ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் ஆனார்; பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். ஆனால், பன்னீரின் பதவியைப் பறித்து, சசிகலா அந்த இடத்தில் அமர முயன்றபோது, பன்னீர் ‘தர்மயுத்தம்’ என்ற பெயரில் கட்சியில் இருந்து விலகி, தனி அணியாகப் பிரிந்து போனார். சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புத் தேதி வெளியானது. அதைக் காரணம் காட்டி, அன்றைய தமிழக ஆளுநர், சசிகலாவின் முதலமைச்சர் கனவைக் கலைத்தார். அதனால், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கிவிட்டு, ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றார்.
கை மீறிய காய் நகர்த்தல்கள்!
சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, மன்னார்குடி குடும்பத்திலும், அ.தி.மு.க-விலும் நடந்தவை எல்லாம், சசிகலாவின் கையை மீறிய காய் நகர்த்தல்கள். குடும்பத்தில் தினகரன் மற்றவர்களை ஓரம் கட்டத் தொடங்கினார். அ.ம.மு.க-வைத் தொடங்கி தன்னைத் தனியாக அடையாளப்படுத்திக் கொண்டார். பன்னீர் செல்வத்திடம் இருந்து சசிகலா பறித்த முதலமைச்சர் பதவியை, சசிகலாவிடம் இருந்து பெற்றுக் கொண்ட பழனிசாமி, பன்னீரையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார். சசிகலா, அ.தி.மு.க-வில் வகித்து வந்த பொதுச்செயலாளர் என்ற பதவியே கலைக்கப்பட்டது. சசிகலாவும், தினகரனும், அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். ஆட்சி அதிகாரத்திற்கு சசிகலாவால், கொண்டுவரப்பட்ட பழனிசாமி கட்சிக்குள் தன்னை அசைக்க முடியாத சக்தியாக நிறுவிக் கொண்டார். சிறையில் இருந்த சசிகலாவும், மன்னார்குடி குடும்பமும், கட்சியில் இருந்த சசிகலா ஆதரவாளர்களும், சிறைத் தண்டனை முடிந்து அவர் வெளியே வரட்டும் எனக் காத்திருந்தனர்.
ஆனால், இடைப்பட்ட மூன்றரை ஆண்டுகளில் மத்தியில் இருந்த பி.ஜே.பி-யோடு, குறிப்பாக பிரதமர் மோடி-அமித்ஷா கூட்டணியோடு இணக்கத்தை வளர்த்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, சசிகலா வெளியே வந்தால் கட்சிக்குள் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் அவர்களின் தயவையே முழுமையாக நாடினார். அதோடு, சசிகலா இருக்கும்வரை, அ.தி.மு.க-வில் தங்கள் செல்வாக்குச் செலுத்த முடியாது என்பதை உணர்ந்த பி.ஜே.பி, சசிகலாவை எந்த சமயத்திலும் கட்சிக்குள் விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது; இப்போதும் இருக்கிறது.
மிரட்டிய பி.ஜே.பி… மிரண்ட மன்னார்குடி!
2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி சசிகலா, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை பெற்றார். அவருக்கு சாலையில் திரண்டு நின்று அ.தி.மு.க தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். ஆனால், வெளியில் வந்த சசிகலா, அ.தி.மு.க தொண்டர்கள் எதிர்பார்த்தபடி அதிரடியாக எந்தக் காரியத்திலும் இறங்கவில்லை. காரணம், அவர் சிறையில் இருந்து வெளிவருவதற்கு முன்பே, மத்திய அரசிடம் இருந்து அவருக்கு சில மிரட்டல் அறிகுறிகளைக் காட்டிவிட்டன. குறிப்பாக, மன்னார்குடி குடும்பத்தின் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்றால், வெளியில் சென்று எடப்பாடிக்கு எந்தக் குடைச்சலும் கொடுக்கக்கூடாது என்பதுதான். அதை மீறினால், மன்னார்குடி குடும்பத்தின் சொத்துக்களில் பெரும்பகுதி முடக்கப்படும் என்ற மிரட்டல்கள் சில நோட்டீஸ்கள், சில ரெய்டுகள் மூலம் சசிகலாவுக்குக் கொடுக்கப்பட்டது. அதில் மொத்த மன்னார்குடி குடும்பமும், கொஞ்சம் பின்வாங்கியதுடன், சசிகலாவையும் பின்வாங்க வைத்தது.
அதனால், வெளியில் வந்த சசிகலாவால் அதிரடியாக எதையும் செய்ய முடியவில்லை. ஆனால், சசிகலாவின் வருகையை தனக்குச் சாதகமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என துடித்த டி.டி.வி.தினகரன் சில அடிகளை எடுத்து வைத்தார். ஆனால், அதற்கும் அசைந்து கொடுக்காத சசிகலா, எந்த நேரத்திலும் அ.ம.மு.க-வுடன் தன்னை அடையாளப்படுத்துவதைத் தவிர்த்துவிட்டார். சட்டமன்றத் தேர்தல் நேரம் என்பதால், அப்போது அவசரப்பட்டு எதையாவது செய்து, தனக்கு பாதகமாக்கிவிடக்கூடாது என்ற யோசனையில் இருந்தார். அ.தி.மு.க தான் தனது கட்சி என்ற அடிப்படையில் அறிக்கைகள், வெளியிடுவதும் வழக்குப் போடுவதுமாக சில முன்னெடுப்புகளை எடுத்துப் பார்த்தார்.
