காந்தி கொலை வழக்கு… நாதுராம் கோட்சேவின் 92 பக்க வாக்குமூலம்!

மகாத்மா காந்தி கொலையாளியான நாதுராம் கோட்சே யார்… அவரைச் சுற்றி ஏன் இத்தனை மர்மங்கள்?

மகாத்மா காந்தி கொலை

டெல்லி பிர்லா மைதானத்தின் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, நாதுராம் விநாயக் கோட்சே 1948 ஜனவரி 30-ம் மாலை பாயிண்ட் பிளாங்க் ரேஞ்சில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையும் அதைத் தொடர்ந்து காந்தி முஸ்லீம்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்; இந்துக்களுக்குத் துரோகம் இழைத்தார் என்பதால் அவரைச் சுட்டுக் கொன்றதாக நீதிமன்றத்தில் 38 வயதான கோட்சே பின்னாட்களில் வாக்குமூலம் கொடுத்தார். விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்த நிலையில், உயர் நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்த நிலையில், 1949-ல் அவருக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவருடைய கூட்டாளி நாராயண் ஆப்தே என்பவரும் தூக்கிலிடப்பட்ட நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நாதுராம் கோட்சே

நாதுராம் கோட்சே, இந்து மகாசபா உறுப்பினராக இருந்தார். அந்த அமைப்பில் இணைவதற்கு முன்னர் அவர் பா.ஜ.க-வின் முன்னோடி அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். பா.ஜ.க ஆட்சியில் மறைமுகமாகப் பல்வேறு விஷயங்களில் அந்த அமைப்பின் தலையீடு இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றன. பல ஆண்டுகளாக கோட்சேவை அந்தக் கட்சி புறக்கணித்தே வந்திருக்கிறது. ஆனால், சமீபகாலமாக வலதுசாரி அமைப்புகள் கோட்சேவைக் கொண்டாடத் தொடங்கியிருக்கின்றன. காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ல் கோட்சேவின் பெயர் ட்விட்டரில் அகில இந்திய அளவில் டிரெண்டானது. பா.ஜ.க எம்.பி பிரக்யா தாக்குர் போன்றோர் கோட்சோவைப் புகழ்ந்து பேசி சர்ச்சைகளில் சிக்கினர். ஆனால், ஆர்.எஸ்.எஸ் தொடக்கம் முதலே ஒன்றைச் சொல்லிவருகிறது. காந்தி கொலை சம்பவத்துக்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே அவர், தங்களது இயக்கத்தை விட்டு வெளியேறிவிட்டதாகச் சொல்லி வருகிறது.

கோட்சேவின் 92 பக்க வாக்குமூலம்

காந்தி கொலையில் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட கோட்சேவுக்கு எதிராக வலுவான நேரடி சாட்சியங்கள் இருந்தன. கொலை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்ட நிலையிலும் சிறையில் இருந்த நாட்களில் அவரின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து நீதிமன்ற விசாரணையின்போதே கோட்சே குறிப்பிட்டார். தேசப்பிதா என்று போற்றப்பட்ட காந்தியைக் கொலை செய்தபிறகும் சிறையில் தான் நடத்தப்பட்ட விதம் குறித்து அவர் ஆச்சர்யம் தெரிவித்தார். அத்தோடு, கையால் எழுதிய 92 பக்க வாக்குமூலத்தை முழுவதுமாக சுமார் ஐந்து மணி நேரத்துக்கு மேலாக அவர் வாசிக்க நீதிபதிகள் அனுமதித்தனர். காந்தி மீது பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்ததாக வரலாற்று ஆசிரியர்கள் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.

மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் கோட்சே உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். வழக்கு விசாரணையின்போது கோட்சே, அவரது வாதங்களை முன்வைக்க அனுமதிக்கப்பட்டது. இரண்டாவது முறையாகத் தனது வாதங்களை சுமார் 9 மணி நேரத்துக்கும் அதிகமாக அவர் முன்வைத்தார். காந்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து அவர் வாதாடியதைத் தடுக்க வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவரான கோஸ்லே, முயன்றார். ஆனாலும், மற்ற இரு நீதிபதிகள் அனுமதித்ததால், அவர் தனது வாதங்களை முன்வைத்து வாதாடினார். காந்தி கொலையில் எந்தவொரு சதித்திட்டமும் இல்லை என்றும் சாவர்க்கருக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் அவர் வாதாடினார். இந்த வழக்கில் முதலில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சாவர்க்கர், அனைத்து குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார்.

பள்ளிக் கல்வியை இடையில் நிறுத்திய கோட்சேவின் தந்தை தபால் நிலையத்தில் பணியாற்றியவர். பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத நிலையில், தையல்காரராக அவர் பணியைத் தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றிய அவர், பின்னாட்களில் அதிலிருந்து விலகி இந்து மகாசபாவில் இணைந்ததாகச் சொல்லியிருப்பார். இதே கருத்தையே ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சொல்லி வருகிறது. ஆனால், கோட்சே, தனது வாக்குமூலத்திலோ அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்போ எந்தவொரு இடத்திலும் எப்போது அவர் அந்த அமைப்பில் இருந்து விலகினார் என்பது குறித்த தகவலையும் குறிப்பிடவில்லை. சமீபத்தில் வெளியாகியிருக்கும் Gandhi’s Assassin புத்தகத்தின் ஆசிரியர் திரேந்திர ஜா, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்து அவர் வெளியேறவில்லை என்கிறார். அந்த அமைப்பில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்கிறார்கள். இந்த விவகாரம் நீண்டகாலமாகவே விவாதிக்கப்பட்டு வருவதாகும்.

Also Read – மலையாள சேனல் Media One-க்குத் தடை விதித்த மத்திய அரசு; நீதிமன்றத்தில் முறையீடு – என்ன நடந்தது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top