சமூக நீதிக்கு பாடுபடுவதாகக் காட்டும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது தேசதுரோகம் என்று கூறி நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது. என்ன நடந்தது?
Rolls Royce – Ghost car
நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து சொகுசு காரானா ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரைக் கடந்த 2012ம் ஆண்டு இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரியாக (Entry Tax) காரின் விலையில் 20% வரியாகக் கட்ட வேண்டும். நுழைவு வரி கட்டாததால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இந்த காரை பதிவு செய்யவில்லை. இதனால், காருக்கு வரி செலுத்தக் கூறி வணிக வரித் துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வரியை செலுத்துவதிலிருந்து விலக்கு கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. காரை பதிவு செய்யாத நிலையில், அதனைப் பயன்படுத்த முடியவில்லை எனவும் விஜய், தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்திருக்கிறார். ஜூலை 8-ம் தேதியிட்ட தீர்ப்பின் நகல் இப்போது வெளியாகியிருக்கிறது.
விஜய்க்கு கண்டிப்பு
மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பின்பற்றும் விஜய் போன்ற நடிகர்களை, ரசிகர்கள் நிஜ ஹீரோக்களாகவே பார்க்கிறார்கள். நடிகர்களே ஆட்சியாளர்களாக மாறக்கூடிய தமிழகம் போன்ற மாநிலங்களில் நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. வரி ஏய்ப்பு என்பது தேசத்துக்கு எதிரான குற்றமாகப் பாவிக்கப்பட வேண்டிய நிலையில், சட்டவிரோதமான அதை அனுமதிக்க முடியாது.
சமூக நீதிக்காகப் பாடுபடுவதாகக் காட்டிக்கொள்ளும் நடிகர்கள், சமூகத்தில் நடக்கும் ஊழலுக்கு எதிராக படங்களை எடுக்கிறார்கள். ஆனால், வரி ஏய்ப்பு செய்யும் வகையிலான அவர்களின் நடவடிக்கைகள் இதற்கு முற்றிலும் மாறானதாக இருக்கின்றன. சாதாரண மனிதர்கள் வரி செலுத்தி, நல்ல குடிமகன்களாக இருக்க ஊக்குவிக்கப்படும் நிலையில், பணக்காரர்கள் வரி செலுத்தாமல் இருக்கிறார்கள். இதுபோன்ற நிலை நீடித்தால் அரசியலமைப்புரீதியாக நமது இலக்குகளை எட்ட நீண்ட தூரம் பயணிக்க வேண்டி வரும். நுழைவு வரி கட்டுவதில் இருந்து விலக்கு வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை எந்தவகையிலும் ஏற்க முடியாது. டிக்கெட்டுக்குப் பணம் கொடுத்து படத்தைப் பார்க்கும் லட்சோப லட்சம் ரசிகர்களின் உணர்வுகளுக்கு மனுதாரர் மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் அளிக்கும் பணத்தில் இருந்துதான் ஆடம்பர சொகுசு காரைத் தனது சொந்த தேவைக்காக மனுதாரரால் வாங்க முடிந்தது என்று நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அபராதத் தொகையை இரண்டு வார காலத்துக்குள் தமிழ்நாடு முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதேபோல், காருக்கான நுழைவு வரி இதுவரை செலுத்தப்படாமல் இருப்பின், அதையும் இரண்டு வார காலத்துக்குள் செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் விலை – வரி எவ்வளவு?
ஆடம்பர சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸின் டாப் எண்ட் மாடல்களில் முக்கியமானது Ghost மாடல். இதன் புதிய வெர்ஷன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாக இருக்கிறது. அதன் விலை ரூ.6.95 கோடி – ரூ.7 கோடியாக பொசிஷன் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்தக் கணக்குப் படி பார்த்தால் காரின் விலையில் 20% வரியாக செலுத்த வேண்டும் என்பதால், நுழைவு வரியாக மட்டும் தோராயமாக ரூ.1.40 கோடியை விஜய் செலுத்த வேண்டியதிருக்கும்.
Also Read – அதிசயப்பிறவி டு அண்ணாத்த… சோ தொடங்கியதை முடித்து வைத்த ரஜினி!