மதுரை தங்கம் தியேட்டர் வரலாறு!

மதுரை தங்கம் தியேட்டர் ஒரு காலத்துல ஆசியாவுலேயே பெரிய தியேட்டரா இருந்தது.  ஆனா இப்போ இருக்குற பசங்களுக்கு அப்படி மதுரைல ஒரு தியேட்டர் இருந்ததே தெரியாது. சித்திரை திருவிழா கூட்டத்தை தினம் தினம் பார்த்த அந்த தியேட்டர் எப்படி இருந்துச்சு? எங்க போச்சு? அந்த தியேட்டர்ல 300 நாள் ஓடுன படம் எது தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

Thangam Theatres
Thangam Theatres

சென்னைவாசிகளுக்கு போர் அடிச்சா மெரீனா பீச்சுக்கு போவாங்க. கோவையன்ஸ் ஊட்டி போவாங்க. கன்னியாகுமரிக்காரங்க முக்கடல் சங்கமிக்குற இடத்துக்கு போவாங்க. ஆனா மதுரைக்காரங்களுக்கு அப்படி எந்த டூரிஸ்ட்  ஸ்பாட்டும் கிடையாது. திருமலைநாயக்கர் கட்டுன நாப்பத்தெட்டு தூணை எத்தனை வாட்டிதான் பார்க்க முடியும். அதனால மதுரை மக்களுக்கு இருக்குற ஒரே எண்டர்டெய்ன்மெண்ட் சினிமாதான். மதுரைல இருந்து நிறைய பேர் படம் எடுக்குறேன்னு கெளம்பி வர்றதுக்கும், மதுரையை மையமா வச்சு நிறைய படம் எடுக்குறதுக்கும் அந்த மக்கள் அதிகமா சினிமா பார்க்குறதுதான் காரணம்.

Also Read – `பாபா படம் நல்லா இல்லப்பா!’ – ஷுட்டிங்கின்போதே கணித்த கவுண்டமணி 

அம்பிகா, மூகாம்பிகா, மாப்பிள்ளை விநாயகர், மாணிக்க விநாயகர், சக்தி, குரு, சோலைமலை, சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்ரியா, கல்லணை, அண்ணாமலை,    சரஸ்வதி, தங்கரீகல், அலங்கார், தமிழ் ஜெயா, வெற்றி, அமிர்தம், கணேஷ், ஜாஸ் – அர்ஸ், மதினு மதுரைல தடுக்கி விழுந்தா தியேட்டர்லதான் விழுகணும்ங்குற அளவுக்கு சுத்தி சுத்தி அத்தனை தியேட்டர் இருக்கும். ஆனா நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்ங்குற மாதிரி டானுக்கெல்லாம் டான் தியேட்டர்னா அது மதுரைல இருந்த தங்கம் தியேட்டர்தான்.

பிச்சைமுத்து, தங்கமணி என்ற இரண்டு நண்பர்கள் 1939-ஆம் ஆண்டு மதுரைல ஒரு தியேட்டர் கட்டுறாங்க. அதோட பேரு செண்ட்ரல் சினிமா அப்பறம் 1949-ல அந்த தியேட்டரை வித்துட்டு ஒரு பெரிய தியேட்டர் கட்டணும்னு நினைக்குறாங்க. போடி ஜமீன்தார் ஒருத்தர்கிட்ட 55 சதுர அடி நிலம் வாங்குறாங்க. வேலையெல்லாம் ஆரம்பிச்சு போயிட்டு இருந்தப்போ திடீர்னு அந்த தங்கமணி இறந்திடுறாரு. அவரோட நினைவா பிச்சைமுத்து அந்தத் தியேட்டருக்கு தங்கம் தியேட்டர்னு பெயர் வைக்கிறாரு.

