மாணவர்கள்

இன்ஜினீயரிங், கலை – அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்… வழிமுறைகள் என்ன?

கொரோனா பிரச்னைகள் காரணமாக தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்ற குழப்பம் மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வி ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரின் மத்தியிலும் நிலவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பிரச்னைகள் குறைந்து வருவதால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களது உயர்கல்விக்கான வழிகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர். இன்ஜினீயரிங், கலை – அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்!

கல்லூரிக் கல்வி இயக்கமானது தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.org மற்றும் www.tngasa.in ஆகிய இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.2 பெறப்படுகிறது. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை மாணவர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் இணையதளம் வழியாக செலுத்தலாம். இணையதளம் வழியாக கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் `The Director, Directorate of Collegiate Education, Chennai – 6′ என்ற பெயரில் 26/07/2021 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வழியாக இன்று (26/07/2021) முதல் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். விண்ணப்பத்தை இணையதளம் வழியாகப் பதிவு செய்ய 10/08/2021 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சந்தேகங்கள் எழும்பட்சத்தில் 044 – 28260098 மற்றும் 28271911 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு கேட்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு இன்று (26/07/2021) முதல் www.tneaonline.org அல்லது www.tndte.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24 வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 25-ம் தேதி ரேண்டம் எண் வெளியாகும். செப்டம்பர் 4-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும். செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 20-ம் தேதிக்குள் கலந்தாய்வானது முடிக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Also Read : ஹிமாச்சல் சோகம்… 9 பேர் பலி – நிலச்சரிவுக்கு 25 நிமிடங்கள் முன்பு டாக்டர் பகிர்ந்த போட்டோ! #Viral

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top