முகவரி

விஜய் ரசிகர்களும் ரசிக்கும் முகவரி.. கிளாசிக் ஹிட்டுக்கான 4 காரணங்கள்!

அஜித் ரசிகர்கள் மட்டுமில்ல, விஜய் ரசிகர்களுக்கும் ரொம்ப பிடிச்ச ஒரு அஜித் படம்னா அது முகவரி படமாதான் இருக்க முடியும். 2000 –ஆம் வருஷம் பிப் 19-ஆம் தேதி, இந்தியாவே ஆர்வமா எதிர்பார்த்த கமலோட ஹேராம் படத்துக்கு போட்டியா வெளியான படம்தான் முகவரி. ஆனாலும் முகவரி விமர்சனரீதியாவும் சரி வணிகரீதியாவும் சரி நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுச்சு.  இந்த வெற்றிக்கான காரணங்கள் பற்றிதான் இப்போ நாம பார்க்கப்போறோம்.

அஜித்

அஜித்னா சால்ட் & பெப்பர் லுக்ல,வெறித்தனமா பைக் ஓட்டுற, பேஸ் வாய்ஸ்ல பேசி மாஸ் காட்டுற அஜித்தைதான் இப்போ உள்ள ஃபேன்ஸுக்குலாம் தெரியும். ஆனா நாலு நாள் தாடியோட, கிறங்கடிக்கிற அழகோட, உதடுகளுக்கும் வலிக்காம பேசுற மாடுலேசன்ன்னு எல்லோருக்கும் பிடிச்ச ஒரு அஜித் அப்போ இருந்தாரு. அந்த கியூட் விண்டேஜ் அஜித் நடிச்சதுல ரொம்ப முக்கியமான படம்தான் முகவரி. ஒரு சாதாரண குடும்பத்துல பிறந்து மியூசிக் டைரக்டரா ஆகனும்னு ஆசைப்படுற ஸ்ரீதர்ங்கிற கேரக்டருக்கு அஜித் அவ்வளவு அழகா ஃபிட் இன் ஆகியிருப்பாரு. படம் முழுக்க கண்கள்ல கனவுகளை சுமந்துகிட்டு சந்திக்கிற எல்லா நிராகரிப்புகளையும் வலியோட ஏத்துக்கிற அந்த கேரக்டருக்கு சின்ன சின்ன எக்ஸ்பிரசன் மூலமா உயிர் கொடுத்திருப்பாரு அஜித். இத்தனைக்கும் அப்போ அவர் பேரலலா அமர்க்களம் படத்துலயும் நடிச்சுக்கிட்டிருந்திருக்காரு. அந்தப் படத்துல அவருக்கு முரட்டுத்தனமான ஒரு ரவுடி கேரக்டர், ஆனா முகவரில அப்படியே கான்ட்ராஸ்டா ஒரு சாஃப்டான இளைஞன் கேரக்டர். இந்த ரெண்டு படமும் ஒரே நேரத்துல ஷூட்டிங் நடந்ததுங்கிறதால லுக்கா ரெண்டு படத்துக்கும் ஒரே லுக்தான். ஆனா அந்த ரெண்டு கேரக்டருக்குமான வித்தியாசங்களை தன்னோட நடிப்பாலயும் மேனரிசங்களாலயும் வேறுபடுத்தி காட்டியிருப்பார். அதுதான் அஜித். அஜித் பத்தி சோசியல் மீடியாவுல அரசல் புரசலா பரவிக்கிட்டிருக்குற ஃபேமஷான விஷயம் ஒண்ணு இந்தப் பட ஷூட்டிங்கில நடந்ததுதான். இந்தப் படத்துல வர்ற பூ விரிஞ்சாச்சு ஷூட் பண்றதுக்காக டீம் மொத்தமும் ஊட்டி போறதுன்னு முடிவாகியிருக்கு. யூனிட் மொத்தமும் போய் ஊட்டில இறங்குறதுக்கு முன்னாடியே யூனிட்ல இருந்த 109 பேருக்கும் முன்கூட்டியே அஜித் ஜெர்கின் வாங்கி ரெடியா வெச்சிருந்து சர்ப்பரைஸ் பண்ணியிருக்காரு.  அந்த அளவுக்கு அஜித் இந்தப் படத்தோட கதையைக் கேட்டதுல இருந்து தொடங்கி முடியுறவரைக்கும் ஒட்டுமொத்த டீமோடயும் ஜெல் ஆகி அவ்வளவு அழகா பண்ணிக்கொடுத்திருக்காரு. 

