அசைவ உணவுப் பிரியர்கள் அதிகமாக விரும்பும் உணவு வகைகளில் மீன்களும் ஒன்று. குறிப்பாக ஆசிய மக்கள் அதிக அளவில் மீன்களை விரும்பி உண்கின்றனர். ஆசிய நாடுகளை மட்டும் எடுத்துக்கொண்டால் சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாட்டு மக்கள் அதிகளவில் மீன்களை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். அப்படி அவர்கள் மிகவும் விரும்பி உண்ணும் மீன் வகைகளில் ஒன்றுதான், ஈல் மீன்கள். ஜப்பானிய நபர் ஒருவரிடம் நீங்கள் இந்த பூமியில் கடைசியாக சாப்பிட விரும்பும் உணவு எது என்று கேட்டால், சற்றும் யோசிக்காமல் அவர் தேர்வு செய்யும் உணவு `ஈல்’ மீன்கள்தான். அவ்வளவு அதிகமாக அவர்கள் இந்த மீன்களின் சுவையை நேசிக்கிறார்கள்.
நமது ஊர்களில் விலாங்கு என்று அழைக்கப்படும் மீன்தான் ஜப்பான் மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகளில் ஈல் அல்லது யுனாகி (unagi) என்று அழைக்கப்படுகிறது. இந்த மீன் வகை தங்கத்தை விட விலை அதிகம். கிலோ ஒன்றுக்கு இந்த ஈல் மீன்கள் 35,000 டாலர் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஈல் மீனை சமைப்பது மிகவும் சவாலானது. இதனால், சமையல்காரர்கள் பல ஆண்டுகளாக ஈல் மீனை சமைப்பது தொடர்பாக பயிற்சி பெறுகின்றனர். மீன்களின் தேவை அதிகளவில் இருந்து வருவதால் இந்த மீன்களின் அழிவும் அதிகளவில் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அதிகளவில் இருந்தது ஆகியவை காரணமாக கண்ணாடி ஈல்களின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. ஜப்பானியர்கள் பெரும்பாலும் இந்த ஈல் மீன்களை தற்போது தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவில் இருந்து வாங்கி வருகின்றனர். பின்னர், அவற்றை உள்நாட்டு சந்தைகளில் விற்பனை செய்வதற்கு முன்பு வீட்டிலேயே வளர்க்கின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு யுனாகியின் விலை உயர்ந்துள்ளது. உயர்ந்த உணவகங்களில் இந்த ஈல் மீன்களின் இரண்டு துண்டுகள் 4000 யென் முதல் 5000 யென் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
எளிமையாக இந்த ஈல் மீன்களைப் பற்றிக் கூறினால், அரிய ஆடம்பரமான பாரம்பரியமிக்க உணவு இது. ஜப்பானியர்கள் அதிகம் இந்த ஈல் மீன்களை விரும்புவதால் எவ்வளவு பணம் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். அதிகளவில் ஈல் மீன்களை பிடிப்பதால் 1980-ம் ஆண்டுகளுக்குப் பிறகு மீன்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. இது விலை அதிகரிப்பு மற்றும் யுனாகி வளர்ப்பு ஆகிய இரண்டுக்கும் வழி வகுத்தது. ஈல் மீன்கள் பெரும்பாலும் நன்னீரில் வாழக்கூடியவை. இவைகள் கடலில் பிறந்து ஆறுகளுக்குக் குடிபெயர்ந்து வாழ்கின்றன. பின்னர், இவை இனப்பெருக்கத்துக்காக மீண்டும் கடலுக்குச் செல்கின்றன. இதனால், இவற்றை பிடிப்பதில் இருந்து வளர்த்தெடுப்பது வரை மிகவும் சிரமப்படுவார்கள்.
