கூடங்குளம் அணு உலை

கூடங்குளம் அணுக்கழிவு மைய சர்ச்சை… என்ன பிரச்னை… தீர்வு?!

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள்மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த அணு உலைகள் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக ஆண்டுக்கு ஒருமுறை நிறுத்தப்படும். அந்த அணுஉலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் பொருள்கள் அணுக்கழிவாக மாறுகிறது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம், இரண்டு அணு உலைகளிலிருந்து உற்பத்தியாகும் கழிவுகளை அணுமின் நிலைய வளாகத்திற்கு உள்ளேயே சேமித்து வைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்வதற்கான அனுமதியை கொடுத்திருந்தது. 

கூடங்குளம் அணு உலை
கூடங்குளம் அணு உலை

அந்த உத்தரவில் அணுக்கழிவு சேமிப்பு மையம் நிலையானதா அல்லது தற்காலிகமானதா என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. அதனால், அணு உலை வளாகத்திற்கு உள்ளேயே அமைக்கப்படும் இந்த மையத்தில் நிரந்தரமாக அணுக்கழிவுகள் சேமிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாகக் கவலை தெரிவிக்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். தற்போது அங்கு செயல்படும் இரண்டு அணு உலைகளிலும் உருவாகும் கழிவுகள் உலைக்குக் கீழேயே சேமிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான், வளாகத்துக்குள் கழிவுகளைச் சேமிக்கும் மையத்தைத் துவங்க இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் முடிவெடுத்துள்ளது.

தற்போது அந்தக் கழிவுகள் அணு உலைக்குக் கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படுகின்றன. அந்தக் குட்டையில் சேமிக்கப்படும் அணுக்கழிவுகளை எட்டு ஆண்டுகளுக்கு மட்டும்தான் சேமிக்க முடியும். எனவே, அணுஉலையில் உருவாகும் புளூட்டோனியம் கழிவு, உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்துக்குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த செயல்முறைக்கு Away From Reactor என்று பெயர். இந்த மையத்தில் நிரந்தரமாகக் கழிவுகள் சேமித்து வைக்கப்படாது. இது தற்காலிகமான ஓர் அணுக்கழிவு மையமே. ஆனால், அணு உலையிலிருந்து உற்பத்தியாகும் அணுக்கழிவை Deep Geological Repository எனும் முறையில் நிரந்தரமாகச் சேமித்து வைப்பதுதான் முறையானது. ஏனெனில் நிரந்தரமாகச் சேமித்து வைக்கப் பூமிக்கடியில் பல கி.மீ ஆழத்தில் சேமிக்க வேண்டும். தற்காலிகமாகச் சேமிக்கும் மையத்தில் ஆழம் அதிகமாக இருக்காது. ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிட்டால் விளைவுகள் கொடூரமானதாக இருக்கும். அணுக்கழிவுகள் அந்தந்த அணுஉலை வளாகத்துக்குள் சேமித்ததன் பலனைச் செர்னோபில், புகுஷிமா போன்ற அணு உலை விபத்துகள் மூலம் அந்த நாட்டு மக்கள் இப்போதும் அனுபவித்து வருகிறார்கள். 

கூடங்குளம் அணுக்கழிவு மையம் வழக்கும், சர்ச்சையும்!

கூடங்குளம் அணு உலை
கூடங்குளம் அணு உலை

கூடங்குளம் அணு உலை தொடர்பாகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013-ம் ஆண்டுத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சில நிபந்தனைகளை விதித்து அணுஉலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனையானது அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான நிரந்தர அணுக்கழிவு மையத்தை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதுதான். கால அவகாசம் முடிந்து, 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய அணுமின் சக்தி கழகம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில் இந்த அணுக்கழிவு மையம் கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை. இந்தியாவில் முதல்முறையாக இதைச் செய்யப்போகிறோம். அதனால் இது மிகவும் சவாலானதாக இருக்கும். மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் தேவைப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் 2022-ம் ஆண்டுக்குள் அணுக்கழிவு மையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. கட்டமைப்பதில் உள்ள தொழில்நுட்பம் முழுவதுமாகக் கைவராத நிலையில் அதை அமைப்பதில் சிக்கல்களைச் சந்தித்து வருகிறோம். அதனால்தான் மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் வேண்டும் எனக் கூறியிருந்தது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் 2022-ம் ஆண்டு வரைக்கும் கால அவகாசம் அளித்திருந்தது. இந்நிலையில்தான் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம்.

