ஹாரிஸ் ஜெயராஜ்

ஏ.ஆர்.ரஹ்மானின் படையப்பா படத்தில் மாஸ் கூட்டிய ஹாரிஸ் ஜெயராஜ்!

‘முத்து’ வெற்றிக்குப் பிறகு, ரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி மீண்டும் இணைந்த படம் ‘படையப்பா’. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றாலும் அப்போது அவரிடம் உதவியாளராக இருந்த ஹாரிஸ் ஜெயராஜ், இன்றும் பேசப்படும் அப்படத்தின் ஊஞ்சல் சீனின் பின்னணி இசையில் ஒரு தரமான சம்பவம் செய்திருக்கிறார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவே ‘படையப்பா’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரஜினியின் கொல மாஸ் காட்சிகளாகவே உருவாக்கப்பட்டு இருக்கும். ரஜினி பாம்பை பிடிக்கும் காட்சி, மாட்டை அடக்கும் காட்சி, ரம்யா கிருஷ்ணாவை  எதிர்கொள்ளும் காட்சிகள் என அனைத்திலும் மாஸ் மாஸ் மாஸ்தான். இயல்பிலேயே மாஸாக இருந்த இந்தக் காட்சிகள் அனைத்துக்குமே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய பவர்ஃபுல் பின்னணி இசையால் இன்னும் மாஸ் கூட்டியிருப்பார்.

படையப்பா
படையப்பா

ஆனால், இரண்டாம் பாதியில், 18 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக ரஜினியும் ரம்யா கிருஷ்ணனும் சந்தித்துக்கொள்ளும் காட்சிக்கு மட்டும் ரஹ்மானுக்கு ஏனோ மூட் செட் ஆகாமல் பின்னணி இசையமைக்காமலேயே இருந்து வந்திருக்கிறார். இப்படியே சில நாட்கள் சென்றிருக்கிறது. அந்த ஒரு காட்சியைத் தவிர்த்து மற்ற அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு ஊஞ்சல் சீனுக்கு பி.ஜி.எம் அமைத்துவிட்டால் படத்தின் இசை சம்பந்தப்பட்ட வேலைகள் முடிந்தது என்ற நிலை இருந்திருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

அப்போது ஒருநாள் ஸ்டூடியோவில் ரஹ்மான் இல்லாத சமயம், அப்போது அவரது பிரதான உதவியாளராக இருந்த ஹாரிஸ் ஜெயராஜை வைத்துக்கொண்டு அந்தக் காட்சிக்கு, ஏற்கெனவே படத்தில் ஆங்காங்கே வரும் பின்னணி இசைக்கோர்வைகளை வைத்து தற்காலிகமாக, ரெடி செய்து பார்க்கலாம் என முயன்றிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். அதன்படி அந்தக் காட்சியில் ரஜினி வந்து ரம்யா கிருஷ்ணை சந்தித்துவிட்டு திரும்ப செல்வதுவரை அதாவது ஊஞ்சலை கீழே இழுத்துவிட்டு அமரும் மாஸ் மொமண்ட் தவிர்த்து அனைத்துக்கும் பின்னனி இசை முடிந்தாயிற்று. அந்தக் குறிப்பிட்ட மாஸ் மொமண்ட்க்கு மட்டும் என்ன செய்வது என கே.எஸ்.ரவிக்குமார் குழப்பத்தில் இருந்தபோது ஹாரிஸ் ஜெயராஜ், ‘சார்.. டைட்டில்ல படையப்பான்னு வரும்போது ரஹ்மான் சார் ஒரு மியூசிக் போட்டிருப்பாருல்ல.. அதை எடுத்து இங்க போட்டா வொர்க் ஆகும்’ என்றிருக்கிறார். அதைக் கேட்டு கே.எஸ்.ரவிக்குமாரும் உற்சாகமாக, ஹாரிஸ் ஜெயராஜ் அந்த இசையை எடுத்து இங்கு வைக்க, கனக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. ‘சரி.. எதற்கும் ரஹ்மான் வரட்டும்.. அவர் என்ன சொல்லப்போகிறாரோ..’ என கே.எஸ்.ரவிக்குமார் நினைத்துக்கொண்டிருக்க, ரஹ்மானும் ஸ்டூடியோவுக்கு வந்திருக்கிறார். அந்தக் காட்சியை பின்னணி இசையுடன் பார்த்திருக்கிறார். பார்த்து ஆச்சர்யமாகி, ‘ஹேய்.. இதே ரொம்ப நல்லாருக்குப்பா.. அப்டியே வெச்சிடுங்க’ என சொல்லியிருக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் அப்போவே அப்படி..!

Also Read : `10 ஆண்டு நிராகரிப்பு… மாஸ்க்கின் பின்னணி’ – `Squid Game’ பற்றிய 11 சுவாரஸ்யங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top