அமெரிக்காவில் இனப்பெருக்கமாகி சீனாவில் வளர்ந்த ஈல்கள்தான் 80 சதவிகிதம் ஜப்பானில் இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. ஜப்பான் பண்ணைகளிலும் ஈல்கள் வளர்க்கப்படுகின்றன. அவை இன்னும் மிக விலை உயர்ந்தவை. விற்பனையாளர்களால் வளர்க்கப்படாமல் தானாக வளர்ந்த ஈல்கள்தான் இருப்பதிலேயே அதிக விலை கொண்டவை. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்த மீன்கள் அதிகளவில் ஆசிய நாடுகளுக்கு கடத்தப்பட்டு வருவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அளவில் சிறியதாகவும் கண்ணாடி போன்றும் இருக்கும் இந்த மீன்கள் சூட்கேஸ்களில் வைத்து எளிதாக கடத்தப்படுன்றன. ஒவ்வொரு வருடமும் சுமார் 350 மில்லியன் ஈல்கள் கடத்தப்பட்டு வருகின்றன.
ஒரு சூட்கேஸில் சுமார் 1 லட்சம் ஈல்கள் வெற்றிகரமாக கடத்தப்பட்டால் ஓரளவு வளர்ந்த பின்னர் இதன் விலை சுமார் 8 கோடி இருக்கும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதிகளவில் லாபம் கொடுப்பதால் இந்த மீன்களின் கடத்தல் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. கோடை காலங்களில் மக்கள் இந்த ஈல் மீன்களை அதிகளவில் வாங்கி உண்கின்றனர். விலை மட்டும்தான் மக்களை இந்த மீன்களை வாங்க விடாமல் கட்டுப்படுத்துகிறது. கோடைகாலங்களில் ஈல் மீன்கள் மற்றும் சூடான சோறு சாப்பிடுவது எந்த வகையில் உதவி செய்யும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால், உண்மையான காரணமாக புராணங்களும் பண்டைய தத்துவங்களும் கூறப்படுகின்றன.
ஜீலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் வெப்பத்துக்கு யுனாகியை விட சிறந்த உணவு வேறு இல்லை என ஜப்பானிய மக்கள் நம்புகிறார்கள். ஈல் மீனை உண்பதால் ஸ்டாமினா அதிகரிக்கும், பசி அதிகரிக்கும், பலம் அதிகரிக்கும் என்று மக்கள் திடமாக நம்புகிறார்கள். பொதுவாக கூறப்படும் இந்த மூன்று காரணங்களும் அறிவியலின் அடிப்படையாக இருக்கலாம் என்றாலும் இதனை சாப்பிடுவதற்கான முக்கிய காரணங்கள் இவைதான். இதைத் தவிர்த்து அதன் சுவையும் மிகச் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு கோடையிலும் ஒரு நாள் யுனாகி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆண்டுதோறும் மாறுபடும்.
எடோ காலகட்டமான 1600 முதல் 1868-க்குள் இந்த உணவு முறை தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் மலிவான உணவுகளாக் கிடைத்த சுஷி, சோபா மற்றும் யுனாகி உணவுகள் இன்று உயர்ந்த வகை உணவுகளாகக் கருதப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் இந்த வகை மீன்கள் வளர்ப்பு மற்றும் விலை தொடர்பான பிரச்னைகள் அதிகமாக இருப்பதால் பல யுனாகி உணவகங்கள் மூடப்பட்டு வருவதாகவும் சொல்கிறார்கள். எனினும், பிரபலமான சில உணவகங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. அவற்றில் சில உணவகங்களில் யுனாகி மீன்கள் அடங்கிய மதிய உணவு காம்போக்கள் 2000 யென்னுக்கும் குறைவாக கிடைத்து வருகின்றன. எவ்வளவு உணவுகள் வந்து சென்றாலும் ஜப்பானிய மக்களின் ஆல் டைம் ஃபேவரைட் சோறு, சூப் மற்றும் யுனாகி காம்போ தான்!
Also Read : பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி… பெற்றோர்கள் செய்ய வேண்டியதென்ன?