சமீபத்துல இறந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் ஒரு ஹேண்ட் பேக் வச்சிருப்பாங்க. ராணி கூட வர்றவங்க அந்த ஹேண்ட் பேக்லதான் மொத்த கவனமும் வச்சிருப்பாங்க. ஏன்னா அதுல ஒரு முக்கியமான ராணுவ ரகசியம் இருக்கு. அது என்னங்குறதை இந்த வீடியோ நடுவுல சொல்றேன். இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்கு செல்ஃபி எடுக்ககூடாதுங்குறதுல இருந்து நெயில்பாலிஷ் கலர் வரைக்கும் ஏகப்பட்ட கண்டிசன்கள் இருக்கு. ராஜ வம்சத்தை சேர்ந்தவங்க எங்க போனாலும் ஒரு முக்கியமான பொருள் அவங்க கூடவே போகுமாம்.. அது என்ன? அந்த ஊர் இளவரசருக்கு 12 வயசு ஆகிடுச்சுனா அப்பாவோட ஃப்ளைட்ல போகமுடியாது.. எதனால? இந்த மாதிரி பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இருக்கும் விநோதமான ரூல்ஸ்லாம்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
* அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொதுவெளியில் கருப்பு உடை அணியக்கூடாது. ஆனால் அவர்கள் வெளியூர் அல்லது வெளிநாட்டுக்குச் செல்லும்போது கட்டாயம் அவர்களுடன் ஒரு கருப்பு உடை எடுத்துச் செல்வது வழக்கம். காரணம் அரச குடும்பத்தில் யாராவது இறந்தால் மொத்த குடும்பமும் கருப்பு உடையில்தான் இருக்க வேண்டும். எலிசபெத் ராணியின் தந்தை இறந்தபோது இளம் வயதில் இருந்த ராணி கென்யாவில் இருந்தார். செய்தி கேட்டு திரும்பியபோது அவர் கருப்பு உடை எதுவும் அவருடன் எடுத்து வரவில்லை. அவருக்காகவே ஒரு கருப்பு உடை எடுத்து வரும்வரை விமானத்திலேயே காத்திருந்து வந்தபிறகு அதை அணிந்துகொண்டுதான் லண்டனில் காலடி எடுத்துவைத்தார். முழங்கால் தெரியும்படி உடை அணிவதோ, கவர்ச்சியான உடை அணிவதோ நோ நோ. ஆனால் இளவரசி டயானா மட்டும் இந்த விஷயத்தில் தக் லைஃப் செய்து எலிசபெத் பாட்டியை கதறவிட்டார்.
* சாப்பாடு விஷயத்தில் ராணியின் தேர்வுதான் எல்லாமே. ராணிக்கு உருளைக்கிழங்கு, பாஸ்தா போன்ற பொருட்கள் பிடிக்காது. பூண்டு சுத்தமாக ஆகாது. அதனால் இந்த பொருட்கள் எதுவும் அரண்மனை விருந்தில் இருக்காது. அதே போல் ராணி சாப்பிட்டு முடித்துவிட்டால் உடன் அமர்ந்து சாப்பிடுபவர்களும் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
* அரச குடும்ப வாரிசுகள் ரெண்டு பேரு ஒரே விமானத்துல பயணம் செய்யக்கூடாது. அதாவது அப்பா பையனா இருந்தாக்கூட எங்கயாவது போறதுனா தனித்தனி ஃப்ளைட்லதான் போகணும். நாற்காலிக்கு ஆசைப்பட்டு அங்கயே அடிச்சு மல்லுக்கட்டுனா… எதுக்கு வம்புனு இப்படி ஒரு ரூல். அதுமட்டும் கிடையாது பயணத்தின் போது ஒருவருக்கு எதாவது ஆச்சுனா வாரிசா இன்னொருத்தர் இருக்கணும்ல அதான்.
* பிரிட்டிஷ் மன்னர் வகையறாவா இருந்தாலும் பிரிட்டிஷ் கவர்மெண்ட் பத்தி எங்கயும் பேசக்கூடாது. ஓட்டுப் போடவும் கூடாது. ஆட்டோகிராஃப் போடவோ, செல்ஃபி எடுக்கவோ கூடவே கூடாது.
