவில் வைகோ இல்லை. திருமண விழாக்களில் வைகோ சார்பாக பங்கெடுக்கும் துரை வைகோவும், ` கட்சியின் பிரதிநிதியாக நான் வரவில்லை. அப்பாவுக்காக வந்திருக்கிறேன்’ என்றுதான் அழுத்தமாகக் கூறுகிறார். தவிர, வைகோவின் அரசியல் செயல்பாட்டையே அவர் பகிரங்கமாக விமர்சிக்கக் கூடியவர்.

எங்களிடம் ஒருமுறை பேசும்போது, `எங்க அய்யா அரசியலைவிட்டு வேறு தொழிலில் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அரசியலுக்கு அவர் ஏற்றவர் அல்ல’ என்றார். வைகோவின் பெயரையும் எந்த இடத்திலும் அவர் பயன்படுத்தியதில்லை. ஒருமுறை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நண்பர்களோடு சேர்ந்து சில உதவிகளைச் செய்து வந்தார். ஒருகட்டத்தில் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு சந்தேகம் வந்து கேட்டபோது, `நான் வைகோவின் மகன்தான். இன்னார் மகன் எனக் கூறியிருந்தால் என்னால் இந்தளவுக்கு உதவி செய்திருக்க முடியுமா? அதனைக் குறிப்பிடாததால்தான் கொஞ்சம் உதவி செய்ய முடிந்தது என சிரித்தபடியே கூறினார். இப்படிப்பட்ட ஒருவர் கட்சிக்குள் வந்தால் அது ம.தி.மு.க-வை வலுப்படுத்தவே செய்யும். சட்டமன்றத் தேர்தலில் துரை வைகோ களமிறங்கி வேலை பார்த்தாலும் ஆச்சர்யமில்லை. வைகோ என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதுதான் முக்கியம்” என்கின்றனர் இயல்பாக,

`தி.மு.க-வில் பட்டத்து இளவரசருக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்கு நான் இடையூறாக இருப்பேன் என்பதற்காக, என்மீது கொலைப்பழி சுமத்தி கட்சியிலிருந்து வெளியேற்றினார்கள்’ எனக் கருணாநிதி மீது பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்தவர் வைகோ. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது வாரிசே களமிறங்கப் போவதுதான் அரசியல் விநோதம் எனப் புருவங்களை உயர்த்துகின்றனர் ம.தி.மு.க சீனியர்கள்.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top