மதுரை போலீஸ் பழனியாண்டி

`ரோடுனா டிராஃபிக் இருக்கும்; குடும்பம்னா சண்டை இருக்கும்’ – பெப் டாக்கில் அசத்தும் மதுரை டிராஃபிக் போலீஸ்!

மதுரை அப்போலோ மருத்துவமனை சிக்னல் அருகே பணியில் இருக்கும் போக்குவரத்துக் காவல் துணை ஆய்வாளர் பழனியாண்டி வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் பற்றிய அறிவுறுத்தல்களோடு வாழ்வியல் தத்துவங்களையும் ஒலிபெருக்கியில் கூறி அசரவைக்கிறார்.

மதுரை டிராஃபிக் போலீஸ்

மதுரை திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் பழனியாண்டி. 54 வயதான இவர் போக்குவரத்துக் காவல் துறையில் ஏட்டாக இருந்து இப்போது உதவிக் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். சிறுவயது முதலே புத்தகங்கள் மீது தீராக் காதல் கொண்டிருந்த பழனியாண்டி, போலீஸான பின்னரும் புத்தகங்களை நேசித்து வந்திருக்கிறார். இவர் டிராஃபிக் சிக்னல்களை ஒழுங்குபடுத்த மைக் பிடிக்கத் தொடங்கினாலே வாகன ஓட்டிகள் முகத்தில் புன்னகை தவழத் தொடங்குகிறது.

மைக் பிடிக்கும் பழனியாண்டி, வாகன ஓட்டிகளை சாலை விதிகளை முறையாகக் கடைபிடிக்குமாறு அறிவுறுத்துவதோடு வாழ்வியல் தத்துவங்களையும் கூறி அசத்துகிறார். பரபரப்பாக வாகனங்களை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் இவரது பெப் டாக்கைக் கேட்டதும் ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தத் தவறுவதில்லை. சிலர் சிக்னலைத் தாண்டி வந்ததும், வண்டியை நிறுத்தி நன்றி சொல்லிவிட்டுச் செல்வதுண்டு. அதிலும் சிலர் இவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்வுகளும் உண்டு.

மதுரை டிராஃபிக் போலீஸ் பழனியாண்டி
மதுரை டிராஃபிக் போலீஸ் பழனியாண்டி

ரோடுனா டிராஃபிக் இருக்கும்… மனிதன்னா பிரச்னை இருக்கும். குடும்பம்னா பிரச்னை இருக்கத்தான் செய்யும். எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிட்டுதான் வாழணும்’,ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சி போனாத்தான் வாழ்க்கை இன்பமா இருக்கும்… எல்லாரும் சந்தோஷமா ஆனந்தமா இருக்கணும்… எதுக்காகவும் கவலைப்படக்கூடாது..’, `எல்லாரும் நல்லாருக்கணும்… குடும்பம் குட்டிகளோட நல்ல வாழணும்… அதனால ரோட்டுல போகும்போது கவனமா போகணும்… தலைக்கவசம் கண்டிப்பா அணிஞ்சுக்கங்க… இதெல்லாம் ஒங்க நல்லதுக்குதான் நாங்க சொல்றோம்..’ என்று வாஞ்சையோடு இவர் பேசும் இவர் குரல் வாகன ஓட்டிகளுக்குப் புத்துணர்வு கொடுக்கிறது.

“மனித வாழ்வு என்பது எவ்வளவு மகத்துவமானது என்பது பற்றி மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்று நான் நினைத்தேன். ஒவ்வொருவரும் வாழ்வில் அடுத்து என்ன என்பது பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர, நமக்கு அடுத்து யார் இருக்கிறார்கள் என்பது பற்றியல்ல’’ என்கிறார் பழனியாண்டி. மன அழுத்தமே பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் என்று நினைக்கும் இவர், மக்களைத் தனது பேச்சால் புத்துணர்வூட்டுகிறார்.

மதிச்சியம் காவல்நிலையத்தில் போக்குவரத்துக் காவல் துணை ஆய்வாளராகப் பணியாற்றி வரும் இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் அபிநயா ஐ.ஏ.எஸ் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இரண்டாவது மகள் அஸ்வதா, பிளஸ் டூவில் 95% மதிப்பெண் எடுத்து, சட்டம் பயிலத் திட்டமிட்டிருக்கிறார். வாகன ஓட்டிகளின் ஸ்ட்ரெஸ் பஸ்ட்ராக இருக்கும் இவருக்கு அப்பகுதியில் ரசிகர்களும் அதிகம் என்கிறார்கள்.

Also Read – நீதிபதி கிருபாகரன் `மக்கள் நீதிபதி’ என போற்றப்படுவது ஏன்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top