VZ துரை

இன்னொரு முக்கியமான காரணம் இயக்குநர் VZ துரை. முகவரி படத்தோட கதையை எழுதுன துரை, இதை எப்படியாவது அஜித்தை வைச்சுதான் பண்ணனும்னு தீவிரமா முயற்சி செஞ்சி அதை சாத்தியமாக்கியிருக்காரு. அந்த அளவுக்கு கதையோட ஆரம்ப புள்ளியிலேர்ந்தே அஜித்தை மனசுல வெச்சே இந்தக் கதையை எழுதியிருக்காரு துரை. படத்துல அஜித் ஜோதிகாகிட்ட போன்ல கேட்டுச்சான்னு கேட்டு பேசுற ஒரு சீன் இருக்கும். அதுதான் முகவரி படத்தோட முதல்நாள் ஷூட்டிங். அன்னைக்கு சுத்தியிலும் வொயிட் பேக் டிராப் இருக்குறமாதிரி செட் பண்ணி, அஜித்தை வெச்சு அந்த சீனை அவர் எடுத்து முடிச்சதுமே அஜித் மிரண்டுப்போயிட்டாராம். எக்ஸலண்ட் எக்ஸ்லண்ட்னு சொல்லி பாராட்டுனதும் இல்லாம, அப்போ தன்னோட காதலியா இருந்த ஷாலினிக்கு போன் பண்ணியும் ஷூட்டிங் எக்ஸ்பிரியன்ஸ் பத்தி சொல்லியிருக்காரு. அதுமட்டும் இல்லாம, முதல் நாள் ஷூட்டிங்க்லயே துரை உங்களுக்கு நான் ஒரு கார் வாங்கித் தருவேன்னும் ப்ராமிஸ் பண்ணியிருக்காரு அஜித். எந்த அளவுக்கு இயக்குநர் துரையோட எழுத்தும் வொர்க்கிங் ஸ்டைலும் இருந்திருந்தா அஜித்தை இப்படி சொல்லவைச்சிருக்கும்னு நீங்களே முடிவு பண்ணியிருக்கோங்க. சொன்ன மாதிரியே அஜித் படத்தோட ரிலீஸ்க்கு முன்னாடியே டப்பிங் வெர்சன் பாத்ததுமே டைரக்டர் துரைக்கு வொயிட் சாண்ட்ரோ கார் ஒண்ணு வாங்கி ப்ரெசண்ட்டும் பண்ணியிருக்காரு. 

பக்காவான டெக்னிக்கல் டீம்

முகவரி படத்துக்கு அமைஞ்ச ஒரு பக்காவான டெக்னிக்கல் டீமும் அதோட வெற்றிக்கு முக்கிய காரணம்னு சொல்லலாம்.  சினிமோட்டோகிராஃபரா பி.சி ஸ்ரீராம் ஒவ்வொரு ஷாட்டையும் கதையோட மீட்டருக்கு ஏத்தமாதிரி துறுத்தல் இல்லாம அழகா எடுத்திருப்பாரு. படமே ஒரு மியூசிக்கல் சப்ஜெக்ட்ங்கிறதால இசையமைப்பாளர் தேவாவும், ஹேய் ஹே கீச்சுக்கிளியே, ஓ நெஞ்சே நெஞ்சே, ஏய் நிலவே ஏய் நிலவேன்னு வெரைட்டியான பாடல்களை தந்து தன்னோட பங்கை சிறப்பாவே பண்ணிக்கொடுத்திருப்பாரு. அதுக்கேத்த மாதிரி வைரமுத்து எழுதுன வரிகளும் கவித்துவமா இருக்கும். ‘காலங்கள் கனியும்வரை பேசாமல் காற்றுக்கு இசையமைப்பேன்’ மாதிரியான கதைக்கான வரிகள் தொடங்கி, புதுசா அப்போ பிறந்திருந்த புது மில்லினியத்தை வரவேற்கிற மாதிரி அவர் எழுதுன ‘ஆண்டே நூற்றாண்டே’ பாட்டுல வர்ற வரிகள் ஒவ்வொண்ணுமே தரமான சம்பவமா இருக்கும். இன்னொரு பக்கம் எழுத்தாளர் பாலகுமாரனோட எழுத்து.  ‘தோத்துட்டா மக்குன்னு சொல்லுவாங்க ஜெயிச்சுட்டா லக்குன்னு சொல்லுவாங்க’ ‘ஒருத்தன் ஜெயிச்சுட்டா அதைக் கொண்டாட அவனோட குடும்பம் இருக்கணும். அந்த குடும்ப இல்லாம நான் ஜெயிக்கிறதுல அர்த்தம் இல்ல’ அப்படிங்கிற அவரொட வசனங்கள்லாம் காலம் கடந்தும் இன்னைக்கும் நம்ம மனசுல பதிஞ்சிருக்கு. 