அணுக்கழிவுகள் தன்மை இதுதான்!

ஓர் அணுஉலை இயங்கும்போது மின்சாரத்தை கொடுக்கலாம். ஆனால் சில காலத்துக்குப் பின்னர் உலைகள் ஓய்வெடுத்துக் கொள்ளும். ஆனால், அதன்பின்னர் அணுக்கழிவுகள் தனது பணியினைத் தொடங்க காத்திருக்கும். அணுக்கழிவு மையத்தில்தான் பல டன் எடை கொண்ட அணுக்கழிவுகள் உறங்கிக்கொண்டிருக்கும். இவற்றைக் குளிர்விப்பது நின்றுவிட்டால் விழித்துக்கொள்ளும். அப்போது நேரும் துயரங்கள் ஆயிரம் மடங்கு கொடூரமானதாக இருக்கும். இந்த அணுக்கழிவுகளில் உள்ள சீசியம் மற்றும் ஸ்ட்ரான்டியம் செயலிழக்க 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால் புளுட்டோனியம் பாதி செயலிழக்கவே பல நூறு ஆண்டுகள் தேவை. அதுவரை அந்த அணுக்கழிவு மையத்தை எந்த ஒரு பேரிடரும் தாக்காமல் இருக்க வேண்டும்.

இந்த அனுமதி அறிவிப்பு வெளியானதும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்திருந்த அணுசக்தித் துறை இந்தியாவில் அணுக் கழிவுகளை நிரந்தரமாகச் சேமித்து வைக்கும் ஆழ்நிலை கழிவு மையம் அமைப்பதற்கான அவசியம் தற்போது எழவில்லை எனத் தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு முற்றிலும் எதிரான இந்த நிலைப்பாடு கூடங்குளத்தில் உருவாக்கப்படும் கழிவுகள் அனைத்தும் நிரந்தரமாக அந்த வளாகத்திற்குள்ளாகவே வைக்கப்பட்டு விடுமோ என்கிற அச்சத்தை உண்டாக்குகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நிரந்தரமாக அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைக்கும் இடத்தைக் கண்டறியும் வரை கூடங்குளம் அணுஉலையிலிருந்து மேற்கொண்டு மின் உற்பத்தி செய்யக் கூடாது மற்றும் தற்போது நடந்து வரும் நான்கு உலைகள் அமைக்கும் பணிகளையும் நிறுத்த வேண்டும்” என்றும் தெரிவித்திருக்கிறது.

கூடங்குளம் அணு உலை
கூடங்குளம் அணு உலை

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகரும் ராதாபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு, “இந்தத் திட்டத்துக்கான  ஒப்பந்தம் போடப்பட்டபோதே அணுக்கழிவுகளை ரஷ்யாவுக்கு எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு சோவியத் ரஷ்யா உடைந்ததால் திட்டம் நின்று போனது. இதற்குப் பிறகு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அந்த ஒப்பந்தத்தில் அணுக்கழிவுகளை எங்குச் சேமிப்பது என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மக்கள் வசிக்காத பகுதியான பொக்ரான் போன்ற இடங்களில்தான் வெடிகுண்டு சோதனையைச் செய்தார். அதேபோல, மக்கள் வாழாத இடங்களில்தான் அணுக்கழிவு மையத்தை அமைக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அணுக்கழிவு மையம் சர்ச்சையைச் சந்தித்துக் கொண்டே வருகிறது. நிரந்தரமான அணுக்கழிவு மையம் அமைக்காத வரை கூடங்குளம் அணு உலை சர்ச்சையைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Also Read – LocalBodyElection: ஒரு வாக்கு டு தரையில் அழுதுபுரண்ட வேட்பாளர் வரை – உள்ளாட்சித் தேர்தல் 15 சுவாரஸ்யங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top