உதவி கேட்ட எடப்பாடி… தூது வந்த வெங்கய்ய நாயுடு!
ஆனால், சசிகலாவின் இருப்பு, பழனிசாமி தரப்பை தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. தேர்தல் நேரத்தில் அவர் பிரசாரம் செய்ய வந்ததாலோ, தொண்டர்களுக்கு அறிக்கை மூலம் எதையாவது அறிவித்தாலோ அது தங்களுக்கு சிக்கலாகும் என்று அஞ்சிய எடப்பாடி பழனிசாமி தரப்பு பி.ஜே.பி-யின் உதவியை நாடியது. அதையடுத்து, டெல்லியில் இருந்து பி.ஜே.பி தரப்பில் சசிகலாவைச் சந்தித்தவர் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு. அப்போது சசிகலாவுடன் பேசிய வெங்கய்ய நாயுடு, ” தீவிர அரசியலில் இருந்த ஒய்வு பெற்றுவிட்டேன் என்று அறிக்கைவிட்டு நீங்கள் ஒதுங்க வேண்டும்” என சசிகலாவிடம் அறிவுறுத்தினார். அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், மத்திய அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கும் தொனியில் பேசினார். அப்போது அவரிடம் கண்கலங்கிய சசிகலாவிடம், ” அரசியலில் இதுபோன்ற இக்கட்டான காலகட்டம் வரும்; அதற்காக கலங்கக்கூடாது. இப்போது, ஒதுங்கிக் கொள்… மீண்டும் அ.தி.மு.க-வே ஆட்சி அமைத்தால், இந்த முடிவில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது. ஆனால், ஒருவேளை அ.தி.மு.க தோற்றால், அதன்பிறகு அந்தக் கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் நீங்கள் இறங்கலாம். அதற்கு எங்கள் தரப்பில் இருந்து(பி.ஜே.பி) எந்தத் தொந்தரவும் வராது. அதற்கு நான் பொறுப்பு” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
தேர்தல் முடிவுகள் வந்து, தி.மு.க ஆட்சி அமைத்தாலும், அ.தி.மு.க மோசமாகத் தோற்கவில்லை; மேலும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களான கொங்கு எம்.எல்.ஏ-க்களே பெருமளவில் வெற்றி பெற்றுள்ளனர். அதனால், முன்பைவிட அந்தக் கட்சிக்குள் இப்போது எடப்பாடி பழனிச்சாமியின் கை வலுவாக ஓங்கி உள்ளது. தற்போது எதிர் கட்சி சட்டமன்றத் தலைவர் பதவியையும் அவரே கைப்பற்றி உள்ளார். அதனால், இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுப்பது என்பது தெரியாமல் இருக்கிறார். அதே நேரத்தில், எதிர்கட்சி சட்டமன்றத் தலைவர் பதவியைப் பெறுவதில், எடப்பாடிக்கும், பன்னீர் செல்வத்துக்கும் ஏற்பட்ட மோதலையும், கவனித்துக் கொண்டிருக்கிறார்.
சசிகலாவின் அரசியல்… மோடியின் கைகளில்…
கொரோனா பாதிப்பு சசிகலாவுக்கு இல்லையென்றாலும், அவரது உடல்நிலையில் சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் சசிகலா, ஓ.பி.எஸ் தரப்பின் நடவடிக்கை, தேர்தலில் சீட் கிடைக்காத கட்சியின் முன்னணி நிர்வாகியினர், இரண்டாம் கட்டத் லைவர்களின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தோடு சிறையில் இருந்து வந்த சசிகலாவை முற்றிலும் முடக்கியது பி.ஜே.பிதான். ஆனால், இப்போது சட்டமன்றத் தேர்தல் முடிந்துவிட்டாலும், எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்த்த அளவில் தோற்கவில்லை. அதோடு, மத்தியில் இருக்கும் பி.ஜே.பி-யோடு, எடப்பாடி பழனிச்சாமியின் இணக்கமும் இன்னும் நீடிக்கிறது. அதோடு, சசிகலாவின் உடல்நிலையிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனால், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, காலம் கனியும் என்று சசிகலா எதிர்பார்த்தது இப்போதும் நடக்கவில்லை; இனி எடப்பாடி-பன்னீருக்கு இடையில் பிரச்சினை எழுந்து, அதில் பி.ஜே.பி மூக்கை நுழைக்காமல் இருந்தால், குறிப்பாக பிரதமர் மோடி தலையிடாமல் இருந்தால் மட்டும்தான் சசிகலாவுக்கு அரசியல் எதிர்காலம்! அல்லது, அவரின் அரசியல் துறவறமே தொடரும்!
Also Read – `கல்விக் காவலர்… காந்தி சீடர்’ – துளசி வாண்டையார் மறைவால் கலங்கும் டெல்டா மக்கள்!