* மகாராணி நின்று கொண்டிருக்கும்போது அவருக்கு முன்பு யாரும் உட்காரக்கூடாது. அதேபோல ஒருவர் எப்போ பேசணும் பேசக்கூடாதுனும் ராணிதான் முடிவு பண்ணுவாங்க. இதுக்கு ஒரு சிக்னல் இருக்கும். ராணியின் இடது கையில் ஒரு ஹேண்ட் பேக் இருக்கும். நீங்க பேசிட்டு இருக்கும்போது ராணி அந்த பேக்கை வலது கைக்கு மாற்றினால் ‘நீ ரொம்ப பேசுற.. சைலண்ட்’ என்பதற்கான சிக்னல். அதே பர்சை கீழே வைத்தால் இந்தாளு என் நேரத்தை வேஸ்ட் பண்றான் இடத்தை காலி பண்ண சொல்லுங்கனு அர்த்தம். அதே டின்னர் டேபிளின் மேல வச்சா 5 நிமிசத்துல இங்க இருந்து கிளம்ப போறாங்கனு அர்த்தம். இப்படி சின்னக்கவுண்டர் துண்டு மாதிரி அந்த ஹேண்ட் பேக்கை பயன்படுத்துறாங்க.
சரி இப்போதான் ராணி போய் ராஜா வந்தாச்சே இவர் ஹேண்ட் பேக்கிற்கு பதிலா எதை வச்சி சிக்னல் கொடுப்பாரு. நீங்களே ஒரு ஐடியா சொல்லுங்க?
* அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு நிறையவே கட்டுபாடுகள். அடிக்கிற கலரில் நெயில்பாலிஷ் போடக்கூடாது, அதிகமாக மேக்கப் போடக்கூடாது, கண்மை, லிப்ஸ்டிக் அளவாக இருக்கவேண்டும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது தொப்பி அணிய வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் கிரீடம் அணிந்துதான் அரண்மனைக்குள் சுற்றவேண்டும்.
* எலிசபெத் ராணியும் சரி, இப்போதைய அரசர் சார்லஸூம் சரி எங்கே பயணம் போனாலும் அவர்களுடன் ஒரு டாக்டரும் எல்லா விதமான மருத்துவ உபகரணங்களும், அவர்களுடைய ரத்தமாதிரியும் கூடவே போகும்.
* ராணிக்கு டிரைவிங் லைசன்ஸ் கிடையாது. ஆனால் அவர் எங்கு வேண்டுமானாலும் கார் ஓட்டலாம். அவருடைய காருக்கு நம்பர் ப்ளேட்டும் இருக்காது. அதே போல் அவருக்கு பாஸ்போர்ட்டும் கிடையாது. எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் போகலாம். அரச குடும்பத்தில் மற்றவர்களுக்கு பாஸ்போர்ட் இருக்கிறது.
* மன்னர் குடும்ப பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பும் வழக்கம் கிடையாது. வீட்டிலேயே ஆசிரியர்கள் வந்து சொல்லிக்கொடுப்பார்கள். நிறைய மொழிகள் கற்றுத்தரப்படும். இப்போது பதவியேற்றிருக்கும் சார்ல்ஸ்க்கு மாண்டரின், ஸ்பானிஷ், அரபிக் உள்ளிட்ட ஆறு மொழிகள் தெரியும். இந்த ரூலை மாத்தினதும் இளவரசி டயானாதான். தனது மகன்களை எல்லா மாணவர்களும் படிக்கும் பப்ளிக் ஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வைத்தார். அவருடைய பாணியில் இப்போது டயானாவின் மகன் இளவரசர் வில்லியம்ஸ் தன்னுடைய மகன்களை பொதுப்பள்ளியில் சேர்த்துள்ளார்.
* ராயல் ஃபேமிலியைச் சேர்ந்தவர்கள் ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என எந்த சோசியல் மீடியாவிலும் இருக்கக்கூடாது.
* யார் என்ன கிஃப்ட் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொள்ளவேண்டும்.