Kishore K samy

கிஷோர் கே.சாமி, சாட்டை துரைமுருகன், டாக்ஸிக் மதன் – யூ டியூபர்கள் மீது நடவடிக்கை… பின்னணி!

தமிழகத்தில் யூ டியூபர்களான சாட்டை துரைமுருகன், கிஷோர் கே.சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கேமிங் யூ டியூப் சேனலை நடத்தி வரும் மதன் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறது காவல்துறை… என்ன காரணம்?

கொரோனா ஊரடங்கில் யூ டியூபின் வளர்ச்சி செலிபிரட்டிகள் தொடங்கி சாமானியர்கள் வரை புதிய சேனல் தொடங்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. பொழுதுபோக்கு, சமையல் உள்ளிட்ட விவகாரங்கள் தாண்டி சர்ச்சைகளும் இதனால் கச்சைகட்டின. யூ டியூபர்களான சாட்டை முருகன், கிஷோர் கே.சாமி மற்றும் டாக்ஸிக் மதன் ஆகிய மூன்று பேர் மீது கடந்த சில நாட்களில் தமிழகக் காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. முதல் இருவர் அரசியல்ரீதியான செயல்பாடுகளால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கேமிங் யூ டியூப் சேனல் நடத்தி வரும் மதனை நேரில் விசாரணைக்கு ஆஜராகச் சொல்லியிருக்கிறார்கள் சென்னை புளியந்தோப்பு காவல்நிலைய போலீஸார். என்ன நடக்கிறது… பின்னணி என்ன… வாங்க தெரிஞ்சுக்கலாம்.

சாட்டை துரைமுருகன்

சாட்டை என்ற பெயரில் யூ டியூப் சேனல் நடத்தி வரும் துரைமுருகன், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் இளைஞர் பாசறை செயலாளராக இருந்தவர். திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த சமர் கார் ஸ்பா நிறுவனத்தின் உரிமையாளர் வினோத் என்பவர், கடந்த சில நாட்களாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் ஆகியோரை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்திருக்கிறார்.

சாட்டை துரைமுருகன்

இதற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், வினோத்தின் கார் நிறுவனத்துக்கு நேரில் சென்றும் பேசியிருக்கிறார். அவரது பதிவுக்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றையும் போலீஸார் முன்னிலையில் பதிவு செய்ய அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். இதையடுத்து, தன்னை மிரட்டியதாக போலீஸில் வினோத் புகார் அளித்தார். இதையடுத்து ஐந்து பிரிவுகளின் கீழ் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்த திருச்சி போலீஸார், அவரைக் கைது செய்து ரிமாண்ட் செய்திருக்கிறார். தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளைப் பதிவு செய்ததாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கிஷோர் கே.சாமி

கிஷோர் கே.சாமி

பெரியார், முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது அவதூறாகக் கருத்துகளைப் பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க ஐ.டி விங் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கடந்த 10-ம் தேதி போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் தாம்பரம் கிளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மீது கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் கிஷோர் கே.சாமியை ஜூன் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இது, தி.மு.க-வினரின் பழிவாங்கும் நடவடிக்கை என்று பா.ஜ.க தரப்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இவர் ஏற்கனவே பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாகப் பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் ஆவார்.

கேமர் மதன்

மதன்

மேற்குறிப்பிட்ட இருவரும் அரசியல்ரீதியான கருத்துகளால் கைது செய்யப்பட்டனர். ஆனால், மதன் விவகாரம் முற்றிலும் வேறுபட்டது. யூ டியூபில் லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை வைத்திருக்கும் மதன் இரண்டு சேனல்களை நடத்தி வருகிறார். மதன் மற்றும் டாக்ஸிக் மதன் என்ற பெயரில் இவர் யூ டியூபில் பப்ஜி கேமை லைவில் ஒளிபரப்பி வருகிறார். இவரது பெரும்பாலான சப்ஸ்கிரைபர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் என்ற நிலையில், லைவ்வில் ஆபாசமாகப் பேசுவதும், பெண்களை அவதூறாகப் பேசுவதும் இவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள். அதற்கு ஆதாரமாக அவரது யூ டியூப் பக்கத்தில் இருக்கும் வீடியோக்களையே சுட்டுகிறார்கள் குற்றம்சாட்டுபவர்கள். அவர் மீது பல்வேறு புகார்கள் வந்திருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியிருந்தார். இந்தநிலையில், அவரை நேரில் ஆஜராகுமாறு சென்னை புளியந்தோப்பு போலீஸார் சம்மன் அனுப்பியிருக்கிறார்கள். இந்தநிலையில், போலீஸ் விசாரணைக்கு அஞ்சி மதன் தலைமறைவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள் காவல்துறையினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top