சின்னத்திரையின் ஆச்சர்ய தொகுப்பாளினி `பெப்ஸி’ உமா!

ஒரு சேனலில் ஒரு ஆண்டு ஒரே நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தாலே பெரிய விஷயமாக இன்று பார்க்கப்படுகிறது. ஆனால், ஒரே சேனலில் ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து 18 ஆண்டுகள் தொகுத்து வழங்கிய பெருமை கொண்டவர் பெப்ஸி உமா. சன் டிவியில் பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை 18 ஆண்டுகள் வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கிய உமா, எப்படி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார்… அவரோட பயணம் எங்க இருந்து தொடங்குச்சு… ஏன் லைம் லைட்ல இருந்து விலகி இருக்காங்கனு அவங்களைப் பத்திதான் தெரிஞ்சுக்கப் போறோம்.

Pepsi Uma
Pepsi Uma

பெப்ஸி உமா பக்கா சென்னைப் பொண்ணு. 1974 ஆகஸ்ட் 18-தான் இவங்களோட பிறந்தநாள். இவங்களோட முழுப் பெயர் உமா மகேஸ்வரி. அப்பா லாயர், நடனக் கலைஞரான அம்மா ஓவியராகவும் இருந்தார். தன்னுடைய கல்லூரி காலத்தில், 17 வயதிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அனுபவம் கொண்டவர். தேர்ந்த பரதநாட்டியக் கலைஞரான பள்ளி, கல்லூரிகளில் பல போட்டிகளில் பரிசுகளைக் குவித்திருக்கிறார். தூர்தர்ஷன் நிகழ்ச்சி ஒன்றின் ஷூட்டிங் பார்க்கப்போன இவருக்கு இன்னொரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான வாருங்கள் வாழ்த்துவோம் நிகழ்ச்சி மூலம் தமிழ் டிவி ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்த நிகழ்ச்சி 100 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதன்பின்னர்தான் சன் டிவி `பெப்ஸி உங்கள் சாய்ஸ்’ என்கிற போன் – இன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது. அந்த நிகழ்ச்சி வாய்ப்புக் கிடைத்தபோது, உடை, பேசும் தொனினு எதுலயும் நீங்க தலையிடக் கூடாது என்கிற கண்டிஷனோடுதான் நிகழ்ச்சிக்குள் போயிருக்கிறார்.

பெப்ஸி உமா பிரபலமான டிவி செலிபிரட்டியா இருந்த சமயம் சூப்பர் ஸ்டார் ரஜினியோட ஒரு சூப்பர் ஹிட்டான படத்துல ஹீரோயினா நடிக்குற வாய்ப்பு வந்திருக்கு. ஆனா, அதை மென்மையா மறுத்துட்டாராம் உமா. அதேமாதிரி, அவங்களுக்குக் கோயில் கட்டுனப்ப, பா.ம.க நிறுவனர் ராமதாஸோட விமர்சனத்துக்கு பெப்ஸி உமா சொன்ன பதில் அவங்க மேல இருந்த மரியாதையைக் கூட்டுச்சு.. அது என்னனு தெரிஞ்சுக்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

Pepsi Uma
Pepsi Uma

பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தொடர்ச்சியாக ஒரே ஆங்கரை வைத்து 18 ஆண்டுகள் வரை ஒளிபரப்பான நிகழ்ச்சி என்கிற பெருமை கொண்டது. அந்த நிகழ்ச்சியில் உமா அணிந்து வரும் புடவைகள் அப்போது பெண்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். கட்-அவுட் வைத்துக் கொண்டாடப்படும் அளவுக்கு பெப்ஸி உமாவின் கிரேஸ் இருந்தது. தீனா படத்தில் அஜித்தும் அவரது தங்கையும் பெப்ஸி உமாவிடம் பேசுவதுபோல் இடம்பெற்ற காட்சி, இதற்கு இன்னொரு உதாரணம். இதுதவிர, கங்கை அமரனுடன் இணைந்து ஸ்டார் ஷோ என்கிற நிகழ்ச்சியைக் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் வரை தொகுத்து வழங்கினார். அதன்பின்னர், ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஆல்பம் நிகழ்ச்சியும் ஹிட் ஹிஸ்டரிதான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தவிர எண்ணற்ற விளம்பரங்களிலும் அப்போது உமா நடித்தார். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர், தனது கரியரீன் பீக்கில் இருந்தபோது அவரோடு நடிக்கும் விளம்பர வாய்ப்பு ஒன்று வந்தது. ஆனால், அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார். அந்த விளம்பரத்துக்காக அவர்கள் தேர்வு செய்திருந்த உடைதான் அதற்கு ஒரே காரணம் என்று கூலாகப் பதில் சொல்லியிருந்தார் உமா.