1952-ல கிட்டத்தட்ட 9 லட்ச ரூபாய் செலவுல இந்த தியேட்டர் கட்டப்பட்டப்போ ஆசியாலயே மிகப்பெரிய தியேட்டரா அது இருந்தது. ஒரு நேரத்துல 2500 பேர் உட்கார்ந்து படம் பார்க்கலாம். ஆயிரம் சைக்கிள் நிறுத்துற அளவுக்கு பார்க்கிங் இருந்தது. அந்த தியேட்டர்ல ஒரு படம் ஹவுஸ்ஃபுல்னாலே அந்த படம் ப்ளாக் பஸ்டர்னு முடிவு பண்ணிடலாம். தங்கம் தியேட்டரில் முதன் முதலாக திரையிடப்பட்ட படம் பராசக்தி. அந்த தியேட்டர் கட்டி முடிப்பதற்கு முன்பாகவே அக்டோபர் 17-ஆம் தேதி தீபாவளியன்று திரையிடப்பட்டது. 2500 இருக்கைகள் கொண்ட அந்த தியேட்டரிலும் 112 நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது பராசக்தி. 50 பைசா டிக்கெட்ல இருந்து 5 ரூபா டிக்கெட் வரைக்கும் இருந்தது. தியேட்டர் பேரு தங்கம்னு இருந்ததால ஹை-க்ளாஸ் டிக்கெட்டை கோல்டு பேப்பர்ல ஜிகுஜிகுனு பிரிண்ட் பண்ணி கொடுத்தாங்க. முழுதாக கட்டி முடிக்காத தியேட்டரில் தரையில் அமர்ந்து மக்கள் படம் பார்த்தார்கள். நாடோடிமன்னன் படம் 175 நாள் ஓடியது. இந்த தியேட்டர்ல ஒரு படம் 50 நாள் ஓடுனாலே மத்த தியேட்டர்ல 500 நாள் ஓடினதுக்கு சமம். அதிகபட்சமா தூறல் நின்னு போச்சு படம் 300 நாட்கள் ஓடியதாம். தங்கம் தியேட்டர் 25 வருடங்கள் வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தபோது 25 வது ஆண்டை ஒட்டி ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தது தங்கம் தியேட்டர். அப்போது ஜெய்சங்கர் நடித்த துணிவே துணை படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அந்த படத்தை ஒரே டிக்கெட்டில் இரண்டு முறை பார்க்கலாம் என்றது தங்கம் தியேட்டர்.

Thangam Theatres
Thangam Theatres

இந்த தியேட்டர் பத்தி தெரிஞ்சுக்கும்போது 70-களோட இறுதியில அந்த தியேட்டர்ல படம் பார்த்த ஒருத்தர் சொன்ன விஷயம் ஆச்சர்யமா இருந்தது. ஒரே நேரத்தில 2500 பேர் படம் பார்க்கலாம்னா அந்த தியேட்டர்ல டிக்கெட் வாங்குறது ஈசினு தானே நினைப்பீங்க.. ஆனா முண்டி அடிக்கிற கூட்டத்துல ஒருத்தர் தலை மேல ஒருத்தர் ஏறி டிக்கெட் எடுக்க டிரை பண்ணுவாங்க. அதுலயும் மூணு முறை டிரை பண்ணபிறகுதான் டிக்கெட் கிடைச்சதுனு சொல்லிருக்காரு. இவ்வளவு கூட்டம் எந்தப் படத்துக்கு தெரியுமா? எதோ ரஜினி, கமல் படம்னு நினைக்காதீங்க. ‘The Spy Who Loved Me’ என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு வந்த கூட்டம் இது. அப்போ தமிழ் படத்துக்கு எப்படி இருந்திருக்கும்?

1986-ல பிச்சைமுத்து இறந்தப்பறம் தங்கம் தியேட்டரோட சரிவு ஆரம்பிச்சது. 1995-ஆம் ஆண்டு நாகார்ஜூனா நடித்த ‘ஈஸ்வர்’ படம்தான் தங்கம் தியேட்டரில் கடைசியாக வெளியான படம். பெரியார் பேருந்து நிலையத்துக்கு அருகில் மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் தங்கம் தியேட்டர் இருந்த இடத்தில் தற்போது சென்னை சில்க்ஸ் இயங்கி வருகிறது.

இதே மாதிரி உங்க ஊர்ல ஃபேமஸான தியேட்டர் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top