1992-2004 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாகப் புகழ்பெற்று விளங்கியவர் நடிகை சௌந்தர்யா. அவரது சினிமா பயணம் எந்தப் படத்தில் தொடங்கியது… தனிப்பட்ட வாழ்க்கையில் ஏழைக்குழந்தைகளுக்காக அவர் செய்துவந்த உதவி இன்றும் வேறொரு வகையில் தொடர்ந்து வருகிறது. ஹெலிகாப்டர் விபத்தின்போது என்ன நடந்ததுனு நடிகை சௌந்தர்யாவோட சினிமா பயணம், பெர்சனல் லைஃப் பத்திதான் இந்த வீடியோவில் நாம பார்க்கப்போறோம்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இருக்கும் கஞ்சிகுண்டே எனும் சிறிய கிராமத்தில் 1972-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி பிறந்தார் கே.எஸ்.சௌம்யா என்ற சௌந்தர்யா. தந்தை கே.எஸ்.சத்தியநாராயணா கன்னட திரையுலகில் கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர். பெங்களூரில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த சௌந்தர்யா, முதல் ஆண்டு படிப்போடு வெளியேறினார். சினிமா பிரபலத்தின் வீட்டில் பிறந்ததாலேயே இவர் முன்னணி நடிகை என்கிற உயரத்துக்கு வந்துவிடவில்லை. தனது தேர்ந்த நடிப்பால் அந்த இடத்துக்கு வந்தவர். தமிழில் ஆர்.வி.உதயகுமார் இயக்கிய பொன்னுமணி படம் மூலம் கார்த்திக்குக்கு ஜோடியாக அறிமுகமானார். அந்தப் படத்தில் யாருப்பா இதுனு கவனிக்க வைக்கிற நடிப்பைக் கொடுத்திருந்த சௌந்தர்யா, அடுத்தடுத்து ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா, கமலுடன் காதலா காதலா என்று உயரம் தொட்டார். அத்துடன் விஜயகாந்த், விக்ரம், அர்ஜூன், பார்த்திபன் என அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த அத்தனை பேருடனும் நடித்தவர். தமிழைப் போலவே தெலுங்கிலும் இவரது சினிமா கிராஃப் உச்சத்தில்தான் இருந்தது. சிரஞ்சீவி தொடங்கி வெங்கடேஷ் வரை பல ஹீரோக்களின் படத்திலும் சௌந்தர்யா தவிர்க்க முடியாத இடத்தை அப்போது பிடித்திருந்தார்.
தமிழில் பிரபலமான டிவி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாக 2004 ஆண்டு காலகட்டத்தில் சௌந்தர்யா தயாராக இருந்தார். முன்னணி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக இருந்த அந்த சீரியலில் நடிக்கவும் ஒப்புக்கொண்டு, அதற்கான வேலைகளும் தொடங்கப்பட்டன. ஆனால், பா.ஜ.கவுக்காக இரண்டு மாதகாலம் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டி இருந்ததால் சௌந்தர்யாவால், அந்த சீரியலில் நடிக்க முடியவில்லை. இதையடுத்து, இன்னொரு ஹீரோயின் நடிக்க அந்த சீரியல் ஒளிபரப்பாகி டி.ஆர்.பி-யில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அது எந்த சீரியல்னு தெரிஞ்சுக்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
Also Read -கர்ஜனை மொழி… கனிமொழி – 5 தரமான சம்பவங்கள்!
1992-ம் ஆண்டு தொடங்கி 2004-ம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பலமொழிகளிலும் நடித்த அவர், டோலிவுட்டில் சாவித்திரிக்குப் பிறகு பிரபலமான நடிகையாக இருந்தார். அதிலும் குறிப்பாக இவர் வெங்கடேஷூடன் ஜோடி சேர்ந்து நடித்த படங்களில், அவர்களின் ஜோடிப் பொருத்தம் என்.டி.ஆர் – சாவித்திரிக்கு இணையாகக் கொண்டாடப்பட்டது. தனிப்பட்ட வாழ்வில் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு எத்தனையோ உதவிகள் செய்துவந்தார். பெங்களூரில் இதற்காகவே 3 பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வந்தார். சௌந்தர்யா உயிரிழந்த பின்னர், அவரது தாயார் மஞ்சுளா `அமர்சௌந்தர்யா வித்யாலயா’ என்ற பெயரில் பள்ளி, கல்லூரிகளையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
2003-ம் ஆண்டு தாய்வழி உறவினரான ஜி.எஸ்.ரகு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தமிழில் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தை கன்னடத்தில் ஆப்தமித்ரா என்கிற பெயரில் பி.வாசு எடுத்திருந்தார். அந்தப் படம் 2004-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படத்தில் நடித்து முடித்ததும், சினிமா கரியரை முடித்துக் கொள்ள நினைத்திருக்கிறார். அந்த சமயத்தில் தனது சகோதரரின் வற்புறுத்தலால் பா.ஜ.கவில் இணைந்திருக்கிறார். அப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் தற்போதைய தெலங்கானா கரீம்நகரில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக, தனது சகோதரரும் எழுத்தாளருமான அமர்நாத், பா.ஜ.க-வைச் சேர்ந்த ரமேஷ் கடம் ஆகியோருடன் தனி விமானத்தில் கரீம் நகர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. பெங்களூரை அடுத்த ஜக்கூர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட செஸ்னா 180 வகை விமானத்தில் அவர்கள் புறப்பட்டன. அக்னி ஏரோ ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தை ஜோய் பிலிப்ஸ் என்ற விமானி ஓட்டினார். விமானம் புறப்பட்டு 100 அடி உயரம் மேலெழுந்தநிலையில், மேற்கு நோக்கி சென்று அருகில் இருந்த வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. விழுந்த வேகத்தில் தீப்பிடித்து எரிந்த விமானத்தில் இருந்த நான்கு பேரும் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகியிருந்தனர். 2004-ம் ஆண்டு ஏப்ரல் 11 காலை 11.05 மணிக்குப் புறப்பட்ட விமானம் ஒரு சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. அவரது திடீர் மரணம் தென்னிந்திய திரையுலகையே உலுக்கியது. அவர் உயிரிழக்கும்போது இரண்டு மாதம் கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது சோகத்தின் உச்சம்.
தமிழின் முன்னணி டிவி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய ஹிட்டடித்த சீரியல்தான் கோலங்கள். தேவயானி நடித்த அந்த சீரியல்தன் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக 1,000 எபிசோடுகளைக் கடந்த சீரியல். அந்த சீரியல் மூலமாகத்தான் சின்னத்திரையில் அறிமுகமாக இருந்தார் சௌந்தர்யா. ஆனால், அது நடக்காமலேயே போனது.