தடுப்பூசிகள் மூலம் கொரோனா பெருந்தொற்றில் இருந்து இந்தியா உலகை மீட்டெடுத்திருப்பதாக அமெரிக்க முன்னணி விஞ்ஞானியும் மருத்துவருமான பீட்டர் ஹோடெஸ் பாராட்டியிருக்கிறார்.
கொரொனா பெருந்தொற்றால் உலக அளவில் பல வளர்ந்த நாடுகளே சிக்கலை எதிர்க்கொண்டு வரும் சூழலில் உலகின் மருந்தகம் என்று இந்தியா அழைக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் இருப்பிடமாகத் திகழும் இந்தியாவை, கொரோனா தடுப்பூசிக்காக அணுகும் நாடுகளின் எண்ணிக்கை தினசரி உயர்ந்து வருகிறது. இந்தநிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா அறிமுகப்படுத்தியிருக்கும் தடுப்பூசிகள் இந்தியா உலகுக்கு அளித்திருக்கும் பரிசு என டாக்டர் பீட்டர் ஹோடெஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஹூஸ்டன் நகரை மையமாகக் கொண்டு இயங்கிவரும் இந்திய – அமெரிக்க வர்த்தக சபை நடத்திய வெபினாரில் கலந்துகொண்டு பேசினார் பீட்டர் ஹோடெஸ். உலக அளவில் வளர்ந்துவரும் துறையான வெப்பமண்டல நோய்கள் துறை வல்லுநரான விஞ்ஞானி பீட்டர் ஹோடெஸ், சர்வதேச அளவில் முத்திரை பதித்த மருத்துவராவார். வெபினாரில் பேசிய பீட்டர் ஹோடெஸ், “கொரோனாவுக்கு எதிராக அமெரிக்கா அறிமுகப்படுத்தியிருக்கும் இரண்டு எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் உலகின் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், பி.சி.எம் மற்றும் ஆக்ஸ்போர்டு போன்ற பல்கலைக்கழகங்களுடன் கைகோர்த்து இந்தியா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் பெருந்தொற்றிலிருந்து உலகை மீட்டிருக்கின்றன. கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடக் கூடாது. கொரோனா தடுப்பூசிகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது இந்தியா உலகுக்கு அளித்த பரிசு’’ என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்தியாவிலிருக்கும் எனது சக ஆய்வாளர்களோடு வாரம்தோறும் நான் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறேன். நாம் கொடுக்கும் பரிந்துரைகளை அவர்கள் விரைவாக முடித்துவிடுகிறார்கள். விரைவாக மட்டுமல்ல.. நம்ப முடியாத சிறந்த திறனுடமும் படைப்புத் திறனுடனும் வேலையை முடித்து விடுகிறார்கள். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்தியாவின் பங்களிப்பு குறித்த செய்திகள் வெளியே தெரிவதில்லை’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனாவுக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்தியா அனுமதி அளித்திருக்கிறது. புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்டு மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்திருக்கும் கோவாக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, பயன்பாட்டில் இருக்கின்றன. உலக நாடுகள் பலவற்றுக்கும் இந்தியா தடுப்பூசிகளை அளித்து வருகிறது.