தோனி

IPL 2021: `தோனி ஃபினிஷிங்; ஆனந்தக் கண்ணீர்விட்ட குட்டி ரசிகர்கள்!’ – #DCvCSK மேட்சின் 5 `வாவ்’ மொமண்ட்கள்!

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.

DCvCSK மேட்சின் 5 `வாவ்’ மொமண்ட்கள்!

பிரித்விஷா, பன்ட் – ஹெட்மெயர் ஷோ

டாஸில் தோற்ற டேபிள் டாப்பர்ஸ் டெல்லி அணிக்கு தொடக்க வீரர் பிரித்வி ஷா வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். சிக்ஸர், பவுண்டரிகளோடு இன்னிங்ஸைத் தொடங்கிய அவர், ஷ்ரதுல் தாக்குர் ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்து அசத்தினார். மறுமுனையில் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டுகளை ஹசல்வுட் வீழ்த்தினாலும், பிரித்வி ஷாவின் ஸ்டிரைக் ரேட் மட்டும் குறையவில்லை. நான்காவது வீரராக புரமோட் செய்யப்பட்ட அக்ஸர் படேல் பெரிதாக ஜொலிக்கவில்லை. பிரித்வி ஷா 34 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஹெட்மெயர் - ரிஷப் பன்ட்
ஹெட்மெயர் – ரிஷப் பன்ட்

ஐந்தாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த கேப்டன் ரிஷப் பன்ட் – ஹெட்மெயர் ஜோடி 83 ரன்கள் சேர்த்தது. இதனால், டெல்லி அணி 174 என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. பன்ட் 35 பந்துகளில் 51 ரன்களும், ஹெட்மெயர் 24 பந்துகளில் 37 ரன்களும் சேர்த்தனர்.

உத்தப்பா – கெய்க்வாட் ஸ்பெஷல் இன்னிங்ஸ்

174 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய சி.எஸ்.கே-வின் இன் ஃபார்ம் பேட்ஸ்மேனான டூப்ளஸிஸ் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய ராபின் உத்தப்பா, இந்த சீசனில், தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். கெய்க்வாட் நிதானம் காட்டிய நிலையில், அதிரடியாக விளையாடிய உத்தப்பா, கெய்க்வாட்டோடு இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 77 பந்துகளில் 110 ரன்கள் சேர்த்தார். 35 பந்துகளில் அரைசதமடித்த உத்தாப்பா, தனது அரைசதத்தை பிறந்தநாள் கொண்டாடும் மகனுக்கு அர்ப்பணித்தார். அவர் 44 பந்துகளில் 63 ரன்களோடு வெளியேறினார். அதன் பின்னர் அதிரடியைத் தொடங்கிய கெய்க்வாட் 50 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

உத்தப்பா - கெய்க்வாட்
உத்தப்பா – கெய்க்வாட்

டாம் கரணின் திருப்புமுனை ஓவர்

இரண்டாவது விக்கெட்டுக்கு உத்தப்பா – கெய்க்வாட் ஜோடி 100 ரன்களுக்கு மேல் குவித்திருந்தநிலையில், 14வது ஓவரை டாம் கரண் வீச வந்தார். இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் உத்தப்பா, ஸ்ரேயாஸ் ஐயரின் துல்லிய கேட்சில் வெளியேறினார். நான்காவது வீரராக புரமோட் செய்யப்பட்ட ஷ்ரதுல் தாக்குர், அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் அம்பதி ராயுடு ரன் அவுட்டாக, 113-1 என்றிருந்த சி.எஸ்.கே ஸ்கோர், 119-4 என்று மாறியது.

தோனியின் ஃபினிஷிங்

தோனி
தோனி

19-வது ஓவரின் முதல் பந்தில் கெய்க்வாட் வெளியேற, சென்னையின் வெற்றிக்கு கடைசி 11 பந்துகளில் 23 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அவேஷ் கான் வீசிய அந்த ஓவரில் தோனியின் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்கள் கிடைக்கவே, கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டது. டாம் கரண் வீசிய முதல் பந்தில் மொயின் அலி ஆட்டமிழந்தார். கடைசி 5 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், இரண்டாவது பந்தில் தோனி ஒரு பவுண்டரி அடுத்தார். அடுத்த பந்து இன்சைட் எட்ஜாகி பவுண்டரி எல்லையைத் தொட்டது. இதனால், பிரஷர் எகிறியது. அடுத்த பந்தை டாம் கரண் வொய்டாக வீச, நான்காவது பந்தை லெக் சைடில் பவுண்டரியாக்கிய தோனி சி.எஸ்.கே வெற்றியை உறுதி செய்தார். 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த சி.எஸ்.கே, முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. ஐ.பி.எல் தொடரில் ஒன்பதாவது முறையாக சி.எஸ்.கே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறது.

உணர்ச்சிவசப்பட்ட குட்டி ரசிகர்களுக்கு தோனி கொடுத்த பரிசு

சி.எஸ்.கே ரசிகர்கள்
சி.எஸ்.கே ரசிகர்கள்

கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை சென்னை அணி பதிவு செய்த போது, கேலரியில் இருந்த இரண்டு குட்டி ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டனர். அண்ணனும் தங்கையும் ஆனந்தக் கண்ணீர் விட்ட காட்சி போட்டியின் ஸ்பெஷல் மொமண்டாகப் பதிவானது. இதை பெரிய ஸ்கிரீனில் பார்த்த தோனி, போட்டி முடிந்ததும் ஆட்டோகிராஃப் போட்ட மேட்ச் பாலை அந்தக் குட்டி ரசிகர்களுக்கு அன்பளிப்பாக அளித்தார். இதனால், அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Also Read – MS Dhoni: `சென்னையில்தான் கடைசி போட்டி’ – ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு குறித்து தோனி சூசகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top