குழந்தை இல்லாத தம்பதியினருக்கு மிகப்பெரிய வரமாக அமைந்தது தான் வாடகை தாய் முறை. வாடகை தாய் முறை என்பது என்ன? இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தைப்பெற்றுக்கொள்ள என்ன விதிமுறைகளை அமலில் இருக்கின்றன தெரியுமா?
இந்தியாவில் Surrogacy விதிமுறைகள்
இந்தியாவில் வாடகைத்தாய் விவகாரம் குறித்து 20 வருடங்களுக்கு மேலாக விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. வாடகைத்தாய் மூலம் ஒரு தம்பதியினர் குழந்தை பெற 15 முதல் 20 லட்ச ரூபாய் வரை செலவாகிறது. அதாவது, கரு உருவாதல் தொடங்கி, வாடகைத் தாய்க்கு செலவு செய்ய, வாடகைத் தாய்க்கு தனிப்பட்ட கட்டணம், குழந்தை பிறக்கும் முன் மருத்துவ செலவு, குழந்தை பிறந்த பின் மருத்துவ செலவு என அனைத்தும் சேர்த்து சுமார் 20 லட்ச ரூபாய் வரை செலவாகும்.
பெரும்பாலும் இந்த வாடகைத்தாய் முறையை வெளிநாட்டினர் இந்தியாவைச் சேர்ந்த வாடைகைத் தாய்கள் மூலம் குழந்தை பெற்று வந்தனர். 2005-2015 இடைப்பட்ட காலத்தில் மட்டுமே வெளிநாட்டு தம்பதிகள் இந்திய வாடகைத் தாய்கள் மூலம் சுமார் 25,000 குழந்தைகளை பெற்றுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இதுகுறித்த தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடந்த 2015-ல் வெளிநாட்டு தம்பதியினர் இந்திய வாடகைத் தாய்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இதற்கு முன்னரே 2013 ஆம் ஆண்டில் ஒரு பாலினத்தவர்கள் இந்த முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தடை செய்யப்பட்டது. அதன் பிறகு 2016-ல் மொத்தமாக வாடகைத்தாய் முறையைத் தடை செய்ய மசோதா கொண்டுவரப்பட்டது.
கடந்த 2021-ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வாடைகைத் தாய் முறையைத் தடை செய்யும் மசோதா நிறைவேறி, 2022 ஜனவரியில் சட்டமாகி அமலுக்கு வந்தது. இந்த வாடகைத்தாய் முறை மூலம் ஆணின் விந்தணு, அவரின் மனைவியின் கருமுட்டையுடன் சேர்த்து கருவாக உருவாக்கப்படும். அதன் பின் அந்த கருவானது, வாடகைத் தாயின் வயிற்றில் சேகரிக்கப்பட்டு வளர்க்கப்படும். இதற்கு கர்பக்கால வாடகைத் தாய் முறை என்று பெயர். இந்த முறைக்கு மட்டுமே இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது கருவுற முடியாத பெண்கள் மட்டுமே இந்த முறை பயன்படுத்தி மகப்பேறு அடைய முடியும். இந்தியாவில் தற்போது இந்த முறை மட்டுமே அமலில் உள்ளது.
Also Read – தீபாவளிக்கு போனஸூம் கிடையாது. லீவும் கிடையாது. ரங்கநாதன் தெரு கடைகளின் நிஜமுகம்!
சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- திருமணமாகி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தும் மகபேறு அடையும் வாய்ப்பு கிடைக்காத இந்திய தம்பதிகள் மட்டுமே இந்த முறையை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
- குழந்தை பெற்றுத்தர நினைக்கும் வாடகைத் தாய், குழந்தை பெற நினைக்கும் தம்பதியினருக்கு உறவினராக இருக்க வேண்டும். அதுவும், திருமணமாகி குழந்தைப் பெற்றவராக இருத்தல் வேண்டும். 25-35 வயதிற்க்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். மனநல பிரச்சனைகள் ஏதுமில்லாதவர்களாக இருத்தல் அவசியம்.
- வாடகைத் தாய் ஒருமுறை மட்டுமே இந்த முறை மூலம் குழந்தை பெற்றுக் கொடுக்க முடியும். குழந்தை தேவைப்படும் தம்பதியினரில் கணவருக்கு 26-55 வயதுக்குள்ளும், மனைவிக்கு 23-50 வயதுக்குள்ளும் இருத்தல் அவசியமாகும்.
- தன்பாலின ஈர்ப்பாளர்கள், மனைவி அல்லது கணவன் இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக வாடகைத் தாய் முறை மூலம் குழந்தைபெற நினைப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் சிறைதண்டனையும் வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.
- வாடகைத்தாய் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு தம்பதியினரின் சொத்தில் முழு உரிமை உண்டு. இந்த முறை மூலம் பிறக்கும் குழந்தைகளை தம்பதிகள் எந்த சூழ்நிலையிலும் கைவிடக்கூடாது.
- வாடகைத் தாய்மார்களுக்கு 16 மாதங்கள் மருத்துவக் காப்பீடு செய்து தருவது அவசியம்.