பாலிவுட்

தமிழ் to இந்தி ரீமேக்… பாலிவுட் ‘பதம்’ பார்த்த ஃபர்னிச்சர்கள்!

லோகேஷ் கனகராஜ் – கார்த்தி காம்போல பிரியாணி விருந்து படைத்த ‘கைதி’ படத்தோட இந்தி ரீமேக்கான ‘போலா’ பட டீசரைப் பார்த்து நம்ம மக்கள் திகைச்சிப் போய் இருக்காங்க. அஜய் தேவ்கன் சிங்கம் ஹீரோ மாதிரியே இங்கேயும் பல சேட்டைகள் செய்து வைத்திருக்கிறார். ரைட்டுன்னு ரிலாக்ஸ் பண்ண ஆரம்பிச்சா, ‘வீரம்’ இந்தி ரீமேக்கான ‘கிஸி கா பாய் கிஸி கா ஜான்’ டீசர் வெளியாகி, சல்மான் சிறப்பு செஞ்சிருக்கார். இந்த ரெண்டு பட டீசரையும் பார்த்து, ‘என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க’ன்ற கேள்விதான் எழுது. சமகாலத்துல மட்டுமல்ல, கடந்த காலத்திலும் இந்தக் கருப்புச் சரித்திரம் இருந்துருக்கு. அப்படி, தமிழில் ஹிட்டடித்து இந்தி ரீமேக்கில் பாலிவுட் உடைத்துப் பதம் பார்த்த ஃபர்னிச்சர்கள் சிலவற்றைதான் இந்த வீடியோ ஸ்டோரியில் பார்க்கப் போகிறோம்.

பாலிவுட்டுக்கும் கோலிவுட்டுக்கும் இடையிலான மிகப் பெரிய உறவுன்னா, அது ரீமேக் மூலமாதான் வலுவாகியிருக்கு. ரஜினிகாந்த் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராக நீடிக்க 80ஸ், 90ஸ்ல பல இந்தி படங்களின் ரீமேக் துணைபுரிந்திருக்கு. குறிப்பா, அமிதாப் பச்சனோட மாஸ் படங்கள் பலவற்றை தமிழில் ரீமேக் செய்து வெற்றிக் கொடி நாட்டியவர் ரஜினி. இதே மாதிரி, தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்து பல வெற்றிகளைக் குவித்தவர்களில் முக்கியமானவர் அனில் கபூர். பல தமிழ் ஹிட் படங்கள் மிகச் சிறப்பா பாலிவுட்ல ரீமேக் ஆகியிருக்கு.

கடந்த 20, 30 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் சேது, ரமணா, கஜினி, மெளன குரு தொடங்கி ரீசன்ட்டா வந்த ‘விக்ரம் வேதா’ வரைக்கும் பல படங்கள் இந்தி ரீமேக்கில் விமர்சன ரீதியாவும், வசூல் ரீதியாவும் சாதித்ததைப் பார்க்க முடிகிறது. அதேவேளையில், இங்கே கொண்டாடப்பட்ட பல படங்கள் இந்தி ரீமேக்கில் சொதப்பப்பட்டு, அதுவா இது? இதுவா அது?-ன்னு நாம மிரண்டு போற அளவுக்கு பங்கம் பண்ணப்பட்ட படங்களும் பல உண்டு. அவற்றில் சில சாம்பிள்களைதான் இப்போ பார்க்கப் போறோம்.

அனாரி
பாலிவுட் ரீமேக் – அனாரி

பி.வாசு இயக்கத்தில் பிரபு – குஷ்பு நடித்த ‘சின்னத்தம்பி’ படம் 90ஸ்ல சரித்திர வெற்றி படைச்சுது நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயம்தான். அந்தப் படத்தின் இந்தி ரீமேக்கான ‘அனாரி’ (Anari) தென்னிந்தியாவின் ரிமேக் நாயகர்களில் குறிப்பிடத்தக்கவரான வெங்கடேஷ் – கரீஷ்மா கபூர் நடிச்சிருப்பாங்க. ரீமேக்கோட அடிப்படை விதியே மண்ணுக்கேத்த மாதிரி பட்டி டிங்கரிங் பாக்கணும்ன்றதுதான். ஆனா, இந்தப் படத்தை ஃப்ரேம் பை ஃப்ரேம் அப்படியே அடிச்சி வெச்சிருப்பாங்க. நம்மளால இதை கூட டைஜஸ்ட் பண்ணிக்க முடியும். ஆனா, ரொம்ப செயற்கைத்தனமான காட்சி அமைப்புகள், வசன உச்சரிப்புகள்னு நம்மை பாடவைத்த சின்னத்தம்பிக்கு பாடை கட்டியது பாலிவுட்.

