பயணங்கள் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். பஸ், ரயில் மற்றும் விமானம் என எதில் பயணித்தாலும் ஜன்னல் சீட் கிடைத்தால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சந்தோஷம் கிடைக்கும். சிலருக்கு, ஜன்னல் சீட் கிடைத்தால்தான் பயணம் முழுமையடைந்த திருப்தியே கிடைக்கும். ரயில் பயணங்களின்போது பெட்டிகள் முழுவதுமே கண்ணாடியால் இருந்து அதில் பயணித்தால் எப்படி இருக்கும்? வெளிநாடுகளில் இந்த மாதிரியான ரயில் பெட்டிகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் இந்த மாதிரியான வசதிகள் தற்போது வந்துள்ளன. கொரோனா லாக்டௌனால பயணிக்க முடியாமல் பலரும் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. இப்போது, நிலைமைகள் கொஞ்சம் சரியாகி வருவதால் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் தங்கள் விருப்பமான இடங்களுக்குப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படியான சூழலில் கண்ணாடி பெட்டிகள் கொண்ட ரயில் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.
சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுற்றுலாவுக்கென பிரத்யேகமாக ரயில்களும் ரயில்வே துறையால் இயக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் மலைப் பிரதேசங்களில் மற்றும் எழில் மிகுந்த பகுதிகளில் ரயில்களை இயக்கும்போது பயணிகள் பார்த்து ரசிப்பதற்காக ரயில்களை மெதுவாக இயக்கியும் வருகின்றன. இந்தநிலையில், புதிதாக கொண்டு வந்துள்ள கண்ணாடிப் பெட்டிகளுக்கு `விஸ்டாடோம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு ரயில்வே துறையானது இந்த பெட்டிகளை வடிவமைத்துள்ளது. இந்தப் பெட்டிகளின் இரு பக்கங்கள் மற்றும் கூரைகளில் கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக பயணிகள் இயற்கையான காட்சிகளை இன்னும் தெளிவாக ரசிக்க முடியும். பயணிகளின் வசதிக்கேற்ப இருக்கைகள் 180 டிகிரியிலும் சுழலும் தன்மை கொண்டவை. அவர்கள் உணவருந்துவதற்கு வசதியாக சிறிட எஃகு மேசைகளும் அதில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டியில் குளிரூட்டப்பட்ட வசதிகளும் உள்ளன.
`விஸ்டாடோம்’ பெட்டிகளானது பெங்களூரு முதல் மங்களூரு வரை பகல் நேரத்தில் செல்லும் ரயிலில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு இடங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் மேற்குதொடர்ச்சி மலை உள்ளதால் அதன் அழகை ரசிகர்களால் ரசிக்க முடியும். பயணிகளின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவைத்தவிர செல்போனை சார்ஜ் செய்யும் வசதிகள், ஜிபிஎஸ் கருவி, தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பதற்கான வசதிகள், எல்.இ.டி திரை ஆகிய வசதிகளும் இந்தப் பெட்டியில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலானது ஜூலை மாதம் 11-ம் தேதி முதல் தனது சேவையைத் தொடங்கியுள்ளது. சுற்றுலா வழித்தடங்களின் வழியாக செல்லும் ரயில்களில் இதுபோன்ற கண்ணாடிப் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பெட்டியில் பயணிக்க கட்டணமாக முன்பதிவு, ஜிஎஸ்டி மற்றும் பிற கட்டணங்கள் உட்பட ரூபாய் 1,670 செலவாகும். ஒவ்வொரு விஸ்டாடோம் பெட்டியிலும் சுமார் 44 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு ரயில்வேயில் விஸ்டாடோம் பெட்டிகளில் பயணிப்பதற்காக கடந்த வாரம் முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நாள்களிலேயே இந்தப் பெட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. முதல் பயணத்திலேயே அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. ரயில்வேயின் இந்தப் புதிய முயற்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் இந்த விஸ்டாடோம் பெட்டியைக் குறித்து மக்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த ரயிலை தட்சின கன்னடா தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நளின்குமார் கட்டீல் பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Also Read : வைரலாகும் ஜஸ்டிஸ் ஃபார் கேரளா கேர்ள்ஸ் – பின்னணி என்ன?