ஈரான் கும்பல்

சென்னையில் கைவரிசை காட்டிய ஈரான் கும்பல்… போலீஸ் வளைத்தது எப்படி?

சென்னையில் சோமாலியாவைச் சேர்ந்தவரிடம் கொள்ளையடித்த ஈரான் நாட்டைச் சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். ஈரானியர்களை சென்னை போலீஸ் வளைத்தது எப்படி?

சோமாலியாவில் ஒரு பள்ளியொன்றில் முதல்வராக இருக்கும் 61 வயதான அலி அகமது என்பவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்திருக்கிறார். அவர் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் இருக்கும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்கிறார். சிகிச்சைக்கு வழிகாட்டியான அப்துல் என்பவருடன் நுங்கம்பாக்கம் சென்றுவிட்டு அலி மாடல் பள்ளி சாலை கார்ப்பரேஷன் பள்ளி எதிரே நடந்து வந்திருக்கிறார்.

அப்போது, அலி மற்றும் அப்துலை இரண்டு கார்களில் வந்த 3 பேர் வழிமறித்து, தங்களை மத்திய போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று அலியிடம் கேட்டிருக்கிறார்கள். இதையடுத்து அலி, தனது கைப்பையில் இருந்து ஆவணங்களோடு பர்சையும் எடுத்துள்ளார், கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் அவரது பர்சில் வைத்திருந்த அமெரிக்க டாலர் 3,800 (இந்திய மதிப்பில் ரூ.2,77,000) பணத்தை பறித்து தப்பியோடினர்.

இது தொடர்பாக அலி ஆயிரம் விளக்கு காவல்துறையினரிடம் புகார் அளித்தபோது அவர்கள் போலி போலீஸ் என தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேடி வந்தனர். சிசிடிவியில் பதிவான முக அடையாளங்கள் வட மாநிலத்தவர் போல் இருந்தது. இதே பாணியில் கொள்ளையடிக்கும் கும்பல் குறித்தான பழைய குற்றவாளியின் அடையாளங்களைத் தேடி உள்ளனர்.

மேலும் சிசிடிவியில் பதிவான அடையாளங்களில் உள்ள நபர்கள் குறித்து அனைத்து லாட்ஜ் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும், இதே பாணியில் கடந்த 10 நாட்களில் அசோக் நகர், விருகம்பாக்கம், கொளத்தூர், கே.கே நகர் ஆகிய இடங்களிலும் போலீசார் எனக்கூறி கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில் சிசிடிவிகாட்சிகளை பின்தொடர்ந்த போலீசார் இந்த கும்பல் கோவளத்தில் உள்ள ரிசார்டில் தங்கி இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதன்பேரில் நுங்கம்பாக்கம் தனிப்படை போலீசார் விரைந்து அறையில் பதுங்கி இருந்த 3 பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் ஈரானிய கும்பல் என தெரியவந்தது. ஈரான் நாட்டை சேர்ந்த சபீர் (35), ரூஸ்தம்சைதி( 28), ஷியவஸ் (26) மற்றும் 3 பெண்கள் உட்பட 9 பேர் என தெரியவந்தது.

கவனத்தை திசை திருப்பி நொடிப்பொழுதில் லாவகமாக திருடுவதில் ஈரானியக் கொள்ளையர்கள் வல்லவர்கள். இவர்கள் துணி வியாபாரம் செய்வது போல் ஆளில்லாத பகுதியை நோட்டமிட்டு முதியவர்களை குறிவைத்து திருடுவது, போலீஸ் என கூறி நகைகளை மடித்து வைக்க சொல்லி கற்களை மடித்துகொடுத்து கொள்ளையடிப்பது போன்ற பாணியில் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

இதே போல் சென்னையில் பல இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 13 செல்போன் , ஈரான் பணம் 5 லட்சம், அமெரிக்கா டாலர் 28, இந்திய பணம் ரூபாய் 57,000 மற்றும் 2 கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Also Read : ரூ.10,000 முதல் கோடி ரூபாய் வரை… அதிரவைக்கும் ஆன்லைன் சூதாட்ட லக்கி ஸ்டார் – ஜெனிசிஸ் மோசடி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top