Pepsi Uma
Pepsi Uma

கணவர் சுகேஷை இவர் சந்தித்தபோது இவருக்கு வயது 17. அவருக்கு 18. பஞ்சாபைச் சேர்ந்த சுகேஷை ஒரு விளம்பர ஷூட்டிங்கில்தான் சந்தித்திருக்கிறார். காதலுக்கு வயதோ, மொழியோ தடை இல்லைல. மாடலான இவரது கணவருக்கும் பல டாப் ஃபிலிம் மேக்கர்களிடம் இருந்து பட வாய்ப்புகள் வந்ததாம். ஆனால், அதை அவர் மறுத்துவிட்டாராம். பணத்தால் மட்டுமே எல்லாத்தையும் வாங்கிட முடியாது. அதேதான் புகழுக்கும்... எந்த காலத்திலும் பணம் எனக்குப் பெரிய தேவையாக இருந்ததே இல்லை’ என்பது பெப்ஸி உமாவின் ஸ்டேட்மெண்ட். டிவி வாய்ப்புதான் தனக்கு மிகப்பெரிய வாழ்க்கையைக் கொடுத்தது என்பதை உறுதியாக நம்பும் உமா, அதன்பிறகு வந்த பல வாய்ப்புகளையும் அரட்டை அடிக்கும் ஷோக்களில் பங்குபெற விரும்பவில்லை என்று கூறி நிராகரித்துவிட்டார். இந்தி சினிமாவில் மிகப்பெரிய இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த சுபாஷ் காய், இவரை ஒருமுறை ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவில் வைத்து சந்தித்திருக்கிறார். ஷாருக்கானை வைத்து அவர் எடுக்கும் படத்தில் பெப்ஸி உமாவை நடிக்க வைக்க ஆசைப்பட்ட அவர்,உங்க வீட்டுக்கே வர்றேன். 20 நிமிஷம் டைம் கொடுங்க. உங்களை என் படத்தில் நடிக்க வைக்க சம்மதிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், மீட்டிங் முடிவில், படத்தில் நடிக்க மாட்டேன் என்பதை அவருக்குப் புரிய வைத்து அனுப்பியிருக்கிறார் உமா. கட்டுமானத் துறை சார்ந்த பணியில் உமாவும் அவரது கணவர் சுகேஷும் இப்போது இருக்கிறார்கள்.

Pepsi Uma
Pepsi Uma

பெப்ஸி உமா பிரபலமா இருந்த நேரத்தில் ரஜினி நடிச்ச முத்து படத்தில் ஹீரோயினா நடிக்க அவங்களை அணுகியிருக்கிறார்கள். ஆனால், சினிமாவில் நடிக்கும் என்னம் எனக்கு சுத்தமாக இல்லை. ஆசைப்படாத வேலையை எப்படி ரசிச்சு செய்ய முடியும்னு கேட்டு, அந்த வாய்ப்பை மென்மையா நிராகரிச்சுட்டாங்களா உமா. அதேமாதிரி, இவங்களுக்கு கோயில் கட்டுனதா செய்திகள் வெளியானப்ப டாக்டர் ராமதாஸ், பெப்ஸி உமா என்ன சாதிச்சுட்டாங்க... அவருக்குக் கோயில் கட்டுனா தமிழ்நாடே அழிஞ்சுபோயிடும்’ என்று விமர்சித்திருந்தார். இதுகுறித்து அப்போது,ராமதாஸ் அவர்கள் சொன்னது 100 சதவிகிதம் சரி. இந்த மாதிரியெல்லாம் செய்யாதீங்க. என்னுடைய செயலை மட்டும் பாராட்டினால் போதும். என் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்’ என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்.

Also Read – படிடா பரமா… #SouthIndiaVsNorthIndia ஓர் ஒப்பீடு!

பெப்ஸி உமாவோட உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியைப் பார்த்திருக்கீங்களா… போன் பண்ணி அவங்க நிகழ்ச்சியில் பேசுன அனுபவம் இருக்கா.. அதைப்பத்தியெல்லாம் கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top