நாமக்கல் ஏடிஎம் திருடன்

நாமக்கல் திருட்டு முயற்சி…. ஏடிஎம் இயந்திரத்துக்குள் சிக்கிய பீகார் இளைஞர்!

நாமக்கல் அருகே தனியார் ஏடிஎம்-மில் திருட முயற்சித்து அந்த இயந்திரத்துக்குள்ளேயே சிக்கிய பீகார் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த அவணியாபுரத்தில் தனியார் நிறுவனமான இண்டியா ஒன் -னுக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் இருக்கிறது. ஏடிஎம் இருந்த பகுதியில் மோகனூர் போலீஸார் நேற்று இரவு ரோந்து சென்றிருக்கிறார்கள். அப்போது ஏடிஎம் மையத்தில் இருந்து திடீரென சத்தம் கேட்டிருக்கிறது. அதைக் கேட்டு ஏடிஎம் மையத்தில் போலீஸார் சோதனையிட்டபோது, ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்திருக்கிறார்.

ஏடிஎம் இயந்திரத்துக்குள் பார்த்தபோது அங்கு இளைஞர் ஒருவர் அமர்ந்தபடி, பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியை உடைக்க முயற்சி செய்துகொண்டிருந்திருக்கிறார். விசாரித்ததில், அவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதன் உள்ளே புகுந்து திருட முயற்சித்தது தெரியவந்தது. ஏடிஎம் இயந்திரத்தைப் பின்பக்கமாக உடைத்த அவர், இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முயற்சித்தபோது போலீஸார் வந்ததால் சிக்கியிருக்கிறார்.

நாமக்கல் ஏடிஎம் கொள்ளை முயற்சி
நாமக்கல் ஏடிஎம் கொள்ளை முயற்சி

வீடியோ எடுப்பதற்காக அவரை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வெளியே வராமல் நிற்கும்படி போலீஸார் அதட்டியபடியே எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு நிமிடம் அளவுக்கு இயந்திரத்துக்குள் நின்றிருந்த அவர், `அதான் வீடியோ எடுத்துட்டீங்கள்ல’ என்று இந்தியில் சொன்னபடியே அதிலிருந்து வெளியே வருகிறார். அவரைக் கைது செய்த போலீஸார், விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த நபரின் பெயர் உபேந்திரா ராய் என்பதும் அவர் பீகார் மாநிலம் கிழக்கு சாம்தான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. நாமக்கல் மாவட்டம் பரளி அருகே இருக்கும் கோழி தீவன ஆலையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வரும் அவர், ஆள் நடமாட்டம் மிகவும் குறைவான இந்தப் பகுதியில் இருக்கும் ஏடிஎம்-மை நோட்டமிட்டு கொள்ளையடிக்கத் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். கொள்ளையடிக்க முயற்சி செய்தபோதே போலீஸார் வந்ததால், லட்சக்கணக்கான ரூபாய் பணம் தப்பியது.

Also Read – பாலியல் வன்கொடுமை; திருட்டு – வீடியோ, புகைப்படங்கள் மூலம் மிரட்டல்… ஓசூரில் சிக்கிய கொள்ளையன்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top