கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை போலீஸ் எந்த இடத்திலும் மறுவிசாரணை செய்யலாம். அதற்குத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரலில் நடந்த கொள்ளை முயற்சி, கொலை அதைத் தொடர்ந்த மர்ம மரணங்கள் தொடர்பாக நீலகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சமீபத்தில் ஜாமீனில் விடுதலையாயினர்.
அதில், சயானுக்கு சம்மன் அனுப்பி நீலகிரி போலீஸார் அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்க அ.தி.மு.க சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சட்டப்பேரவையிலேயே அ.தி.மு.க கண்டனம் தெரிவித்தது. கொடநாடு கொலை வழக்கில் தனது பெயரையும் சேர்க்க சதி நடக்கிறது’ என முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.இந்த வழக்கில் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லை’ என சட்டப்பேரவையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
இந்தநிலையில், கொடநாடு வழக்கு மறுவிசாரணைக்குத் தடை கோரி அரசு தரப்பு சாட்சியான அனுபவ் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வழக்கு முடியும் தறுவாயில் இருக்கும் வழக்கில் மறுவிசாரணை செய்ய நீதிமன்றத்தின் அனுமதி அவசியம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், மாஜிஸ்திரேட்டிடம் உரிய அனுமதி பெறாமல் நீலகிரி போலீஸார் மறுவிசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த வழக்கில் தங்களுக்கு ஆதரவாகச் சாட்சியம் அளிக்கும்படி பல்வேறு தரப்பில் இருந்தும் மிரட்டல்கள் வருவதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மறுவிசாரணைக்கு என்ன தேவை ஏற்பட்டது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், உண்மையைக் கண்டுபிடிக்க மேல் விசாரணை உதவலாம். வழக்குத் தொடர்ந்தவர் புகார்தாரரோ, குற்றவாளியோ அல்ல. சாட்சி மட்டுமே. வழக்கின் விசாரணையை எந்த இடத்திலும் விரிவுபடுத்தலாம். கிடைத்திருக்கும் ஆதாரங்களைக் கொண்டு பாரபட்சமற்ற விசாரணையைத் தொடர எந்தவொரு தடையும் இல்லை என்று நீதிபதி, ரவியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார். இந்தநிலையில், உதகை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த கொடநாடு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 3-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது. கொடநாடு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இது எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் சிக்கலை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
Also Read – பேரவையில் எதிரொலித்த கொடநாடு வழக்கு…. 2017-ல் என்ன நடந்தது?