ரகுவரன்

பொதுவா ரகுவரனுக்கு ரெண்டு முகம், ஒண்ணு அதிரடிக்கிற வில்லன் முகம். இன்னொன்னு பாசம் காட்டி உருகுற நல்ல முகம். அப்படியொரு  கேரக்டர்தான் ரகுவரனுக்கு முகவரியில. படத்துல ஒரு சீன்ல அஜித்தை மோட்டிவேட் பண்றதுக்காக ரகுவரன் குட்டிக்கதையொன்னு சொல்லுவார். படத்துல இதை ஷூட் பண்ற அன்னைக்கு ரகுவரன் முதல்வன் பட கிளைமேக்ஸுல  நடிச்சுக் கொடுத்துட்டு நேரா இங்க முகவரி செட்டுக்கு வந்தாராம். வந்ததும், இப்பதான் அங்க என்னை சுட்டு  ரத்தவெள்ளத்துல தூக்கிப்போட்டாங்க. அங்கயிருந்து இங்க வந்தா வாவ் வாட் எ பொயட்டிக் சீன்னு சீன் பேப்பரை படிச்சதுமே அவ்வளவு ரசிச்சிருக்காரு. கிட்டத்தட்ட 2 நிமிசம் வர்ற அந்த சீனை சிங்கிள் ஷாட்ல அசத்தலா நடிச்சுக் கொடுத்திருப்பாரு ரகுவரன். படம் வந்ததுக்கப்புறம் ரசிகர்கள் லேட் நைட்லலாம்  அவருக்கு கால் பண்ணி, சார் அந்த கதைய ஒருதடவை சொல்லுங்களேன்னு சொல்லி கேட்பாங்களாம். அந்த அளவுக்கு அந்த குட்டிக் கதை அப்போ ரொம்ப ஃபேமஸா இருந்துச்சு. 

படம் ரிலீஸான அன்னைக்கு இயக்குநர் துரை டென்சனா தியேட்டருக்கு வெளியில வெயிட் பண்ணிக்கிட்டிருந்தப்ப, படம் முடிஞ்சு வெளியில வந்த எஸ்.வி.சேகர் ‘275 டேஸ் ஓடவேண்டிய ஒரு படத்தை படத்தை 100 நாள் படமா ஆக்கிட்டீங்க எனிவே கங்கிராட்ஸ்னு சொல்லியிருக்காரு என்ன சார் சொல்றீங்கன்னு ஷாக் ஆகி கேட்க, கிளைமேக்ஸ்ல ஹீரோ ஜெயிக்கிற மாதிரி காட்டியிருந்தா இன்னும் பெரிய ஹிட் ஆகியிருக்கும்னு எஸ்.வி.சேகர் சொல்லியிருக்காரு. அவரை மாதிரியே பல தரப்புல இருந்தும் கிளைமேக்ஸ் பத்தி விமர்சனம் வர ஆரம்பிச்சிருக்கு. படத்தைப் பாத்த கே.எஸ்.ரவிக்குமார் இன்னும் ஒரு ஸ்டெப் மேலேப்போய், ‘இப்பயும் ஒண்ணும் கெட்டுப்போகலை. கிளைமேக்ஸை ரீஷூட் பண்ணி சேர்த்துடலாம். நானும் நடிக்கிறேன். கே.எஸ்.ரவிக்குமார் அந்த பையனுக்கு மியூசிக் பண்ண சான்ஸ் தர்றமாதிரி பாசிட்டிவா வைங்கன்னுலாம் சொல்லியிருக்காரு. சரி எல்லாரும் இப்படி சொல்றாங்கள்ன்னு பாசிட்டிவ் கிளைமேக்ஸை எடுத்து படத்துல சேர்த்துடலாம்னு துரை முடிவு பண்ணி பி.சி.ஸ்ரீராம்கிட்ட சொல்ல, என்ன விளையாடுறீங்களா, படத்தோட நாவல்டியைக் கெடுத்துடாதீங்க. அப்படி பாசிட்டிவ் கிளைமேக்ஸ்தான் எடுத்து வைப்பீங்கன்னா அதுக்கு நான் கேமரா பண்ணமாட்டேன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்காரு. அஜித்தும் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியும் கிளைமேக்ஸை மாத்த வேண்டாம்ங்கிற கருத்துலயே உறுதியா இருக்க, கிளைமேக்ஸை ரீ ஷூட் பண்ற ஐடியாவை கைவிட்டிருக்காங்க. ஆனா, டிஸ்டிரிப்பியூட்டர்கள்லாம் முடியாதுன்னு மறுத்து, படத்துல வந்த வேற வேற மாண்டேஜ்களை எடுத்து, அஜித் கடைசியில ஒரு பெரிய மியூசிக் டைரக்டர் ஆகுறமாதிரி தாங்களாவே எடிட் பண்ணி தியேட்டர்கள்ல சேர்த்துக்கிட்டாங்க.

நீங்க சொல்லுங்க, முகவரி படத்தை ஃபர்ஸ்ட் டைம் தியேட்டர்ல நீங்க பாத்தப்ப எந்த கிளைமேக்ஸை பாத்தீங்க.. அப்போ உங்க ஃபீல் என்னவா இருந்துச்சு..? இந்தப் படத்துக்கு எந்த க்ளைமேக்ஸ் சரி..? 

1 thought on “விஜய் ரசிகர்களும் ரசிக்கும் முகவரி.. கிளாசிக் ஹிட்டுக்கான 4 காரணங்கள்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top