அடுத்து, விக்ரமன் – விஜய் காம்போல தமிழில் காதல் காவியமான பூவே உனக்காக படத்தை, இந்தி ரீமேக் லெஜண்ட் அனில் கபூர் பண்ணினார். பதாய் ஹோ பதாய் (Badhaai Ho Badhaai) என்ற படம் அப்பவே போட்ட காசை எடுக்கலை. முதல் சொதப்பலே காஸ்டிங்தான். கதைப்படி ஹீரோ ஒரு இளைஞர். ஆனா, அனில் கபூரை அப்பவே அங்கிள் ஆகிட்டாரு. தமிழ் ரசிகர்கள் உச்சுகொட்டி பார்த்த பல சீன்கள், அங்கே பெருசா இம்பாக்டே கொடுக்காத அளவுக்கு ஃபர்னிச்சரை உடைச்சி வெச்சிருந்தாங்க.

Badhaai Ho Badhaai
பாலிவுட் ரீமேக் – Badhaai Ho Badhaai

1999-ல் இந்தியில் வெளியானது அமிதாப் பச்சன் அண்ட் கோ நடித்த ‘சூர்யவன்ஷம்’ (Sooryavansham). யெஸ், நம்ம விக்ரமனோட அதே சூர்யவம்சம் படம்தான். அங்க ஓரளவு ஹிட்டுதான். ஆனா, சீரியஸா எடுத்து வெச்சிருக்குற அந்த ரீமேக் ஏனோ நாம பார்க்கும்போது சிப்புச் சிப்பா வரும். இதுல ப்யூட்டி என்னன்னா, டிவில டிஆர்பி பயங்கரமா கொடுக்குதா என்னன்னு தெரியலை, இந்தியத் தொலைக்காட்சி சேனல்களில் அதிகம் ஒளிபரப்பான படங்கள் பட்டியலில் இதுக்கு தனி இடம் உண்டு. செட் மேக்ஸ் சேனலின் ‘கும்கி’ இதுவென்றால் அது மிகையல்ல.

விண்ணைத் தாண்டி வருவாயா… எப்பேர்பட்ட படம். ரீமேக்ன்ற பேருல எத்தனையோ காதல் காவியங்களை காவு வாங்கிய பாலிவுட், இந்தப் படத்தையும் விட்டு வைக்கலை. பொதுவாக, தமிழில் வெற்றி பெற்ற ஒரு படத்தை, அதே இயக்குநர் இந்தியிலும் ரீமேக் செய்தால் அது மெகா ஹிட் தான் ஆகியிருக்கு. ஆனா, கெளதம் வாசுதேவ் மேனன் டைரக்ட் பண்ணியும் இந்த ரீமேக் மொக்கை வாங்கினதுக்கு என்ன காரணம்னு படத்தோட ட்ரைலரை பார்த்தாலே புரிஞ்சிக்க முடியும்.

இந்த ‘ஏக் தீவானா தான்’ (Ekk Deewana Tha) கொடுத்த பகீரக அனுபவம் ஏக் அல்ல… பவுத் ஜாதா ஹே! ஆம், விடிவில ஜீவனே சிம்பு – த்ரிஷாவின் இயல்பான கெமிஸ்ட்ரிதான். ஆனால், இந்தில பிரதேய்க் பாப்பர் – எமி ஜாக்சன் கெமிஸ்ட்ரி ஜீரோ பர்சன்ட்னு கூட இல்ல, மைனஸ் 10 பர்சன்ட்னே சொல்லலாம். அதுவும், எஜி ஜாக்சனை இந்தியத்துவப் படுத்துறேன்னு டஸ்கி கலர் அப்பி வெச்சது எல்லாம் வன்முறை.

Ekk Deewana Tha
பாலிவுட் ரீமேக் – Ekk Deewana Tha

வெற்றி மாறன் – தனுஷ் காம்போல வெளிவந்த க்ளாசிக் படங்கள்ல ஒண்ணு ‘பொல்லாதவன்’. க்ளாஸ் ஆன இந்தப் படத்தை இந்தியில் மாஸ் ஆன படமா கொடுக்க முயற்சி பண்ணி, ஒரிஜினலுக்கு அநியாயம் செஞ்ச படம்தான் 2007-ல் வெளிவந்த ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’. வெற்றி மாறன் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்திருந்தா, ‘பொல்லாதவன்’ படத்தோட ஸ்பூஃப் போலன்னு கூட நினைக்குற அளவுக்கு பக்குவமா பதம் பாத்திருக்காங்க மக்களே.

சுசீந்தரனின் ‘வெண்ணிலா கபடி குழு’ 2014-ல் பத்லாபூர் பாய்ஸ் (Badlapur Boys) என்ற பெயரில் இந்தியில் ரீமேக்கானது. ஒரு நல்ல ஸ்டோரி, ஸ்கிரிப்ட் கிடைச்சுட்டா, ரீமேக் பண்ணும்போது ஆர்வக் கோளாறு அதிகமாகி, படத்தோட இயல்புத்தன்மை, எமோஷன்ஸ், ஆக்‌ஷன்ஸ் எல்லாத்தையும் கண்ணாபின்னான்னு தூக்கலாக்கி தூக்குல தொங்கவிட்றதும் நடக்கும். அதான், இந்தப் படத்துக்கும் நடந்துச்சு.

2018-ல் அபய் தியோல் நடித்து வெளிவந்த காமெடி இந்திப் படம் ‘நானு கி ஜானு’ (Nanu Ki Jaanu). இந்தப் படத்தோட ஒரிஜினல் மிஷ்கினின் ‘பிசாசு’. என்னடா சொல்றீங்க? மிஷ்கின் எப்படா பிசாசு படத்தை காமெடியா எடுத்தாரு? உறவுகளையும் உளவியலையும் அட்டகாசமா டீல் பண்ண படம்டா பிசாசு. குறிப்பாக, பேய்ன்னா பேய் அல்ல.. தேவதைன்னு சொல்லியிருப்பாரேடா – இப்படியெல்லாம் நாம கதறுற அளவுக்கு காமெடின்ற பேருல மொக்கை பண்ணியிருப்பாங்க இந்தி ரீமேக் டீம்.

இன்னொரு பேய்ப்படமும் இப்படி ஊத்திக்கிச்சு. அது ராகவா லாரன்ஸே இந்தியில் டைரக்ட் செய்த லக்‌ஷ்மி. அதான், காஞ்சனா ரீமேக். பேரார்வத்துல எல்லாமே ஓவரா பண்ணினது சொதப்பலா மாறினது இந்த ரீமேக்ல கவனிக்கலாம். படமும் செம்ம ஃப்ளாப்.

Rangeela Raja
பாலிவுட் ரீமேக் – Rangeela Raja

80ஸ் தொடக்கத்துல அடல்ட் காமெடி புரட்சி செய்த படம், ரஜினி நடிச்ச ‘நெற்றிக்கண்’. அந்தப் படத்தை 2019-ல் தன்னோட கம்பேக்குக்காக பயன்படுத்த முயன்று கோவிந்தா பல்பு வாங்கிய படம்தான் ரங்கீலா ராஜா (Rangeela Raja). ஆம், கோவிந்தாவுக்குன்னு இருந்த கொஞ்ச நஞ்ச இமேஜையும் இந்தப் படம் காலி பண்ணிடுச்சுன்னா, சொல்றதுக்கு வேற என்ன இருக்கு?

இந்தியில் ரீசன்ட் டேஸ்ல வுமன் சென்ட்ரிக் வகைல தென்னிந்தியாவில் ஹிட்டான படங்களை ரீமேக் செய்வதில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் ஆர்வம் காட்டி வர்றாங்க. அந்த வகையில, ‘கோலமாவு கோகிலா’ படம் இந்தியில் ‘குட் லக் ஜெர்ரி’-ன்னு (Good Luck Jerry) ஹாட் ஸ்டார்ல போன வருஷ்ம் வெளியாகிச்சு. நயன்தாரா ரோலை பக்காவா ஜான்வி கொண்டுவந்திருந்தாங்க. மேக்கிங் ஸ்டைலும் இந்திக்கு ஏத்தபடி சில மாற்றங்களுடன் நல்லா இருந்துச்சு. ஆனா, ஜான்வி தவிர மத்த காஸ்டிங் எல்லாமே சொதப்பலோ சொதப்பல். கோலமாவு கோகிலோவோட முக்கிய ப்ளஸ்ஸே காஸ்டிங்தான். அது இந்தில டோட்டல் மிஸ்ஸிங்.

Also Read – ஆமால்ல.. ஹேட்டர்ஸ் இல்லாத டைரக்டர்ஸ் இவங்கதான்!

கடைசியா, தமிழ்ல தெறிக்கவிட்ட ஜிகர்தண்டா படத்தை அக்‌ஷய் குமார் எப்படியெல்லாம் பங்கம் பண்ணாருன்றது நமக்கெல்லாம் தெரியும். ஆனா, இப்போ வரக்கூடிய கைதி, வீரம் இந்தி ரீமேக்கின் டீசர்களை பார்க்கும்போது அதுவே பெட்டரா தோணுது.

பொதுவாக, ஜெயிக்கிற குதிரைல பந்தயம் வைக்கிறது சேஃப்-னு சொல்வாங்க. ரீமேக்கும் அப்படித்தான். ஆனா, அந்தக் குதிரைக்கு புதுசா பேரு வெச்சா மட்டும் பத்தாது. சோறும் வைக்கணும். ரைட்டு… தமிழ்ல இருந்து இந்திக்கு ரீமேக் ஆன படங்களில் உங்களை ஈர்த்தவை, உங்களை ஈரக்குலை நடங்கவைத்தவை பட்டியலை கமெண்ட் பண்ண மறந்துடாதீங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top